எஸ்தர் 8:13-17

எஸ்தர் 8:13-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த கட்டளையின் ஒரு பிரதி ஒவ்வொரு மாகாணத்திலும் சட்டமாக வழங்கப்படும்படி திட்டமிடப்பட்டிருந்தது. அத்துடன் அந்த நாளில் தங்களுடைய பகைவர்களுக்கும் பதில் செய்ய யூதர்கள் ஆயத்தமாயிருக்கும்படி எல்லா நாட்டையும் சேர்ந்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அரச குதிரைகளின்மேல் போய்க்கொண்டிருந்த தூதுவர்கள் அரசனின் கட்டளையினால் தூண்டப்பட்டவர்களாய் விரைந்து சென்றார்கள். சூசான் கோட்டைப் பட்டணத்திலும் இந்தக் கட்டளை வழங்கப்பட்டது. மொர்தெகாய் நீலமும், வெள்ளையுமான அரச உடைகளை உடுத்திக்கொண்டு, பெரிய தங்க மகுடத்தையும், ஊதாநிற மென்பட்டு உடையையும் அணிந்து, அரசனின் முன்னிலையிலிருந்து புறப்பட்டான். சூசான் நகரம் மகிழ்ச்சியின் விழாக்கோலம் கொண்டிருந்தது. ஏனெனில், யூதர்களுக்கு அது மகிழ்ச்சியும், சந்தோஷமும், குதூகலமும், மதிப்பும் நிறைந்த ஒரு காலமாயிருந்தது. அரசனுடைய கட்டளைப்போன ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு பட்டணத்திலும் உள்ள யூதர்கள் மத்தியில் சந்தோஷமும், குதூகலமும் காணப்பட்டன. அவர்கள் விருந்துண்டு அதைக் கொண்டாடினார்கள். யூதர்களைப் பற்றிய பயம் பிற நாட்டு மக்களுக்கு இருந்ததால், அவர்களில் அநேகர் யூதரானார்கள்.

எஸ்தர் 8:13-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யூதர்கள் தங்களுடைய பகைவர்களைப் பழிவாங்கும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று அந்தந்த நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரபலப்படுத்தப்பட்டது. அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின தபால்காரர்கள் ராஜாவின் வார்த்தையால் ஏவப்பட்டு, விரைவாக புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரண்மனையில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜஉடையும், பெரிய பொற்கிரீடமும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாக ராஜாவிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது. இவ்விதமாக யூதர்களுக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டானது. ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதர்களுக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாக இருந்தது; யூதர்களுக்குப் பயப்படுகிற பயம் தேசத்து மக்களைப் பிடித்ததால், அவர்களில் அநேகர் யூத மார்க்கத்தில் இணைந்தார்கள்.

எஸ்தர் 8:13-17 பரிசுத்த பைபிள் (TAERV)

ராஜாவின் கட்டளைப் பிரதி ஒன்று அனுப்பப்பட்டு அது சட்டமாயிற்று. எல்லா மாகாணங்களிலும் அது சட்டமானது. இராஜ்யத்திலுள்ள எல்லா நாடுகளின் ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. இது அறிவிக்கப்பட்டதால் யூதர்கள் அந்த சிறப்பு நாளுக்காகத் தயாராக இருந்தனர். யூதர்கள் தம் எதிரிகளுக்குத் திருப்பிக் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். தூதுவர்கள் ராஜாவின் குதிரையில் மிக வேகமாகச் சென்றனர். ராஜா அவர்களிடம் வேகமாகச் செல்லும்படி கட்டளையிட்டான். இந்த கட்டளை, தலைநகரமான சூசானிலும் அறிவிக்கப்பட்டது. மொர்தெகாய் ராஜாவைவிட்டு போனான். அவன் ராஜாவிடமிருந்து பெற்ற சிறப்பான ஆடையை அணிந்திருந்தான். அவனது ஆடை வெண்மையும், நீலமுமாய் இருந்தது. பெரிய பொற் கிரீடமும், சிறந்த பட்டும், இரத்தாம்பரமும் அணிந்திருந்தான். சூசானின் சிறப்பு விழா நடைபெற்றது. ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். யூதர்களுக்குத் தனி மகிழ்ச்சியுடைய நாளாக இருந்தது. இது மிகுந்த மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும் உரியநாளாக இருந்தது. ராஜாவின் கட்டளை எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் சென்றனவோ, அங்கெல்லாம் மகிழ்ச்சியும், உற்சாகமும் யூதர்களிடையே ஏற்பட்டன. யூதர் விருந்துடன் அதனைக் கொண்டாடினர். யூதர்களுக்குப் பயந்ததினால் மற்ற குழுவிலுள்ள ஜனங்களும் யூதர்களாகினர்.

எஸ்தர் 8:13-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்க வேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது. அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது. இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று. ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிற பயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூத மார்க்கத்தில் அமைந்தார்கள்.