எஸ்தர் 2:5-18

எஸ்தர் 2:5-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அக்காலத்தில் சூசான் கோட்டைப் பட்டணத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த, மொர்தெகாய் என்னும் பெயருடைய ஒரு யூதன் இருந்தான். இவன் யாவீரின் மகன், யாவீர் சீமேயின் மகன், சீமேயி கீசின் மகன். இந்த மொர்தெகாய், யூதா அரசன் எகொனியாவுடன், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரினால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களோடுகூட நாடு கடத்தப்பட்டிருந்தவன். மொர்தெகாய்க்கு அத்சாள் என்னும் பெயருடைய ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு தாய் தகப்பன் இல்லாததினால் அவளை இவன் வளர்த்தான். அவள் எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். இந்தப் பெண் வடிவத்திலும், தோற்றத்திலும் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய தகப்பனும் தாயும் இறந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் சொந்த மகளாக எடுத்து வளர்த்தான். அரசனுடைய உத்தரவும் கட்டளையும் அறிவிக்கப்பட்டபோது, அநேக பெண்கள் சூசான் கோட்டைப் பட்டணத்திற்கு கொண்டுவரப்பட்டு யேகாயின் பராமரிப்பில் வைக்கப்பட்டார்கள். எஸ்தரும் அரசனின் அரண்மனைக்குக் அழைத்துச்செல்லப்பட்டு, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த யேகாயிடத்தில் கொடுக்கப்பட்டாள். இந்தப் பெண் அவனுக்குப் பிரியமுள்ளவளாயிருந்து அவனிடத்தில் தயவு பெற்றாள். அவன் உடனடியாக அவளுக்கு அழகுபடுத்தும் பொருட்களையும், விசேஷ உணவையும் கொடுத்தான். அவன் அரசனுடைய அரண்மனையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு தோழிகளையும் அவளுக்குக் கொடுத்து, அவளையும், அவளது தோழிகளையும் அந்தப்புரத்தின் மிகச்சிறந்த இடத்துக்கு மாற்றினான். எஸ்தர் தான் எந்த இனம் என்றோ, தனது குடும்ப விபரம் என்னவேன்றோ வெளிப்படுத்தவில்லை. ஏனெனில் மொர்தெகாய் அப்படிச் செய்யவேண்டாம் என்று அவளுக்குச் சொல்லியிருந்தான். ஒவ்வொரு நாளும் மொர்தெகாய் எஸ்தர் எப்படியிருக்கிறாள் என்றும், அவளுக்கு என்ன நடக்கிறது என்றும் அறிவதற்கு அந்தப்புரத்தின் முற்றத்தின் அருகே, அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான். அரசன் அகாஸ்வேருவினிடம் ஒரு பெண் போவதற்கான தன்னுடைய முறை வருவதற்குமுன், அவள் பெண்களுக்காக நியமிக்கப்பட்டிருந்தபடி, பன்னிரண்டு மாத காலம் தன்னை அழகுபடுத்திக் கொள்ளவேண்டும். ஆறு மாதங்களுக்கு வெள்ளைப்போள எண்ணெயாலும், மற்ற ஆறு மாதங்களுக்கு வாசனைத் தைலத்தினாலும், அழகுசாதனப் பொருட்களினாலும் தன்னை அழகுபடுத்த வேண்டும். அவள் அரசனிடம் போகவேண்டியது எப்படியெனில், அவள் அந்தப்புரத்திலிருந்து அரசனுடைய அரண்மனைக்கு தான் எடுத்துச்செல்ல விரும்பிய எதுவும் அவளுக்குக் கொடுக்கப்படும். மாலையில் அவள் அரசனிடம் போய், மறுநாள் காலையில், அந்தப்புரத்தின் இன்னொரு பகுதியில் மறுமனையாட்டிகளுக்குப் பொறுப்பாயிருந்த அரசனுடைய அதிகாரியான சாஸ்காசின் பராமரிப்பில் விடப்படுவாள். ஒருத்தியின்மேல் அரசன் பிரியப்பட்டு அவளைப் பெயர்சொல்லி அழைத்தால் அன்றி, அவள் திரும்பவும் அரசனிடம் போகமுடியாது. மொர்தெகாயின் வளர்ப்பு மகளும், அவனுடைய சிறிய தகப்பன் அபிகாயிலின் மகளுமான எஸ்தர், அரசனிடம் போவதற்கான முறை வந்தபோது, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த அரசனின் அதிகாரியான யேகாய் கொண்டுபோகும்படி சொன்னதைத்தவிர, அவள் வேறு எதையும் கேட்கவில்லை. எஸ்தர் தன்னைக் கண்ட எல்லோரிடமிருந்தும் தயவைப் பெற்றாள். அரசன் அகாஸ்வேருவின் ஆட்சியின் ஏழாம் வருடத்தில் பத்தாவது