எஸ்தர் 4:13-16
எஸ்தர் 4:13-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மொர்தெகாய் ஆத்தாகுவிடம் சொல்லியனுப்பிய மறுமொழியாவது: “நீ அரசரின் வீட்டில் இருப்பதால், எல்லா யூதர்களிலுமிருந்து நீ மட்டும் தப்பிக்கொள்வாய் என்று எண்ணாதே. நீ இந்தக் காலத்தில் மவுனமாய் இருந்தால், யூதருக்கு விடுதலையும், மீட்பும் இன்னொரு இடத்திலிருந்து வரும். ஆனால் நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். இப்படிப்பட்ட ஒரு காலத்திற்காகத்தான், நீ அரச பதவிக்கு வந்திருக்கிறாயோ என்று யாருக்குத் தெரியும்.” அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும், “நீர் போய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுகூட்டி எனக்காக உபவாசம் பண்ணும். இரவும் பகலுமாக மூன்று நாட்களுக்கு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ வேண்டாம். உங்களோடு நானும் எனது தோழிகளும் உபவாசம் பண்ணுவோம். இதைச் செய்து முடித்தபின் சட்டத்திற்கு எதிராய் இருந்தாலும் நான் அரசனிடம் போவேன். நான் அழிவதானால் அழிவேன்” என்று சொன்னாள்.
எஸ்தர் 4:13-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரண்மனையில் இருக்கிறதினால், மற்ற யூதர்கள் தப்ப முடியாமல் இருக்கும்போது, நீ தப்புவாயென்று உன்னுடைய மனதிலே நினைவுகொள்ளாதே. நீ இந்தக் காலத்திலே மவுனமாக இருந்தால், யூதருக்கு உதவியும் விடுதலையும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன்னுடைய தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாக இருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது: நீர் போய், சூசானில் இருக்கிற யூதர்களையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாட்கள் இரவும் பகலும் சாப்பிடாமலும் குடிக்காமலுமிருந்து, எனக்காக உபவாசம் இருங்கள்; நானும் என்னுடைய பணிவிடைப்பெண்களும் உபவாசம் இருப்போம்; இப்படியே சட்டத்தை மீறி, ராஜாவிடம் போவேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
எஸ்தர் 4:12-16 பரிசுத்த பைபிள் (TAERV)
எஸ்தரின் செய்தி மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது. மொர்தெகாய் அவளது செய்தியைப் படித்து விட்டு, அவன் அவளுக்குப் பதில் அனுப்பினான். அதில், “எஸ்தர், நீ ராஜாவின் அரண்மனையில் வாழ்வதால் யூத பெண்ணாகிய நீ மட்டும் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்காதே. நீ இப்போது அமைதியாக இருந்தால், யூதர்களுக்கான உதவியும் விடுதலையும் வேறு இடத்திலிருந்து வரும், ஆனால் நீயும் உனது தந்தையின் குடும்பமும் அழியும். யாருக்குத் தெரியும்? ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவுவதற்காகவே இராணியாகத் தோந்தெடுக்கப்பட்டிருக்கலாம்” என்று எழுதியிருந்தான். பிறகு, எஸ்தர் மொர்தெகாய்க்கு இந்த பதிலை அனுப்பினாள்: “மொர்தெகாய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுசேர்த்து எனக்காக உபவாசம் இருங்கள். மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமலும் குடிக்காமலும் இருங்கள். நானும் உங்களைப் போன்றே உபவாசம் இருப்பேன். என் வேலைக்காரப் பெண்களும் உபவாசம் இருப்பார்கள். நான் உபவாசம் இருந்த பிறகு ராஜாவிடம் செல்வேன். ராஜா அழைக்காமல் போவது என்பது சட்டத்திற்கு எதிரானது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் எவ்வாறாகிலும் செய்வேன். நான் மரித்தால் மரிக்கிறேன்.”
எஸ்தர் 4:13-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே. நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது: நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.