எபேசியர் 5:8-17

எபேசியர் 5:8-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.

எபேசியர் 5:8-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில் ஒருகாலத்தில் நீங்கள் இருளாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, கர்த்தரில் வெளிச்சமாய் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழுங்கள். வெளிச்சத்தின் கனியோ, எல்லா நன்மைகளையும், நீதியையும், உண்மையையும் கொண்டிருக்கிறது. எனவே கர்த்தருக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடியது எது என்று அறிந்துகொள்ளுங்கள். இருளுக்குரிய பயனற்ற செயல்களில் பங்காளர்களாய் இருக்கவேண்டாம். அவைகளை வெளியரங்கமாக்குங்கள். ஏனெனில், கீழ்ப்படியாதவர்கள் இரகசியமாக செய்கின்ற காரியங்களைக் குறித்துப் பேசுவதுகூட வெட்கத்துக்குரியதாய் இருக்கிறது. எல்லாக் காரியங்களும் வெளிச்சத்தினால் வெளிப்படுத்தப்படும்போது, மறைந்திருந்தவைகள் தெரியவருகின்றன. ஏனெனில், வெளிச்சமே எல்லாவற்றையும் தெளிவாய் வெளிப்படுத்துகிறது. அதனால்தான் இப்படி சொல்லப்பட்டுள்ளது: “நித்திரை செய்பவனே விழித்தெழு, இறந்தவர்களை விட்டு உயிர்த்தெழு, கிறிஸ்து உன்மேல் பிரகாசிப்பார்.” எனவே நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதைக்குறித்து கவனமாயிருங்கள். ஞானமற்றவர்களைப்போல் வாழவேண்டாம், ஞானமுள்ளவர்களாய் வாழுங்கள். நாட்கள் தீயதாய் இருப்பதனால், கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மூடத்தனம் உள்ளவர்களாய் இருக்கவேண்டாம். கர்த்தரின் சித்தம் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

எபேசியர் 5:8-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

முற்காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள். வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும். கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள். அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே. அவைகள் எல்லாம் வெளிச்சத்தினால் வெளியாக்கப்படும்; வெளியாக்கப்படுவது எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது. எனவே, தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார் என்று சொல்லியிருக்கிறார். எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு, நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள்.

எபேசியர் 5:8-17 பரிசுத்த பைபிள் (TAERV)

கடந்த காலத்தில் நீங்கள் இருளில் இருந்தீர்கள். இப்பொழுது தேவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளைப் போன்று நடக்கவேண்டும். வெளிச்சமானது எல்லாவகையான நன்மைகளையும், சரியான வாழ்க்கையையும், உண்மையையும் கொண்டு வரும். தேவனுக்கு விருப்பமானது எது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். இருட்டில் வாழ்பவர்கள் செய்கின்ற பாவங்களை எல்லாம் நீங்கள் செய்யாதீர்கள். அவற்றைச் செய்வதால் உங்களுக்கு நன்மை வருவதில்லை. இருட்டில் செய்யப்படுபவை எல்லாம் தவறானவை என்பதை எடுத்துக்காட்ட நீங்கள் நற்செயல்களைச் செய்யுங்கள். அவர்கள் இருட்டில் இரகசியமாகச் செய்பவற்றைக் குறிப்பிடுவது கூட வெட்கப்படத்தக்கது ஆகும். அவற்றை நாம் தவறானவை என்று காட்டும்பொழுது அவற்றை எளிதாகப் பார்ப்பதற்கு வெளிச்சம் உதவும். எளிதாகப் பார்ப்பதுபோல் இருக்கிற எல்லாப் பொருள்களும் தமக்குள் வெளிச்சமுடையதாகிவிடும். அதனால்தான் நாம் கூறுகிறோம். “தூங்குகிறவர்களே எழும்புங்கள், மரணத்திலிருந்து எழும்புங்கள். கிறிஸ்து உங்கள் மீது பிரகாசமாயிருப்பார்.” எனவே எப்படி வாழ்வது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். ஞானம் இல்லாதவர்கள் வாழ்வது போன்று வாழாதீர்கள். ஞானத்தோடு வாழுங்கள். நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நற்செயல்களைச் செய்யுங்கள். ஏனென்றால் நாம் கெட்ட காலங்களில் வாழ்கிறோம். ஆகையால் முட்டாள்தனமாக உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். பிதா உங்களிடம் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.