எஸ்தர் 7:1-10

எஸ்தர் 7:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்படியே அரசனும், ஆமானும் எஸ்தர் அரசியுடன் விருந்து உண்ணப் போனார்கள். அந்த இரண்டாம் நாளில் அவர்கள் திராட்சை இரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கையில், அரசன் திரும்பவும், “எஸ்தர் அரசியே, உனது விண்ணப்பம் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். உனது வேண்டுகோள் என்ன? அது அரசில் பாதியாயிருந்தாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றான். அப்பொழுது எஸ்தர் அரசி விடையாக, “அரசே உம்மிடம் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமக்குப் பிரியமாயிருந்தால் என் உயிரை எனக்குத் தாரும், இதுவே எனது விண்ணப்பம். எனது மக்களைத் தப்புவியும், இதுவே எனது வேண்டுகோள். ஏனெனில் நானும் எனது மக்களும் அழிவுக்கும், கொலைக்கும், நாசத்திற்கும் விற்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் ஆணும் பெண்ணும் அடிமைகளாக விற்கப்பட்டிருந்தால்கூட நான் பேசாமல் இருந்திருப்பேன். ஏனெனில், அப்படியான ஒரு துன்பம் அரசரை கஷ்டப்படுத்துவதற்கு ஏற்ற காரணமாய் இருந்திருக்காது” என்றாள். அகாஸ்வேரு அரசன் எஸ்தர் அரசியிடம், “யார் அவன்? இப்படியான காரியத்தைச் செய்யத் துணிந்த அவன் எங்கே?” என்று கேட்டான். அதற்கு எஸ்தர், “அந்த விரோதியும், பகைவனும் இந்த கொடிய ஆமானே” என்றாள். அப்பொழுது ஆமான், அரசனுக்கும் அரசிக்கும் முன்பாகத் திகிலடைந்தான். அரசன் கடுங்கோபத்துடன் எழுந்து தனது திராட்சை இரசத்தை வைத்துவிட்டு, வெளியே அரண்மனைத் தோட்டத்துக்குப் போனான். ஆனால் ஆமான், தனது தலைவிதியை அரசன் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டான் என உணர்ந்து, தனது உயிருக்காக எஸ்தர் அரசியிடம் மன்றாடும்படி அங்கேயே நின்றான். அரண்மனைத் தோட்டத்திலிருந்து அரசன் விருந்து மண்டபத்துக்குத் திரும்பிவந்தபோது, எஸ்தர் சாய்ந்திருந்த இருக்கையின்மேல் ஆமான் விழுவதைக் கண்டான். அப்பொழுது அரசன், “அரசி என்னுடன் வீட்டில் இருக்கும்போதே இவன் அவளைப் பலாத்காரம் பண்ணப் பார்க்கிறானோ?” என்றான். இந்த வார்த்தை அரசனுடைய வாயிலிருந்து புறப்பட்ட உடனேயே ஆமானுடைய முகத்தை மூடினார்கள். அப்பொழுது அரசனுக்கு ஏவல் வேலைசெய்த அதிகாரிகளில் ஒருவனான அற்போனா என்பவன் அரசனிடம், “எழுபத்தைந்து அடி உயரமான ஒரு தூக்கு மரம் ஆமானின் வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிறது. அவன் அதை அரசனுக்கு உதவிசெய்வதற்காகப் பேசிய மொர்தெகாய்க்கென செய்துவைத்திருந்தான்” என்றான். அப்பொழுது அரசன், “அவனை அதில் தூக்கிப் போடுங்கள்” என்றான். அப்படியே அவர்கள், மொர்தெகாய்க்காக ஆமான் ஆயத்தம் பண்ணிய தூக்குமரத்திலே ஆமானைத் தூக்கிலிட்டார்கள். அப்பொழுது அரசனின் கோபம் தணிந்தது.

எஸ்தர் 7:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ராணியாகிய எஸ்தருடன் விருந்து உண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, இரண்டாம் நாள் விருந்தில் திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராணியே, உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும் கிடைக்கும் என்றான். அப்பொழுது ராணியாகிய எஸ்தர் மறுமொழியாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால் என்னுடைய வேண்டுதலுக்கு என்னுடைய ஜீவனும், என்னுடைய மன்றாட்டுக்கு என்னுடைய மக்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக. எங்களை அழித்துக் கொல்லும்படி நானும் என்னுடைய மக்களும் விற்கப்பட்டோம்; ஆண்களும், பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாக இருப்பேன்; இப்பொழுதோ ராஜாவிற்கு உண்டாகும் நஷ்டத்திற்கு அந்த எதிரி உத்திரவாதம் பண்ணமுடியாது என்றாள். அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராணியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான். அதற்கு எஸ்தர்: எதிரியும் பகைவனுமாகிய அந்த மனிதன் இந்த பொல்லாத ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவிற்கும் ராணிக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான். ராஜா கடுங்கோபத்தோடு திராட்சைரசப் பந்தியைவிட்டு எழுந்து, அரண்மனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்கு ஆபத்து நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராணியாகிய எஸ்தரிடம் தன்னுடைய உயிருக்காக விண்ணப்பம்செய்ய எழுந்து நின்றான். ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள். அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற அதிகாரிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானுடைய வீட்டின் அருகில் நடப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான். அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.

