எஸ்தர் 3:1-15

எஸ்தர் 3:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான். ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள். இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள். ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான். ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக்காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான். ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது. அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல. ராஜாவுக்கு சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்றான். அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து, ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான். முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின் பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது. ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியாகிய ஒரேநாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது. அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று சகல ஜனங்களுக்கும் கூறி அறிவிக்கிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே, இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம் பண்ணப்பட்டது. அந்த அஞ்சற்காரர் ராஜாவின் உத்தரவினால் தீவிரமாய்ப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கிற்று.

எஸ்தர் 3:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவைகளுக்குப்பின் ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகன் ஆமானை, அகாஸ்வேரு அரசன் கனப்படுத்தி, மற்ற எல்லா உயர்குடி மக்களைவிடவும் உயர்ந்த பதவியை அவனுக்குக் கொடுத்தான். அரச வாசலில் இருந்த அரச அதிகாரிகள் எல்லோரும், ஆமானுக்கு முழங்காற்படியிட்டு மரியாதை செலுத்தினார்கள். ஏனெனில், அரசன் அவனைக்குறித்து இவ்விதமாய்க் கட்டளையிட்டிருந்தான். ஆனால் மொர்தெகாய் முழங்காற்படியிடவும் இல்லை, அவனுக்கு மரியாதை செலுத்தவும் இல்லை. அப்பொழுது அரச வாசலில் இருந்த அரசனின் அதிகாரிகள் மொர்தெகாயிடம், “நீ ஏன் அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை?” என்று கேட்டார்கள். நாள்தோறும் அவர்கள் அவனுடன் இப்படிப் பேசினார்கள். ஆனால் அவனோ கேட்க மறுத்துவிட்டான். மொர்தெகாய் தன்னை ஒரு யூதன் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்ததால், அவனுடைய நடவடிக்கை சகித்துக்கொள்ளக்கூடியதோ என்று பார்ப்பதற்கு, அந்த அதிகாரிகள் இதைப்பற்றி ஆமானுக்குச் சொன்னார்கள். மொர்தெகாய் முழங்காற்படியிடாததையும், தன்னைக் கனப்படுத்தாதையும் ஆமான் கண்டபோது, அவன் கோபமடைந்தான். ஆயினும், மொர்தெகாய் எந்த நாட்டைச் சேர்ந்தவனென்று அறிந்ததினால் அவனை மட்டும் கொல்ல அவன் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அகாஸ்வேருவின் அரசு முழுவதும் இருந்த மொர்தெகாயின் மக்களான எல்லா யூதர்களையும் அழிப்பதற்கே ஆமான் வழிதேடினான். அகாஸ்வேரு அரசனின் ஆட்சியின் பன்னிரண்டாம் வருடத்தின் முதலாம் மாதமாகிய நிசான் மாதத்திலே, யூதர்களை அழிப்பதற்கான நாளையும், மாதத்தையும் தெரிவுசெய்வதற்கு ஆமான் முன்னிலையில் பூர் எனப்பட்ட சீட்டைப் போட்டார்கள். பன்னிரண்டாம் மாதமாகிய ஆதார் மாதத்தின்மேல் சீட்டு விழுந்தது. அதன்பின் ஆமான் அகாஸ்வேரு அரசனிடம், “உமது அரசின் எல்லா நாடுகளிலுமுள்ள மக்கள் கூட்டங்களில் சிதறடிக்கப்பட்டு பரந்து வாழ்கின்ற ஒரு குறிப்பிட்ட இனமக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வழக்கங்கள் மற்ற எல்லா மக்களுடைய வழக்கங்களிலுமிருந்து வேறுபட்டவையாக