மாதமாகிய தேபேத் மாதத்தில் அவள் அரசர் குடியிருக்கும் பகுதிக்கு அரசனிடத்தில் அழைத்துச் செல்லப்பட்டாள். அரசன் மற்ற எந்தப் பெண்ணையும் விட, எஸ்தரினால் அதிகமாய் கவரப்பட்டான். அவள் அவனிடமிருந்து மற்ற கன்னிகைகளையும்விட, அதிக தயவையும், பாராட்டையும் பெற்றாள். எனவே அவன் அரச கிரீடத்தை அவள் தலையில் வைத்து வஸ்திக்குப் பதிலாக அவளை அரசியாக்கினான். அரசன் எஸ்தருக்கான விருந்தாக, ஒரு பெரிய விருந்தை எல்லா உயர்குடி மனிதருக்கும், அதிகாரிகளுக்கும் கொடுத்தான். அவன் மாகாணங்கள் எங்கும் ஒரு விடுமுறை நாளை அறிவித்து, அரசனுடைய நிறைவின்படியே அன்பளிப்புகளை வழங்கினான்.

எஸ்தர் 2:5-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது சூசான் அரண்மனையிலே பென்யமீனியனாகிய கீசின் மகன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் மகன் மொர்தெகாய் என்னும் பெயருள்ள ஒரு யூதன் இருந்தான். அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடு எருசலேமிலிருந்து பிடித்து கொண்டுபோகப்பட்டவர்களில் ஒருவனாக இருந்தான். அவன் தன்னுடைய சிறிய தகப்பனின் மகளாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பன் இல்லை; அந்தப் பெண் அழகும் விரும்பத்தக்கவளுமாக இருந்தாள்; அவளுடைய தகப்பனும், தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன்னுடைய மகளாக எடுத்துக்கொண்டான். ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரபலமாகி, அநேக பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரண்மனையிலுள்ள யேகாயினிடத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, பெண்களைக் காவல்காக்கிற யேகாயினிடம் ஒப்புவிக்கப்பட்டாள். அந்தப் பெண் அவனுடைய பார்வைக்கு நன்றாக இருந்ததால், அவளுக்கு அவனுடைய கண்களிலே தயவு கிடைத்தது; ஆகையால் அவளுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரண்மனையில் இருக்கிற ஏழு பணிப்பெண்களை அவளுக்கு நியமித்து கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் வைத்தான். எஸ்தரோ தன்னுடைய மக்களையும், தன்னுடைய உறவினர்களையும் அறிவிக்காமல் இருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான். எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்கும் காரியத்தையும் அறிய மொர்தெகாய் தினந்தோறும் கன்னிமாடத்து முற்றத்திற்கு முன்பாக உலாவுவான். ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதங்கள் வாசனைப்பொருட்களாலும், பெண்களுக்குரிய மற்ற அலங்கரிப்புகளினாலும் அலங்கரிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இப்படியாக பெண்களின் முறையின்படி பன்னிரண்டு மாதங்களாகச் செய்துமுடித்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடம் வர, அவளவளுடைய முறை வருகிறபோது, இப்படி அலங்கரிக்கப்பட்ட பெண் ராஜாவிடம் போவாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடு ராஜ அரண்மனைக்குப் போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவைகளை எல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும். மாலையில் அவள் உள்ளே போய், காலையில், பிடித்த பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய சாஸ்காசுடைய பொறுப்பில் இருக்கிற பெண்களின் இரண்டாம் மாடத்திற்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பெயர்சொல்லி அழைக்கும்வரை அவள் ஒருபோதும் ராஜாவிடம் போகக்கூடாது. மொர்தெகாய் தனக்கு மகளாய் ஏற்றுக்கொண்டவளும், அவனுடைய சிறிய தகப்பனாகிய அபியாயேலின் மகளுமான