எஸ்தர் 7:8-10
எஸ்தர் 7:8-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அரண்மனைத் தோட்டத்திலிருந்து அரசன் விருந்து மண்டபத்துக்குத் திரும்பிவந்தபோது, எஸ்தர் சாய்ந்திருந்த இருக்கையின்மேல் ஆமான் விழுவதைக் கண்டான். அப்பொழுது அரசன், “அரசி என்னுடன் வீட்டில் இருக்கும்போதே இவன் அவளைப் பலாத்காரம் பண்ணப் பார்க்கிறானோ?” என்றான். இந்த வார்த்தை அரசனுடைய வாயிலிருந்து புறப்பட்ட உடனேயே ஆமானுடைய முகத்தை மூடினார்கள். அப்பொழுது அரசனுக்கு ஏவல் வேலைசெய்த அதிகாரிகளில் ஒருவனான அற்போனா என்பவன் அரசனிடம், “எழுபத்தைந்து அடி உயரமான ஒரு தூக்கு மரம் ஆமானின் வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிறது. அவன் அதை அரசனுக்கு உதவிசெய்வதற்காகப் பேசிய மொர்தெகாய்க்கென செய்துவைத்திருந்தான்” என்றான். அப்பொழுது அரசன், “அவனை அதில் தூக்கிப் போடுங்கள்” என்றான். அப்படியே அவர்கள், மொர்தெகாய்க்காக ஆமான் ஆயத்தம் பண்ணிய தூக்குமரத்திலே ஆமானைத் தூக்கிலிட்டார்கள். அப்பொழுது அரசனின் கோபம் தணிந்தது.
எஸ்தர் 7:8-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள். அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற அதிகாரிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானுடைய வீட்டின் அருகில் நடப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான். அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.
எஸ்தர் 7:8-10 பரிசுத்த பைபிள் (TAERV)
ராஜா தோட்டத்திலிருந்து திரும்பி விருந்து அறைக்குள்ளே நுழையும்போது, இராணி எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையில் ஆமான் விழுந்து கிடந்தான். ராஜா மிகவும் கோபமான குரலில், “நான் இந்த வீட்டில் இருக்கும்போதே நீ இராணியைத் தாக்குகிறாயோ?” எனக் கேட்டான். ராஜா இவ்வாறு சொன்ன உடனேயே வேலைக்காரர்கள் வந்து ஆமானின் முகத்தை மூடினார்கள். பிரதானிகளில் ஒருவனான ராஜாவுக்கு சேவைச் செய்பவனின் பெயர் அற்போனா. அவன் ராஜாவிடம், “ஆமானின் வீட்டின் அருகில் 75 அடி உயரத்தில் ஒரு தூக்குமரம் கட்டப்பட்டுள்ளது. அதில் மொர்தெகாயைத் தூக்கிலிடவேண்டும் என்றே ஆமான் அதைக் கட்டினான். மொர்தெகாய் உமக்கு உதவிச் செய்த ஆள், உம்மை கொல்லத் திட்டமிட்டத் தீயர்வர்களைப்பற்றி உமக்குச் சொன்னவன்” என்றான். ராஜா, “ஆமானை அதே மரத்தில் தூக்கில் போடுங்கள்” என்றான். எனவே, அவர்கள் ஆமானை அவன் மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் போட்டனர். பிறகு ராஜா தன் கோபத்தை நிறுத்தினான்.
எஸ்தர் 7:8-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பி வருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்து கிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள். அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டை நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான். அப்படியே ஆமான் மொர்தேகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.