எபேசியர் 6:10-20

எபேசியர் 6:10-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறுதியாக, கர்த்தரிலும், அவருடைய பெரிதான வல்லமையில் பெலப்பட்டிருங்கள். நீங்கள் பிசாசின் எல்லாவித தந்திரங்களை எதிர்த்து நிற்கக் கூடியவர்களாய் இருக்கும்படி, இறைவனின் முழுப் போர்க்கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். ஏனெனில், நமது போராட்டம் மனித எதிரிகளோடு அல்ல. அது தீமையான ஆட்சியாளர்களுக்கும், காணக்கூடாத உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருள் உலகில் ஆட்சிசெய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதுமாய் இருக்கிறது; அது வான மண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கும் எதிரானதாயிருக்கிறது. எனவே, தீமையின் நாள் வரும்போது, எதிரியின் தாக்குதலை எதிர்த்து நிற்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு, வெற்றி பெற்று உறுதியுடன் நிலைநிற்கவும், இறைவனின் முழுப் போர்கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். உங்கள் இடுப்பைச் சுற்றி, சத்தியம் என்னும் இடைக்கச்சையைக் கட்டிக்கொண்டு. நீதி ஆகிய மார்கவசத்தை அணிந்துகொண்டு, உறுதியாய் நில்லுங்கள். சமாதானத்தின் நற்செய்தியை அறிவிக்கும் ஆயத்தத்தை உங்கள் பாதரட்சைகளாகப் போட்டுக்கொள்ளுங்கள். இவை எல்லாவற்றிலும், விசுவாசம் என்னும் கேடயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டே, தீமைசெய்பவன் எய்துவிடும் நெருப்பு அம்புகளை உங்களால் அணைத்துவிட முடியும். இரட்சிப்பைத் தலைக்கவசமாக அணிந்துகொள்ளுங்கள். இறைவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த ஆவியானவரின் வாளை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா விதமான வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு மன்றாடுங்கள். இதை மனதில்கொண்டு, விழிப்புணர்வுள்ளவர்களாய் இருங்கள். எல்லாப் பரிசுத்தவான்களுக்காகவும் எப்பொழுதும் மன்றாடுங்கள். எனக்காகவும் மன்றாடுங்கள், நான் செய்தி கொடுக்கும் போதெல்லாம் இறைவன் எனக்கு நற்செய்தியின் இரகசியத்தை பயமின்றி எடுத்துக்கூற வார்த்தைகளைக் கொடுக்கும்படி மன்றாடுங்கள். அந்த நற்செய்திக்காகவே நான் இப்பொழுது விலங்கிடப்பட்ட ஒரு தூதுவனாக இருக்கிறேன். நான் பேசவேண்டிய விதமாய் பயமின்றி அறிவிக்க மன்றாடுங்கள்.

எபேசியர் 6:10-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கடைசியாக, என் சகோதரர்களே, கர்த்தரிலும் அவருடைய வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள். ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எனவே, தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்தவர்களாக நிற்கவும் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்; சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணிகளைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்; சாத்தான் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள். இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதினால் மிகுந்த மனஉறுதியோடும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கான வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற பிரதிநிதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியதைத் தைரியமாகப் பேசவும், நான் தைரியமாக என் வாயைத் திறந்து நற்செய்தியின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.

எபேசியர் 6:10-20 பரிசுத்த பைபிள் (TAERV)

இறுதியாக நான் எழுதுவது யாதெனில்: அவரது பெரும் பலத்தால் நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். அவரது முழு ஆயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு உங்களால் சாத்தானின் தந்திரங்களை எதிர்த்துப் போராட முடியும். நமது போராட்டம் பூமியிலுள்ள மக்களை எதிர்த்தல்ல. நாம் இருட்டில் உள்ள ராஜாக்களையும், அதிகாரிகளையும், அதிகாரங்களையும் எதிர்த்தே போராடுகிறோம். வானமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கு எதிராகப் போர் செய்கிறோம். அதனால்தான் தேவனின் முழுக் கவசங்களும் உங்களுக்குத் தேவை. அப்போது தான் உங்களால் தீங்கு நாளில் எதிர்த்து பலத்துடன் இருக்க முடியும். போர் முடித்த பிறகும் வல்லமையுடன் நிற்கமுடியும். எனவே உண்மை என்னும் இடுப்புக் கச்சையைக் கட்டிக்கொண்டு வலிமையாகுங்கள். சரியான வாழ்க்கை என்னும் கவசத்தை உங்கள் மார்பில் அணிந்துகொள்ளுங்கள். சமாதானத்தின் நற்செய்தி என்னும் செருப்புகளை உங்கள் கால்களில் அணிந்துகொண்டு முழு தயார் நிலையில் நில்லுங்கள். நம்பிக்கை என்னும் கேடயத்தைக் கைகளில் தாங்கிக்கொள்ளுங்கள். சாத்தான் எறியும் அம்புகளை அதனால் தடுத்துவிட முடியும். தேவனின் வார்த்தை என்னும் தலைக்கவசத்தை அணிந்துகொள்க! ஆவி என்னும் வாளை எடுத்துக்கொள்க. அது தேவனின் போதகங்களாகும். எப்பொழுதும் ஆவிக்குள் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா வகையான பிரார்த்தனைகளையும் செய்து உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கேளுங்கள். இதனைச் செய்வதற்கு எப்பொழுதும் தயாராக இருங்கள். ஒருபோதும் மனம் தளராதீர்கள். எப்பொழுதும் தேவனுடைய எல்லாப் பிள்ளைகளுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள், அப்பொழுது நான் பேசும்போது தேவன் எனக்கு வார்த்தைகளைக் கொடுப்பார். நான் அச்சம் இல்லாமல் சுவிசேஷத்தின் இரகசிய உண்மைகளைப் போதிக்க வேண்டும். நற்செய்தியைப் போதிக்கும் பணி என்னுடையது. அதை இப்பொழுது சிறைக்குள் இருந்து செய்கிறேன். இதற்கான தைரியத்தை நான் பெற்றுக்கொள்ள எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.

எபேசியர் 6:10-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.

எபேசியர் 6:10-20

எபேசியர் 6:10-20 TAOVBSIஎபேசியர் 6:10-20 TAOVBSIஎபேசியர் 6:10-20 TAOVBSIஎபேசியர் 6:10-20 TAOVBSIஎபேசியர் 6:10-20 TAOVBSIஎபேசியர் 6:10-20 TAOVBSIஎபேசியர் 6:10-20 TAOVBSIஎபேசியர் 6:10-20 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்