இருக்கின்றன. அவர்கள் அரசரின் சட்டங்களுக்கும் கீழ்ப்படிகிறதில்லை. அவர்களைச் சகித்துக்கொண்டிருப்பது அரசரின் நலனுக்கு உகந்ததல்ல. அரசர் விரும்பினால், அவர்களை அழிப்பதற்கு கட்டளையிடட்டும். அவர்களை அழிக்கும் வேலையில் ஈடுபடும் மனிதருக்கென அரச திரவிய களஞ்சியத்திற்கு நானே பத்தாயிரம் தாலந்து வெள்ளிக்காசுகளைக் கொடுக்கிறேன்” என்றான். எனவே, அரசன் தனது முத்திரை மோதிரத்தைத் தனது விரலில் இருந்து களற்றி யூதர்களின் எதிரியும், ஆகாகியனும், அம்மெதாத்தாவின் மகனுமான ஆமானிடத்தில் கொடுத்தான். “பணத்தை வைத்துக்கொள்; உனக்கு விரும்பியபடி அந்த மக்களுக்குச் செய்” என்று அரசன் ஆமானிடம் சொன்னான். பின்பு முதலாம் மாதம் பதிமூன்றாம் நாளில் அரச செயலாளர்கள் அழைக்கப்பட்டார்கள்; அவர்கள், ஒவ்வொரு மாகாணத்துக்குரிய எழுத்திலும், ஒவ்வொரு மக்களின் மொழியிலும், ஆமானின் கட்டளைகளையெல்லாம் எழுதினார்கள். பின் அரசனின் பிரதிநிதிகளுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்களுக்கும், பல்வேறு மக்களின் உயர்குடி மக்களுக்கும் இதை அனுப்பினார்கள். இவை அகாஸ்வேரு அரசனின் பெயரிலேயே எழுதப்பட்டு, அவனுடைய சொந்த மோதிரத்தினாலேயே முத்திரையிடப்பட்டன. அரசனின் எல்லா மாகாணங்களுக்கும் தூதுவர்கள் மூலம் ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதத்தின் பதிமூன்றாம் நாளிலே, எல்லா யூதர்களையும் கொல்லவேண்டுமென கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதில், இளைஞர், முதியவர், பெண்கள், சிறுபிள்ளைகள் உட்பட எல்லோரையும் ஒரேநாளிலேயே அழிக்கவும், கொல்லவும், நாசமாக்கவும், அவர்களுடைய பொருட்களைக் கொள்ளையிடவும் வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டளையின் ஒரு பிரதி ஒவ்வொரு மாகாணத்திலும் சட்டமாக வழங்கப்பட இருந்தது. அப்படி வழங்கப்படும்போது, எல்லா நாடுகளும் அந்த நாளுக்கென ஆயத்தமாயிருக்கும்படி அவர்களுக்கு அது அறிவிக்கப்பட வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டிருந்தது. அரச கட்டளையினால் தூண்டப்பட்டவர்களாய் தூதுவர்கள் புறப்பட்டுப் போனார்கள். சூசான் கோட்டைப் பட்டணத்திலிருந்து கட்டளை வழங்கப்பட்டது. அரசனும் ஆமானும் குடிப்பதற்கு அமர்ந்தார்கள். ஆனால் சூசான் நகரமோ திகைப்பில் ஆழ்ந்திருந்தது.

எஸ்தர் 3:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற எல்லா பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய அதிகாரத்தின் ஆசனத்தை உயர்த்திவைத்தான். ஆகையால் ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற ராஜாவின் வேலைக்காரர்கள் எல்லோரும் ஆமானுக்கு முன்பாக முழங்காலிட்டு வணங்கிவந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனுக்கு முன்பாக முழங்காலிடவுமில்லை, வணங்கவுமில்லை. அப்பொழுது ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற ராஜாவின் வேலைக்காரர்கள் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள். இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனிடம் சொல்லியும், அவன் தங்களுடைய வார்த்தையைக் கேட்காதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்ப்பதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள். ஆமான் மொர்தெகாய் தனக்கு முன்பாக முழங்காலிட்டு வணங்காததைக் கண்டபோது, கடுங்கோபம் நிறைந்தவனானான். ஆனாலும் மொர்தெகாயை மட்டும் கொல்லுவது அவனுக்கு அற்பமான காரியமாக இருந்தது; மொர்தெகாயின் மக்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்ஜியமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் மக்களாகிய யூதர்களையெல்லாம் அழிக்க அவன் திட்டம் தீட்டினான். ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருட ஆட்சியின் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு (யூதர்களை அழிக்கும் திட்டத்திற்கா) எந்த நாள் எந்த மாதம் என்று அறியப் போடப்பட்டது, ஆதார் (ஏப்ரல்) மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் சீட்டு விழுந்தது. அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்ஜியத்தின் எல்லா நாடுகளிலுமுள்ள மக்களுக்குள்ளே ஒருவித மக்கள் சிதறி பரவியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் எல்லா மக்களுடைய வழக்கங்களுக்கும் வித்தியாசமாக இருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுவதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவிற்கு நியாயமல்ல. ராஜாவிற்கு விருப்பமிருந்தால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கருவூலத்தில் கொண்டுவந்து செலுத்த பத்தாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணி ராஜாவின் காரியத்தில் பொறுப்பாய் உள்ளவனுடைய கையில் கொடுப்பேன் என்றான். அப்பொழுது ராஜா தன்னுடைய கையிலிருக்கிற தன்னுடைய மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகனும் யூதர்களின் எதிரியுமாகிய ஆமானிடம் கொடுத்து, ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த மக்களுக்கு உன்னுடைய விருப்பப்படி செய்யலாம் என்றான். முதலாம் மாதம் பதிமூன்றாந்தேதியிலே, ராஜாவின் எழுத்தர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் அதிகாரிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், எல்லா வகையான மக்களின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் எழுத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் மொழிகளிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின் பெயரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது. ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாந் தேதியாகிய ஒரே நாளில் சிறியோர் பெரியோர் குழந்தைகள் பெண்கள் ஆகிய எல்லா யூதர்களையும் கொன்று அழிக்கவும், அவர்களை நொறுக்கவும், தபால்காரர்கள் கையில் ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது. அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று எல்லா மக்களுக்கும் கூறி அறிவிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே, இது ஒவ்வொரு நாட்டிலும் தெரியப்படுத்தப்பட்டது. அந்த தபால்காரர்கள் ராஜாவின் உத்திரவினால் விரைவாகப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரண்மனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கியது.

எஸ்தர் 3:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

இவை நிகழ்ந்த பிறகு, அகாஸ்வேரு ராஜா ஆமானைக் கௌரவித்தான். ஆமான், அம்மெதாத்தாவின் குமாரன். இவன் ஆகாகியன். ராஜா ஆமானுக்குப் பதவி உயர்வு கொடுத்து மற்ற அதிகாரிகளைவிட உயர் அதிகாரியாகச் செய்தான். ராஜாவின் வாசலில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஆமானுக்குப் பணிந்து வணங்கி மரியாதைச் செய்தனர். அவ்வாறுதான் செய்யவேண்டும் என்று ராஜா அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். ஆனால் மொர்தெகாய் அவனுக்குப் பணிந்து மரியாதை அளிக்க மறுத்துவிட்டான். பிறகு, அரச வாசலில் உள்ள ராஜாவின் அதிகாரிகள் அவனிடம், “நீ ஏன் அரச கட்டளைபடி ஆமானுக்குப் பணிந்து கீழ்ப்படிவதில்லை?” என்று கேட்டனர். நாளுக்கு நாள் அந்த அரச அதிகாரிகள் மொர்தெகாயிடம் பேசினார்கள். ஆனால் மொர்தெகாய் கட்டளையின்படி ஆமானை வணங்க மறுத்துவிட்டான். எனவே, அந்த அதிகாரிகள் இதைப்பற்றி ஆமானிடம் சொன்னார்கள். ஆமான், மொர்தெகாய் விஷயத்தில் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய அவர்கள் விரும்பினார்கள். மொர்தெகாய் அவர்களிடம் நான் ஒரு யூதன் என்று சொல்லியிருந்தான். மொர்தெகாய் தனக்கு பணிந்து வணங்குவதில்லை என்பதையும், மரியாதை கொடுப்பதில்லை என்பதையும், ஆமான் அறிந்தபோது அவன் மிகவும் கோபங்கொண்டான். மொர்தெகாய் ஒரு யூதன் என்பதை ஆமான் அறிந்திருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை மட்டும் கொன்றுவிடுவதில் திருப்தியடையவில்லை. ஆமான், மொர்தெகாயின் ஆட்களையும், அகாஸ்வேருவின் இராஜ்ஜியம் முழுவதுமுள்ள யூதர்களையும் அழிக்க ஒரு வழிவேண்டும் என்று விரும்பினான். அகாஸ்வேருவின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டின் முதல் மாதமான நிசானில் ஆமான் ஒரு சிறப்பு மாதத்தையும், நாளையும் சீட்டு குலுக்கி எடுத்தான். பன்னிரண்டாவது மாதமான ஆதார் தேர்ந்தெடுக்கப்பட்டது. (அக்காலத்தில் சீட்டுக் குலுக்கல் “பூர்” என்று அழைக்கப்பட்டது). பிறகு, ஆமான் அகாஸ்வேரு ராஜாவிடம் வந்தான். அவன், “அகாஸ்வேரு ராஜாவே, உமது ஆட்சியிலுள்ள நாடுகளில் எல்லாம் ஒருவித ஜனங்கள் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்கள் மற்ற ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்துள்ளனர். அவர்களது பழக்கவழக்கங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக உள்ளன. அவர்கள் ராஜாவின் சட்டங்களுக்கு கீழ்ப்படிவதில்லை. அவர்கள் உமது அரசாட்சியில் வாழ அனுமதிப்பது ராஜாவாகிய உமக்கு நல்லதல்ல. “இது ராஜாவுக்கு விருப்பமானதாக இருந்தால், நான் ஒரு கருத்து சொல்கிறேன். அந்த ஜனங்களை அழிப்பதற்கு எனக்கு ஒரு கட்டளைகொடும். நான் 10,000 வெள்ளிக் காசுகளை ராஜாவின் பொக்கிஷதாரரிடம் செலுத்திவிடுகிறேன். அப்பணத்தை இவ்வேலையைச் செய்பவர்களுக்குக் கொடுக்கலாம்” என்றான். எனவே, ராஜா தனது விரலில் உள்ள முத்திரை மோதிரத்தைக் கழற்றி ஆமானிடம் கொடுத்தான். ஆமான் ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரன். ஆமான் யூதர்களின் எதிரி. பிறகு ராஜா ஆமானிடம், “பணத்தை வைத்துக்கொள். அந்த ஜனங்களை என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்” என்றான். பிறகு முதல் மாதத்தின் 13வது நாள் ராஜாவின் செயலாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள மொழிகளில் ஆமானின் கட்டளைகளை எழுதினார்கள். அவர்கள் ராஜாவின் நாட்டு அதிகாரிகளுக்கும், பல்வேறு மாகாண ஆளுநர்களுக்கும், பல்வகை ஜனங்களின் தலைவர்களுக்கும் எழுதினார்கள். ராஜா அகாஸ்வேருவின் அதிகாரத்தின்படியும், அவனது சொந்த மோதிரத்தின் முத்திரையிட்டும் அவர்கள் கடிதம் எழுதினார்கள். தூதுவர்கள் ராஜாவின் அனைத்து மாகாணங்களுக்கும் கடிதங்களைக் கொண்டுசென்றனர். அக்கடிதத்தில் யூதர்கள் அனைவரையும் முழுமையாக அழிக்கவும், கொல்லவும் ராஜாவின் கட்டளை இருந்தது. அதாவது இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவரையும் அழிக்க வேண்டும். ஒரே நாளில் யூதர்கள் அனைவரையும் கொல்லவேண்டும் என்று கட்டளை இருந்தது. அந்நாளும் ஆதார் எனும் பன்னிரண்டாவது மாதத்தின் 13வது நாளாக இருக்கவேண்டும். யூதர்களுக்குரிய உடமைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை இருந்தது. கடிதத்தின் ஒரு பிரதி சட்டமாக்கப்படுவதற்குக் கொடுக்கப்பட்டு, அவனது ஆட்சிக்குள்ளிருந்த அனைத்து மாகாணங்களிலும் சட்டமாக்கப்பட்டது. அனைத்து ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. பிறகு அந்நாளுக்காக ஜனங்கள் அனைவரும் தயாராக இருப்பார்கள். ராஜாவின் கட்டளையோடு தூதுவர்கள் விரைந்துக்கொண்டிருந்தனர். அந்த கட்டளை தலைநகரமான சூசானில் கொடுக்கப்பட்டது. ராஜாவும், ஆமானும் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சூசான் நகரம் குழம்பிக்கொண்டிருந்தது.