எஸ்தர் ராஜாவிடம் போவதற்கு முறை வந்தபோது, அவள் பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாய் நியமித்த காரியத்தைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லோருடைய கண்களிலும் தயவு கிடைத்தது. அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருடம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே அரண்மனைக்கு ராஜாவிடம் அழைத்துக்கொண்டு போகப்பட்டாள். ராஜா எல்லாப் பெண்களையும்விட எஸ்தர்மேல் அன்புவைத்தான்; எல்லா கன்னிப்பெண்களையும்விட அவளுக்கு ராஜாவிற்கு முன்பாக அதிக தயவும் இரக்கமும் கிடைத்தது; ஆகையால் ராஜா ராஜகிரீடத்தை அவளுடைய தலையின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் இடத்தில் பட்டத்து ராணியாக்கினான். அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் வேலைக்காரர்களுக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்கும் கரிசனையோடு வரிவிலக்கு உண்டாக்கி, தன்னுடைய கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு வெகுமானங்களைக் கொடுத்தான்.

எஸ்தர் 2:5-18 பரிசுத்த பைபிள் (TAERV)

இப்பொழுது அங்கே மொர்தெகாய் என்னும் பெயருள்ள பென்யமீன் கோத்திரத்திலுள்ள யூதன் ஒருவன் இருந்தான். அவன் யாவீரின் குமாரன். யாவீர், கீசின் குமாரன். மொர்தெகாய், தலைநகரான சூசானில் இருந்தான். மொர்தெகாய் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறை பிடிக்கப்பட்டவன். அவன் யூத ராஜாவாகிய எகொனியாவைச் சிறைபிடித்தபோது அக்குழுவில் இருந்தவன். மொர்தெகாயிடம் அவனது சிறிய தகப்பன் குமாரத்தியாகிய அத்சாள் இருந்தாள். அவளுக்கு தந்தையோ அல்லது தாயோ இல்லை. எனவே மொர்தெகாய் அவளைக் கவனித்து வந்தான். அவளது தந்தையும், தாயும் மரித்தபோது, அவன் அவளை குமாரத்தியாகத் தத்தெடுத்தான். அத்சாள், எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். எஸ்தருக்கு அழகான முகமும், பார்ப்பதற்கு ரூபவதியாகவும் இருந்தாள். ராஜாவின் கட்டளையை கேட்டபோது பல பெண்கள் தலைநகரமான சூசானுக்குக் கொண்டு வரப்பட்டனர். அப்பெண்கள் யேகாயின் பொறுப்பில் விடப்பட்டனர். எஸ்தரும் அவர்களுள் ஒருத்தி. எஸ்தர் ராஜாவின் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டு யேகாயின் பொறுப்பில் விடப்பட்டாள். யேகா, ராஜாவின் பெண்களின் பொறுப்பை ஏற்றிருந்தான். யேகாவுக்கு எஸ்தரைப் பிடித்தது. அவள் அவனது விருப்பத்திற்குரியவளானாள். எனவே யேகா விரைவாக எஸ்தருக்கு அலங்கார பொருட்களையும், சிறப்பான உணவையும் கொடுத்தான். அரண்மனையிலிருந்து யேகா ஏழு தாதிப் பெண்களைத் தேர்ந்தெடுத்து எஸ்தருக்குக் கொடுத்தான். ராஜாவின் பெண்கள் வாழ்கிற சிறப்பான இடத்திற்கு எஸ்தரையும், அவளது ஏழு தாதிப் பெண்களையும் இருக்கச் செய்தான். எஸ்தர் யாரிடமும் தான் யூதகுலத்தைச் சேர்ந்தவள் என்று சொல்லவில்லை. அவள் யாரிடமும் தனது குடும்பப் பின்னணியை பற்றிச் சொல்லவில்லை. ஏனென்றால், மொர்தெகாய் அவ்வாறு சொல்லக் கூடாது என்று சொல்லியிருந்தான். ஒவ்வொரு நாளும் ராஜாவின் பெண்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் மொர்தெகாய் உலாவி வந்தான். எஸ்தர் எப்படி இருக்கிறாள்? அவளுக்கு என்ன நடக்கிறது? என்பதை அறிந்துக்கொள்ளவே அவன் அவ்வாறு செய்தான். ராஜா அகாஸ்வேருவின் முன் போவதற்கு முன்னால், ஒரு பெண் செய்யவேண்டியது இதுதான். அவள் பன்னிரண்டு மாதங்கள் அழகு சிகிக்சை செய்யப்பட்டிருக்கவேண்டும். அதாவது, ஆறு மாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தாலும், ஆறு மாதம் சுகந்தவர்க்கங்களினாலும் பலவகை