எஸ்தர் 7:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே ராஜாவும், ஆமானும் இராணி எஸ்தரோடு விருந்து உண்ணச் சென்றனர். பிறகு இரண்டாம் நாள் விருந்தில் அவர்கள் திராட்சைரசம் குடிக்கும்போது, ராஜா மீண்டும் இராணியிடம் கேள்வி கேட்டான். அவன், “எஸ்தர் இராணியே, நீ என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாய்? எதை வேண்டுமானாலும் கேள். அது உனக்குக் கொடுக்கப்படும். உன்னுடைய விருப்பம் என்ன? எனது நாட்டில் பாதி வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான். பிறகு, எஸ்தர் இராணி, “ராஜாவே, நீர் என்னை விரும்பினால், இது உமக்கு விருப்பமானால் என்னை வாழவிடுங்கள். எனது ஜனங்களையும் வாழவிடுங்கள் என்று கேட்கிறேன். அதுதான் உம்மிடம் வேண்டுகிறேன். ஏனென்றால், நானும் எனது ஜனங்களும் அழியவும், கொல்லப்படவும் விற்கப்பட்டோம். அடிமைகளாக விற்கப்பட்டால் கூட நான் மௌனமாக இருப்பேன். ஏனென்றால் அது ராஜாவைத் துன்புறத்துகிற ஒரு பிரச்சினையாக இருக்கமுடியாது” என்றாள். பிறகு ராஜா அகாஸ்வேரு எஸ்தர் இராணியிடம், “இதனை உனக்குச் செய்தவன் யார்? உனது ஜனங்களுக்கு இத்தகைய கொடுமையைச் செய்ய துணிந்த மனிதன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான். எஸ்தர், “எங்களுக்கு எதிரானவன் எங்கள் பகைவன் இந்த கெட்ட ஆமான்தான்” என்றாள். பிறகு, ராஜா மற்றும் இராணி முன்னால் ஆமான் திகில் அடைந்தான். ராஜா மிகவும் கோபம் அடைந்தான். அவன் எழுந்து திராட்சைரசம் விருந்தைவிட்டு, தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் ஆமான் உள்ளே இருந்து எஸ்தர் இராணியிடம் தன் உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சினான். அவன் தன் உயிருக்காக மன்றாடினான். ஏனென்றால், அவனைக் கொல்லுமாறு ஏற்கெனவே ராஜா முடிவுச் செய்துவிட்டதை அவன் அறிந்தான். ராஜா தோட்டத்திலிருந்து திரும்பி விருந்து அறைக்குள்ளே நுழையும்போது, இராணி எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையில் ஆமான் விழுந்து கிடந்தான். ராஜா மிகவும் கோபமான குரலில், “நான் இந்த வீட்டில் இருக்கும்போதே நீ இராணியைத் தாக்குகிறாயோ?” எனக் கேட்டான். ராஜா இவ்வாறு சொன்ன உடனேயே வேலைக்காரர்கள் வந்து ஆமானின் முகத்தை மூடினார்கள். பிரதானிகளில் ஒருவனான ராஜாவுக்கு சேவைச் செய்பவனின் பெயர் அற்போனா. அவன் ராஜாவிடம், “ஆமானின் வீட்டின் அருகில் 75 அடி உயரத்தில் ஒரு தூக்குமரம் கட்டப்பட்டுள்ளது. அதில் மொர்தெகாயைத் தூக்கிலிடவேண்டும் என்றே ஆமான் அதைக் கட்டினான். மொர்தெகாய் உமக்கு உதவிச் செய்த ஆள், உம்மை கொல்லத் திட்டமிட்டத் தீயர்வர்களைப்பற்றி உமக்குச் சொன்னவன்” என்றான். ராஜா, “ஆமானை அதே மரத்தில் தூக்கில் போடுங்கள்” என்றான். எனவே, அவர்கள் ஆமானை அவன் மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் போட்டனர். பிறகு ராஜா தன் கோபத்தை நிறுத்தினான்.

எஸ்தர் 7:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான். அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக. எங்களை அழித்துக்கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப் போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றாள். அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான். அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான். ராஜா உக்கிரத்தோடே திராட்சரசப்பந்தியை விட்டெழுந்து, அரமனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான். ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பி வருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்து கிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள். அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டை நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான். அப்படியே ஆமான் மொர்தேகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.