எஸ்தர் 1:1-6

எஸ்தர் 1:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அகாஸ்வேரு அரசனின் காலத்தில் நிகழ்ந்தது இதுவே: இந்த அகாஸ்வேரு இந்திய தேசம் முதல் எத்தியோப்பியாவரை பரந்திருந்த நூற்றிருபத்தேழு மாகாணங்களை ஆளுகை செய்தான். அக்காலத்தில் அகாஸ்வேரு அரசன் சூசான் கோட்டைப் பட்டணத்திலுள்ள தனது அரச அரியணையிலிருந்து அரசாட்சி செய்தான். அவன் தனது ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் தனது உயர்குடி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் விருந்தொன்றைக் கொடுத்தான். அதற்கு பெர்சியா, மேதியா ஆகிய நாடுகளின் இராணுவத் தலைவர்களும், இளவரசர்களும், மாகாணங்களின் உயர்குடி மக்களும் வந்திருந்தார்கள். நூற்றெண்பது நாட்களாக அவன் தனது அரசின் திரளான செல்வத்தையும், தனது சிறப்பையும் மகிமையையும், மாட்சிமையையும் காண்பித்தான். இந்த நாட்கள் முடிவடைந்தபின், அரச அரண்மனையில் சுற்றிலும் அடைக்கப்பட்ட தோட்டத்தில், ஒரு விருந்தைக் கொடுத்தான். அது ஏழுநாட்களுக்கு நீடித்தது. சூசான் கோட்டைப் பட்டணத்தில் இருந்த சிறியோர் பெரியோரான சகல மக்களையும் அதற்கு அழைத்திருந்தான். அந்தத் தோட்டத்தில் வெள்ளை மற்றும் நீல நிறங்களினாலான பஞ்சுநூல் திரைகள் போடப்பட்டிருந்தன. அவை வெள்ளை மென்பட்டினாலும், செம்பட்டினாலும் செய்யப்பட்ட நாடாக்களினால் பளிங்கு தூண்கள் மேலுள்ள வெள்ளி வளையங்களில் கட்டப்பட்டிருந்தன. வெண்ணிறக் கல், பளிங்குக் கல், முத்துச் சிப்பிகள், விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்கள், பதிக்கப்பட்ட பளபளப்பான மேடையில், தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

எஸ்தர் 1:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இந்திய தேசம் முதல் கூஷ் தேசம்வரையுள்ள 127 நாடுகளையும் அரசாட்சி செய்த அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது: ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரண்மனையில் இருக்கிற தன்னுடைய ராஜ்ஜியத்தின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருந்தான். அவனுடைய அரசாட்சியின் மூன்றாம் வருடத்திலே தன்னுடைய அதிகாரிகளுக்கும் வேலைக்காரர்களுக்கும் விருந்தளித்தான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் ஆளுனர்களும், பிரபுக்களும், அவனுடைய சமுகத்தில் வந்திருந்தார்கள். அவன் தன்னுடைய ராஜ்ஜியத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன்னுடைய மகத்துவத்தின் மகிமையான பெருமைகளையும் 180 நாட்கள்வரையும் காண்பித்துக்கொண்டிருந்தான். அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரண்மனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லா மக்களுக்கும் ராஜ அரண்மனையைச்சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழு நாட்கள் விருந்தளித்தான். அங்கே வெண்கலத் தூண்களின்மேலே உள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.

எஸ்தர் 1:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

அகாஸ்வேரு ராஜாவாக இருந்த காலத்தில் இது நடைபெற்றது. அகாஸ்வேரு இந்தியா முதல் எத்தியோப்பியா வரையுள்ள 127 நாடுகளை ஆண்டான். ராஜா அகாஸ்வேரு சூசான் என்ற தலைநகரில் சிங்காசனத்திலிருந்து அரசாண்டான். அகாஸ்வேருவின், மூன்றாவது ஆட்சியாண்டில், அவன் தனது அதிகாரிகளுக்கும், பிரபுக்களுக்கும் விருந்து கொடுத்தான். படை அதிகாரிகளும், பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள முக்கிய தலைவர்களும் அங்கே இருந்தனர். விருந்தானது 180 நாட்களுக்குத் தொடர்ந்தன. அந்தக்காலம் முழுவதும் அகாஸ்வேரு ராஜா தனது இராஜ்யத்தின் செல்வச் சிறப்பைக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் ஒவ்வொருவரிடமும் தன் அரண்மனையின் கம்பீரமான அழகையும், செல்வத்தையும் காட்டிக் கொண்டிருந்தான். அந்த 180 நாட்களும் முடிந்தபோது, அகாஸ்வேரு ராஜா இன்னொரு விருந்தை ஏழு நாட்கள் தொடர்ந்து கொடுத்தான். அந்த விருந்து அரண்மனை தோட்டத்திற்குள்ளே நடைபெற்றது. சூசான் தலைநகரத்தில் உள்ள அனைத்து முக்கியமானவர்களும், முக்கியமற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனார். அந்த உள்தோட்டத்தில் அறையைச் சுற்றி வெள்ளையும், நீலமுமான மெல்லிய திரைகள் தொங்கின. அத்தொங்கல்கள் வெண்கலத் தூண்களிலே, வெள்ளி வளையங்களில், மெல்லிய நூலும், சிவப்பு நூலுமான கயிறுகளால் கட்டப்பட்டிருந்தன. அங்கே பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட இருக்கைகள் இருந்தன. அவை சிவப்பும், நீலமும், வெள்ளையும், கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின் மேல் வைக்கப்பட்டிருந்தன.

எஸ்தர் 1:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இந்து தேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது: ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான். அவன் தன் ராஜ்யபாரத்தின் மூன்றாம் வருஷத்திலே தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்துபண்ணினான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும், அவன் சமுகத்தில் வந்திருந்தார்கள். அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பது நாளளவும் விளங்கச் செய்துகொண்டிருந்தான். அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச்சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான். அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தன.