அலங்காரங்களாலும் அழகு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு பெண் இப்படி அலங்கரிக்கப்பட்டு, ராஜாவிடம் போவாள். கன்னிமாடத்திலிருந்து தன்னுடன் ராஜாவின் அரண்மனைக்கு போக தனக்கு வேண்டுமென்று கேட்டவை எல்லாம் கொடுக்கப்படும். மாலையில், அப்பெண் ராஜாவின் அரண்மனைக்குச் செல்லவேண்டும். காலையில் அவள் இன்னொரு பகுதிக்குத் திரும்பவேண்டும். பிறகு, அவள் சாஸ்காசுடைய பொறுப்பில் வைக்கப்படுவாள். சாஸ்காஸ் ராஜாவினுடைய பிரதானி. அவன் ராஜாவின் ஆசைப் பெண்களின் அதிகாரி. ராஜா விரும்பி அழைத்தால் தவிர எந்த ஒரு பெண்ணும் மீண்டும் ராஜாவிடம் செல்லக் கூடாது. பிறகு ராஜா அவளது பேரைச் சொல்லி திரும்ப வரும்படி அழைக்கலாம். எஸ்தருக்கு ராஜாவிடம் போக வேண்டியமுறை வந்தபோது, அவள் எதையும் கேட்கவில்லை. அவள் யேகா தன்னிடம் எதை எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறினானோ அவற்றை மட்டும் கேட்டாள். அவன் ராஜாவின் பிரதானி. ராஜாவின் பெண்களின் பொறுப்பான அதிகாரி. (எஸ்தர் மொர்தெகாயின் வளர்ப்பு குமாரத்தி. அவனது சிறிய தகப்பனான அபியாயேலின் குமாரத்தி) எஸ்தரைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவளை விரும்பினார்கள். எனவே, எஸ்தர் அரண்மனைக்கு ராஜா அகாஸ்வேருவிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். இது, அவனது ஏழாம் ஆட்சியாண்டில் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்தில் நிகழ்ந்தது. ராஜா, மற்றப் பெண்களை விட எஸ்தரை மிகுதியாக நேசித்தான். அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவன் மற்ற பெண்களைவிட அவளை மிகுதியாக ஏற்றுக்கொண்டான். எனவே, அகாஸ்வேரு ராஜா எஸ்தரின் தலையில் கிரீடத்தை அணிவித்து வஸ்தியின் இடத்தில் அவளைப் புதிய இராணியாகச் செய்தான். ராஜா எஸ்தருக்காக ஒரு பெரிய விருந்தைக் கொடுத்தான். இது அவனது முக்கிய தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்குமாக இருந்தது. எல்லா நாடுகளுக்கும் அவன் அன்று விடுமுறை வழங்கினான். அவன் ஜனங்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தான். ஏனென்றால், அவன் ஒரு தாராளமான குணமுடைய ராஜா.

எஸ்தர் 2:5-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான். அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான். அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான். ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள். அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயை கிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான். எஸ்தரோவென்றால் தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான். எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான். ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்ற சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது, இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும். சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின் இரண்டாம் மாடத்துக்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்­கூடாது, மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறியதகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமான எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது. அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள். ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான். அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.