எஸ்தர் 1:7-22
எஸ்தர் 1:7-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
திராட்சை இரசம், பல்வேறு வகையான தங்கக் கிண்ணங்களில் பரிமாறப்பட்டது. அரசனுடைய தாராள மனதின்படியே அரசருக்குரிய திராட்சை இரசம் நிறைவாயிருந்தது. அரசனுடைய கட்டளைப்படியே எல்லா விருந்தாளிகளும் தாங்கள் விரும்பியபடி குடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஏனெனில், அரசன் தனது திராட்சை இரசப் பொறுப்பாளர்கள் எல்லோருக்கும், ஒவ்வொரு மனிதனும் கேட்கும் அளவு திராட்சை இரசத்தைப் பரிமாறும்படி அறிவுறுத்தியிருந்தான். அகாஸ்வேருவின் அரச அரண்மனையில் இருந்த பெண்களுக்கு அரசி வஸ்தி, தானும் ஒரு விருந்தைக் கொடுத்தாள். ஏழாம்நாளில் அகாஸ்வேரு அரசன் திராட்சை மதுவினால் களிப்புற்றிருக்கும் போது, தனக்குப் பணிசெய்த மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகிய ஏழு அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டு, “அரசி வஸ்தியின் அழகை மக்களுக்கும், உயர்குடி மனிதருக்கும் காண்பிக்கும்படி, அவளுக்கு அரச கிரீடமும் அணிவித்து எனக்குமுன் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். ஏனெனில் அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகுள்ளவளாக இருந்தாள். ஆனால், அந்த ஏவலாளர்கள் அரசனுடைய கட்டளையை அறிவித்தபோது, அரசி வஸ்தி வருவதற்கு மறுத்துவிட்டாள். இதனால் அரசன் சினங்கொண்டான். அவனுடைய கோபம் பற்றியெரிந்தது. சட்டம், நீதி ஆகியவற்றின் விவகாரங்களில், நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது அரசனின் வழக்கமாயிருந்தது. எனவே அவன் காலங்களை விளங்கிக்கொண்ட ஞானிகளுடன் இதுபற்றி பேசினான். மேலும் அரசன் தனக்கு மிகவும் நெருங்கியவர்களாயிருந்த பெர்சிய, மேதிய நாடுகளின் ஏழு இளவரசர்களான மர்சேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோருடனும் பேசினான். இவர்கள் அரசனிடம் செல்வதற்கு விசேஷ அனுமதியுடையவர்களாகவும், அரசில் மிக உயர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். அகாஸ்வேரு அரசன், “அதிகாரிகள் அவளுக்கு அறிவித்திருந்த அரச கட்டளைக்கு அவள் கீழ்ப்படியவில்லை. ஆகவே சட்டத்தின்படி அரசி வஸ்திக்கு என்ன செய்யப்படவேண்டும்?” என்று கேட்டான். அப்பொழுது மெமுகான் அரசனுக்கும், உயர்குடி மனிதருக்கும் முன்னிலையில், “அரசி வஸ்தி அரசனுக்கு மட்டுமல்ல, உயர்குடி மனிதருக்கும், அகாஸ்வேரு அரசனுடைய எல்லா நாடுகளிலுமுள்ள மக்களுக்கும் எதிராக அநியாயம் செய்திருக்கிறாள். அரசியின் நடத்தை எல்லாப் பெண்களுக்கும் தெரியவரும். எனவே அவர்கள் தங்கள் கணவர்களை உதாசீனம் செய்வார்கள். அதோடு, ‘அகாஸ்வேரு அரசன், அரசி வஸ்தியைத் தமக்கு முன்வரும்படி கட்டளையிட்டும் அவள் வரவில்லை’ என்றும் சொல்வார்கள். இந்த நாளிலேயே அரசியினுடைய நடத்தையைக் கேள்விப்பட்டிருக்கிற பெர்சிய, மேதிய நாட்டின் உயர்குலப் பெண்களும் இதேவிதமாகவே அரசனின் உயர்குடி மனிதர் எல்லோருடனும் நடந்துகொள்வார்கள். அவமதிப்புக்கும் எரிச்சலுக்கும் முடிவிருக்காது. “ஆகவே அரசருக்கு விருப்பமானால், வஸ்தி இனியொருபோதும் அரசன் அகாஸ்வேருவின் முன்பாக வரக்கூடாது என்று அரச கட்டளையை அறிவிப்பாராக. அதை மாற்றப்பட முடியாத பெர்சிய, மேதிய சட்டங்களிலும் எழுதி வைப்பாராக. அத்துடன் அவளைவிட மேலான ஒருத்திக்கு அவளுடைய அரச பதவியைக் கொடுப்பாராக. அவ்வாறு அரச கட்டளை அவருடைய பரந்த பிரதேசம் எங்கும் அறிவிக்கப்படும்போது, எல்லா பெண்களும், சிறியோரிலிருந்து பெரியோர்வரை தங்கள் கணவனை மதிப்பார்கள்” என்றான். அரசனுக்கும், அவனுடைய உயர்குடி மனிதருக்கும் இந்த ஆலோசனை பிரியமாயிருந்தது. எனவே மெமுகான் சொன்ன ஆலோசனையின்படியே அரசன் செய்தான். அப்படியே அவன் தனது அரசின் எல்லாப் பகுதிகளுக்கும், “ஒவ்வொரு ஆணும் தன் குடும்பத்தின்மேல் தலைவனாயிருக்க வேண்டும்” என்று கடிதங்களைத் துரிதமாய் அனுப்பினான். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதற்குரிய எழுத்திலும், ஒவ்வொரு மக்களுக்கும் அவர்களுடைய சொந்த மொழியிலும் எழுதி அவர்களுக்கு அறிவித்தான்.
எஸ்தர் 1:7-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பொன்னால் செய்யப்பட்ட பலவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சைரசம் ராஜாவின் கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு பரிபூரணமாகப் பரிமாறப்பட்டது. அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன்னுடைய அரண்மனையின் பெரிய மனிதர்களுக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியால், முறைப்படி குடித்தார்கள்; ஒருவனும் கட்டாயப்படுத்தவில்லை. ராணியாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரண்மனையிலே பெண்களுக்கு ஒரு விருந்தளித்தாள். ஏழாம் நாளிலே ராஜா திராட்சைரசத்தினால் சந்தோஷமாக இருக்கும்போது, பேரழகியாயிருந்த ராணியாகிய வஸ்தியின் அழகை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் காண்பிப்பதற்காக, ராஜகிரீடம் அணிந்தவளாக, அவளைத் தனக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று, ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் பணிவிடை செய்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் ராஜா கட்டளையிட்டான். ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராணியாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே எரிச்சல் அடைந்தான். அந்த சமயத்தில் ராஜசமுகத்தில் இருக்கிறவர்களும், ராஜ்ஜியத்தின் முதன்மை ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர்கள் மேதியர்களுடைய ஏழு பிரபுக்களும் அவன் அருகில் இருந்தார்கள். ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடம் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால செயல்பாடுகளை அறிந்த பண்டிதர்களை நோக்கி: ராஜாவாகிய அகாஸ்வேரு அதிகாரிகளின் மூலமாகச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராணியாகிய வஸ்தி செய்யாமற்போனதினால், தேசத்தின் சட்டப்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான். அப்பொழுது மெமுகான் ராஜாவிற்கும் பிரபுக்களுக்கும் முன்னே மறுமொழியாக: ராணியாகிய வஸ்தி ராஜாவிற்கு மட்டும் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய எல்லா நாடுகளிலுமுள்ள எல்லாபிரபுக்களுக்கும் எல்லா மக்களுக்குங்கூட அநியாயம் செய்தாள். ராஜாவாகிய அகாஸ்வேரு ராணியாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டேன் என்று சொன்ன செய்தி எல்லாப் பெண்களுக்கும் தெரியவந்தால், அவர்களும் தங்களுடைய கணவன்களைத் தங்களுடைய பார்வையில் அற்பமாக நினைப்பார்கள். இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் பெண்கள் ராணியின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும். ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைவிட சிறந்த மற்றொரு பெண்ணுக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை அனுப்பி, அது மீறப்படாதபடி, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசத்தின் சட்டத்திலும் எழுதப்படவேண்டும். இப்படி ராஜா முடிவெடுத்த காரியம் தமது ராஜ்ஜியமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லாப் பெண்களும் தங்கள் கணவன்களை மதிப்பார்கள் என்றான். இந்த வார்த்தை ராஜாவிற்கும் பிரபுக்களுக்கும் நலமாகத் தோன்றியதால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து, எந்த கணவனும் தன்னுடைய வீட்டிற்குத் தானே அதிகாரியாக இருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த மக்களுடைய மொழியிலே அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற சொந்த எழுத்திலும், அந்தந்த தேசத்தில் பேசுகிற மொழிகளிலும், ராஜாவின் எல்லா நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.
எஸ்தர் 1:7-22 பரிசுத்த பைபிள் (TAERV)
பொற்கிண்ணங்களில் திராட்சைரசம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கிண்ணமும் வித்தியாசமாக இருந்தது! அங்கே முதல் தரமான திராட்சைரசம் ராஜாக்களுக்கு ஏற்ற வகையில் தாராளமாகக் கொடுக்கப்பட்டது. ராஜா தனது வேலைக்காரர்களுக்கு ஒரு கட்டளை இட்டிருந்தான். ஒவ்வொரு விருந்தாளியும் அவரது விருப்பம்போல் திராட்சைரசத்தைக் குடிக்கட்டும் என்று சொல்லியிருந்தான். திராட்சைரசம் பரிமாறுபவன் ராஜாவுக்குக் கீழ்ப்படிந்தான். ராஜாவின் அரண்மனையில் இராணி வஸ்தியும் பெண்களுக்கு ஒரு விருந்து கொடுத்தாள். விருந்தின் ஏழாவது நாளில், அகாஸ்வேரு ராஜா திராட்சைரசத்தால் உச்சப் போதையில் இருந்தான். அவன் ஏழு பிரதானிகளுக்குக் கட்டளையிட்டான். அந்த பிரதானிகள், மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகியோர். அவன் இந்த ஏழு பேரிடம் இராணி வஸ்தியை இராஜகிரீடம் அணிவித்து அழைத்துவருமாறு கட்டளையிட்டான். அவள் அழகை முக்கியமான ஜனங்களுக்கும், தலைவர்களுக்கும் காட்டவேண்டும் என்று ராஜா விரும்பினான். ஏனென்றால் அவள் மிகவும் அழகாக இருந்தாள். ஆனால், அந்த வேலைக்காரர்கள் போய் இராணி வஸ்தியிடம் ராஜாவின் கட்டளையைச் சொன்னதும் அவள் வரமறுத்தாள். அதனால் ராஜா மிகவும் கோபம்கொண்டான். சட்டம் மற்றும் தண்டனையைப்பற்றிய ஆலோசனைகளை தேர்ந்தவர்களிடம் கேட்பது ராஜாவின் வழக்கம். எனவே, ராஜா அகாஸ்வேரு சட்டங்களைப் புரிந்துகொண்ட ஞானிகளிடம் பேசினான். அந்த ஞானிகள் ராஜாவுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோர். இவர்கள் பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள ஏழு முக்கியமான அதிகாரிகள். அவர்களுக்கு ராஜாவைப் பார்க்கச் சிறப்பு சலுகைகள் உண்டு. அவர்கள் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தனர். ராஜா அவர்களிடம், “இராணி வஸ்தியை என்ன செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது? ராஜா அகாஸ்வேருவின் கட்டளையை பிரதானிகள் கொண்டுபோனபோது அதற்கு அவள் அடிபணியவில்லை” என்று சொன்னான். பிறகு, மெமுகான் மற்ற அதிகாரிகள் கவனித்துக்கொண்டிருக்கையில், “இராணி வஸ்தி தவறு செய்தாள். அவள் ராஜாவுக்கு எதிராகவும், எல்லா தலைவர்களுக்கு எதிராகவும், அகாஸ்வேரு ராஜாவின் அரசாட்சியில் உள்ள எல்லா ஜனங்களுக்கு எதிராகவும் தவறு செய்தாள். மற்ற எல்லாப் பெண்களும் இராணி வஸ்தி செய்ததை கேள்விப்படுவார்கள். பிறகு அவர்கள் தம் கணவர்களுக்கு அடிபணிவதை நிறுத்துவார்கள். அவர்கள் தம் கணவர்களிடம், ‘ராஜா அகாஸ்வேரு இராணி வஸ்தியை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். ஆனால் அவள் வர மறுத்துவிட்டாள்’ என்பார்கள். “இன்றைக்கு பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள தலைவர்களின் மனைவிகளும் இராணி செய்ததைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அப்பெண்களும் இராணியின் செயலால் தூண்டப்படுவார்கள். அப்பெண்களும் ராஜாவின் முக்கிய தலைவர்களுக்கு அவ்வாறே செய்வார்கள். அதனால் மிகுதியான மதிப்பின்மையும் கோபமும் பிறக்கும். “எனவே ராஜாவுக்கு விருப்பமானால், நான் ஒரு கருத்தைக் கூறுகிறேன். ராஜா ஒரு அரச கட்டளையைக் கொடுக்கலாம். அது பெரிசியா மற்றும் மேதியாவிற்குச் சட்டமாக எழுதப்படலாம். பெர்சியா மற்றும் மேதியாவின் சட்டங்கள் மாற்ற முடியாதவை. வஸ்தி மீணடும் ராஜா அகாஸ்வேருவுக்கு முன்னால் வரக்கூடாது என்பதுதான் அரச கட்டளையாக இருக்கவேண்டும். அதோடு ராஜா அவளைவிடச் சிறந்த பெண்ணுக்கு இராணியின் உயர் இடத்தைக் கொடுக்கவேண்டும். பிறகு ராஜாவின் கட்டளை அவனது பெரிய நாடு முழுவதும் அறிவிக்கப்படும்போது, பெரியோர் முதல் சிறியோர் வரையுள்ள எல்லாப் பெண்களும் தம் கணவர்களை மதிப்பார்கள்” என்று பதில் சொன்னான். ராஜாவும் அவனுடைய முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனையால் பெரிதும் மகிழ்ந்தனர். எனவே அகாஸ்வேரு ராஜா மெமுகானின் ஆலோசனையின்படிச் செய்தான். ராஜா அகாஸ்வேரு தனது அரசிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் கடிதம் அனுப்பினான். அவன் அக்கடிதங்களை ஒவ்வொரு பகுதிக்கும் அதன் சொந்த மொழியிலேயே எழுதி அனுப்பினான். அவன் அக்கடிதங்களை ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் மொழியிலேயே எழுதி அனுப்பினான். அக்கடிதங்கள் ஒவ்வொரு மனிதனின் மொழியிலும் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தன் குடும்பத்தை ஆள்பவனாக இருக்க வேண்டும்.
எஸ்தர் 1:7-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது. அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால், முறைப்படி பானம்பண்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம்பண்ணவில்லை. ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள். ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகாரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் செளந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று, ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான். ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான். அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள். ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி: ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான். அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்கு மாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள். ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள். இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் ஸ்திரீகள் ராஜஸ்திரீயின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும். ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப் பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும். இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரணமான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான். இந்த வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினதினால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து, எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத் தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.