எபேசியர் 6:1-8
எபேசியர் 6:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பிள்ளைகளே, நீங்கள் கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாக, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே சரியானது. “உங்கள் தகப்பனையும், தாயையும் மதித்து நடவுங்கள்.” இதுவே வாக்குத்தத்தத்துடன் சேர்த்துக்கொடுக்கப்பட்ட முதலாவது கட்டளை. “மதித்து நடந்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். நீங்களும் இந்தப் பூமியில் நீடித்து வாழ்வீர்கள்” என எழுதப்பட்டிருக்கிறது. தந்தையரே, உங்கள் பிள்ளைகளைக் கோபமூட்டாதீர்கள்; பிள்ளைகளைக் கர்த்தரின் பயிற்சியிலும், அறிவுறுத்தல்களிலும் வளர்த்திடுங்கள். அடிமைகளே, இந்தப் பூமியில் உங்களுக்கு எஜமான்களாய் இருக்கிறவர்களுக்கு பயத்துடனும் மரியாதையுடனும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல, அவர்களுக்கு உண்மையான மனதுடன் கீழ்ப்படியுங்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும் அப்படிக் கீழ்ப்படியாமல், உங்கள் முழு இருதயத்தோடும் இறைவனுடைய சித்தத்தைச் செய்யும் கிறிஸ்துவின் அடிமைகளைப்போல கீழ்ப்படியுங்கள். நீங்கள் மனிதருக்கு பணிசெய்கிறவர்களைப் போலல்லாமல், கர்த்தருக்குப் பணிசெய்கிறவர்களாக, முழு இருதயத்துடனும் உங்கள் பணியைச் செய்யுங்கள். ஏனெனில் ஒருவன் அடிமையாயினும் சுதந்திரமுடையவனாயினும் அவனவன் செய்கின்ற நன்மைக்குப் பதிலாக, கர்த்தர் ஒவ்வொருவனுக்கும் அதற்குரிய பலனைக் கொடுப்பார் என்பது உங்களுக்குத் தெரியும்.
எபேசியர் 6:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது. உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் ஆயுசுநாட்கள் அதிகரிப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே தேவன் வாக்குத்தத்தம்பண்ணின முதலாம் கட்டளையாக இருக்கிறது. தகப்பன்மார்களே, நீங்களும் உங்களுடைய பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற ஒழுக்கத்திலும் போதனையிலும் அவர்களை வளர்த்துங்கள். வேலைக்காரர்களே, நீங்கள் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் மரியாதையோடும் நேர்மையுள்ள மனதோடும் கீழ்ப்படிந்து; மனிதர்களுக்குப் பிரியமாக இருக்கவிரும்புகிறவர்களாக அவர்களுடைய பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக, மனப்பூர்வமாக தேவனுடைய விருப்பத்தின்படி செய்யுங்கள். அடிமையானவன் என்றாலும், சுதந்திரமானவன் என்றாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை பெறுவான் என்று அறிந்து, மனிதருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்லமனதோடு ஊழியம் செய்யுங்கள்.
எபேசியர் 6:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)
பிள்ளைகளே கர்த்தர் விரும்புவது போல நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே நீங்கள் செய்ய வேண்டிய சரியான செயலாகும். “நீங்கள் உங்களுடைய தாய்க்கும் தகப்பனுக்கும் மரியாதை கொடுக்கவேண்டும்” என்று கட்டளை கூறுகிறது. இதுதான் முதல் கட்டளை. அதிலே ஒரு வாக்குறுதி உள்ளது. “பிறகு எல்லாம் உங்களுக்கு நல்லதாகும். நீங்கள் பூமியில் நீண்ட வாழ்வைப் பெறுவீர்கள்!” என்பது தான் அந்த வாக்குறுதி. தந்தைமார்களே! உங்கள் குழந்தைகளைக் கோபப்படுத்தாதீர்கள். கர்த்தருக்கேற்ற கல்வியாலும், பயிற்சியாலும் அவர்களை மேலான நிலைக்குக் கொண்டு வாருங்கள். அடிமைகளே பூமியில் உள்ள உங்கள் எஜமானர்களுக்கு அச்சத்தோடும், மரியாதையோடும் கீழ்ப்படிந்திருங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போன்று உண்மையான மனதோடு கீழ்ப்படியுங்கள். அவர்கள் கவனித்துக்கொண்டு இருக்கும்போது மட்டும் நல்லெண்ணத்தைப் பெற உங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியக் கூடாது; நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போலக் கீழ்ப்படியுங்கள். தேவன் விரும்புவதை நீங்கள் முழு மனதுடன் செய்யுங்கள். உங்கள் வேலையைச் செய்யுங்கள். சந்தோஷமாய் செய்யுங்கள். கர்த்தருக்கு சேவை செய்வதுபோல எண்ணுங்கள். மனிதருக்கு சேவை செய்வதாக எண்ணாதீர்கள். அவரவர் செய்யும் நற்செயலுக்கு ஏற்றபடி ஒவ்வொருவருக்கும் கர்த்தர் பலன் தருவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் அடிமைகள்போல இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஒவ்வொருவரும் தத்தம் நற்செயலுக்கு ஏற்றபடி பலன்களைப் பெறுவர்.
எபேசியர் 6:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து; மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.