எஸ்தர் 2:1-7

எஸ்தர் 2:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான். அப்பொழுது ராஜாவைச் சேவிக்கிற அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ரூபவதிகளாயிருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும். அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ஸ்திரீயாகவேண்டும் என்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அப்படியே செய்தான். அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான். அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான். அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.

எஸ்தர் 2:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அகாஸ்வேரு அரசனின் கோபம் தணிந்தபின்பு, அவன் வஸ்தியையும், அவள் செய்ததையும், அவளுக்குத் தான் பிறப்பித்த ஆணையையும் நினைவிற்கொண்டான். அப்பொழுது அரசனின் அந்தரங்க ஏவலாட்கள் கூறிய ஆலோசனையாவது: “அரசனுக்காக அழகிய இளம் கன்னிகைகளைக் தேடிப்பார்ப்போம். சூசானிலுள்ள கோட்டைப் பட்டணத்திலிருக்கும் அந்தப்புரத்திற்கு அந்த அழகிய இளம்பெண்களையெல்லாம் கொண்டுவரும்படி, அரசர் தம்முடைய ஆளுகைக்கு உட்பட்ட, எல்லா நாடுகளிலும் மேற்பார்வையாளர்களை நியமிப்பாராக. பெண்களுக்குப் பொறுப்பாயிருக்கிற, அரசனின் அதிகாரியான யேகாயின் பராமரிப்பின்கீழ் அப்பெண்கள் வைக்கப்படட்டும். அங்கு அவர்கள் அழகுபடுத்தப்படுவார்களாக. பின்பு அரசருக்குப் பிரியமாயிருக்கிற இளம்பெண், வஸ்திக்குப் பதிலாக அரசியாயிருக்கட்டும்” என்றார்கள். இந்த ஆலோசனை அரசனுக்குப் பிரியமாயிருந்ததால், அதை அவன் நடைமுறைப்படுத்தினான். அக்காலத்தில் சூசான் கோட்டைப் பட்டணத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த, மொர்தெகாய் என்னும் பெயருடைய ஒரு யூதன் இருந்தான். இவன் யாவீரின் மகன், யாவீர் சீமேயின் மகன், சீமேயி கீசின் மகன். இந்த மொர்தெகாய், யூதா அரசன் எகொனியாவுடன், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரினால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களோடுகூட நாடு கடத்தப்பட்டிருந்தவன். மொர்தெகாய்க்கு அத்சாள் என்னும் பெயருடைய ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு தாய் தகப்பன் இல்லாததினால் அவளை இவன் வளர்த்தான். அவள் எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். இந்தப் பெண் வடிவத்திலும், தோற்றத்திலும் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய தகப்பனும் தாயும் இறந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் சொந்த மகளாக எடுத்து வளர்த்தான்.

எஸ்தர் 2:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் கோபம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான். அப்பொழுது ராஜாவிற்குப் பணிவிடை செய்கிற அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: அழகாக இருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும். அதற்காக ராஜா தம்முடைய ராஜ்ஜியத்தின் நாடுகளிலெல்லாம் பொறுப்பாளர்களை வைக்கவேண்டும்; இவர்கள் அழகாக இருக்கிற எல்லா கன்னிப்பெண்களையும் ஒன்றுகூட்டி, சூசான் அரண்மனையில் இருக்கிற கன்னிமாடத்திற்கு அழைத்துவந்து, பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாயினிடம் ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி, வஸ்திக்கு பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும் என்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவிற்கு நலமாகத் தோன்றியபடியால் அப்படியே செய்தான். அப்பொழுது சூசான் அரண்மனையிலே பென்யமீனியனாகிய கீசின் மகன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் மகன் மொர்தெகாய் என்னும் பெயருள்ள ஒரு யூதன் இருந்தான். அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடு எருசலேமிலிருந்து பிடித்து கொண்டுபோகப்பட்டவர்களில் ஒருவனாக இருந்தான். அவன் தன்னுடைய சிறிய தகப்பனின் மகளாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பன் இல்லை; அந்தப் பெண் அழகும் விரும்பத்தக்கவளுமாக இருந்தாள்; அவளுடைய தகப்பனும், தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன்னுடைய மகளாக எடுத்துக்கொண்டான்.

எஸ்தர் 2:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

அகாஸ்வேரு ராஜா தன்னுடைய கோபம் தணிந்த பிறகு, வஸ்தி செய்திருந்ததை நினைத்துப் பார்த்தான். அவன் அவளைப் பற்றிய கட்டளையை நினைத்துப் பார்த்தான். பிறகு ராஜாவின் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கு ஒரு கருத்து இருந்தது. அவர்கள், “ராஜாவுக்கு அழகான இளம் கன்னிகளைத் தேட வேண்டும். ராஜா தனது அரசின் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு தலைவனும், ஒவ்வொரு அழகான இளம் கன்னிப் பெண்ணை சூசான் தலைநகரத்திற்கு அழைத்துக் கொண்டு வரவேண்டும். அப்பெண்கள் ராஜாவின் பெண்கள் எனும் குழுவிற்குள் சேர்க்கவேண்டும். அவர்கள் யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட வேண்டும். அவன் ராஜாவின் பிரதானி. அவனே பெண்களுக்கான அதிகாரி. பிறகு அவர்களுக்கு அலங்காரப் பொருட்களைக் கொடுக்கவேண்டும். பிறகு ராஜாவின் கண்களுக்கு ஏற்றப் பெண் வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும்” என்றார்கள். ராஜாவும் இந்தக் கருத்தை விரும்பினான். எனவே, அதனை ஒத்துக்கொண்டான். இப்பொழுது அங்கே மொர்தெகாய் என்னும் பெயருள்ள பென்யமீன் கோத்திரத்திலுள்ள யூதன் ஒருவன் இருந்தான். அவன் யாவீரின் குமாரன். யாவீர், கீசின் குமாரன். மொர்தெகாய், தலைநகரான சூசானில் இருந்தான். மொர்தெகாய் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறை பிடிக்கப்பட்டவன். அவன் யூத ராஜாவாகிய எகொனியாவைச் சிறைபிடித்தபோது அக்குழுவில் இருந்தவன். மொர்தெகாயிடம் அவனது சிறிய தகப்பன் குமாரத்தியாகிய அத்சாள் இருந்தாள். அவளுக்கு தந்தையோ அல்லது தாயோ இல்லை. எனவே மொர்தெகாய் அவளைக் கவனித்து வந்தான். அவளது தந்தையும், தாயும் மரித்தபோது, அவன் அவளை குமாரத்தியாகத் தத்தெடுத்தான். அத்சாள், எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். எஸ்தருக்கு அழகான முகமும், பார்ப்பதற்கு ரூபவதியாகவும் இருந்தாள்.