எஸ்தர் 4:1-4
எஸ்தர் 4:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இவைகளை எல்லாம் மொர்தெகாய் அறிந்தபோது, அவன் தனது உடைகளைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு பட்டணத்தின் நடுப்பகுதிக்குப் போனான். போகும்போது, மனங்கசந்து அழுது சத்தமாய் புலம்பிக்கொண்டு போனான். ஆயினும் அவன், அரச வாசல் வரைக்குமே போனான். ஏனெனில் துக்கவுடை உடுத்திய எவனும் உள்ளே போக அனுமதிக்கப்படுவதில்லை. கட்டளையும், அரசனின் உத்தரவும் போயிருந்த ஒவ்வொரு மாகாணத்திலும் யூதர்கள் மத்தியில் பெரிய துக்கம் ஏற்பட்டது. அவர்கள் உபவாசித்து, அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். அநேகர் துக்கவுடை உடுத்தி சாம்பலில் கிடந்தார்கள். எஸ்தரின் தோழிகளும், பணிவிடைக்காரர்களும் அவளிடம் வந்து மொர்தெகாயைப் பற்றிச் சொன்னபோது, அரசி மிகவும் துக்கமடைந்தாள். அவனுடைய துக்கவுடைக்குப் பதிலாக உடுத்திக்கொள்வதற்கு உடைகளை அவள் அனுப்பியபோது அவன் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
எஸ்தர் 4:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நடந்த எல்லாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, சணலாடை அணிந்து, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள உரத்த சத்தத்துடன் அலறிக்கொண்டு, ராஜாவின் அரண்மனை வாசல்வரை வந்தான்; சணலாடை அணிந்தவனாக ராஜாவின் அரண்மனை வாசலுக்குள் நுழைய ஒருவனுக்கும் அனுமதி இல்லை. ராஜாவின் உத்திரவும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் யூதர்களுள்ள பகுதிகளில் பெரிய துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் சணலாடை அணிந்து சாம்பலில் கிடந்தார்கள். அப்பொழுது எஸ்தரின் இளம்பெண்களும், அவளுடைய பணிவிடைக்காரர்களும் போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராணி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்தியிருந்த சணலாடையை எடுத்துப்போட்டு, அவனுக்கு அணிந்துகொள்ள ஆடைகளை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தான்.
எஸ்தர் 4:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)
நடந்த அனைத்தையும் மொர்தெகாய் கேள்விப்பட்டான். யூதர்களுக்கு எதிரான ராஜாவின் கட்டளையைக் கேட்டதும் அவன் தனது ஆடையைக் கிழித்தான். துக்கத்திற்கு அடையாளமான ஆடையை அணிந்து தலையில் சாம்பலை போட்டுக்கொண்டான். பிறகு அவன் நகரத்திற்குள் உரத்தக்குரலில் அழுதவண்ணம் சென்றான். ஆனால் மொர்தெகாய் ராஜாவின் வாசல் வரைதான் போனான். துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருந்த எவரையும் வாசலில் நுழைய அனுமதிக்கமாட்டார்கள். எல்லா நாடுகளிலும் ராஜாவின் கட்டளை போய்ச் சேர்ந்தது. அதனால் யூதர்களிடம் அழுகையும், துக்கமும், அதிகரித்தன. அவர்கள் உரத்த அழுகையுடன் உபவாசத்தை கடைப்பிடித்தனர். பல யூதர்கள் துக்கத்திற்கான ஆடையை அணிந்தும் தலைகளில் சாம்பலைப் போட்டுக்கொண்டும் தரையில் விழுந்துகிடந்தனர். எஸ்தரின் பெண் வேலைக்காரிகளும், பிரதானிகளும் வந்து அவளிடம் மொர்தெகாயைப் பற்றிச் சொன்னார்கள். அது எஸ்தர் இராணியைக் கலங்கவும் துக்கப்படவும் வைத்தது. அவள் அவனுக்கு துக்கத்திற்குரிய ஆடையை எடுத்துவிட்டு அணிந்துகொள்ள வேறு ஆடைகளைக் கொடுத்து அனுப்பினாள். ஆனால் அவன் அந்த ஆடைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
எஸ்தர் 4:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு, ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை. ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள். அப்பொழுது எஸ்தரின் தாதிமார்களும், அவளுடைய பிரதானிகளும் போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு, அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான்.