எபேசியர் 5:1-16
எபேசியர் 5:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகவே நீங்கள் இறைவனுடைய அன்பான பிள்ளைகளாய் இருப்பதனால், இறைவனைப்போல் நடவுங்கள். கிறிஸ்து நம்மில் அன்பாயிருந்ததினால், இறைவனுக்கு நறுமணமுள்ள காணிக்கையாயும், பலியாயும் நமக்காகத் தம்மைக் கொடுத்தார். அதுபோலவே நீங்களும் அன்புள்ள வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் மத்தியில் விபசாரம், பாலியல் ஒழுக்கக்கேடு, பேராசை ஆகிய எந்தவொரு அசுத்தமும் இருக்கக்கூடாது. இறைவனுடைய பரிசுத்த மக்களுக்கு இவை தகுதியற்றதானபடியால், இவற்றைப்பற்றினப் பேச்சே உங்களுக்குள் அடிபடக்கூடாது. அவ்வாறே வெட்கமான செயலும், மூடத்தனமான பேச்சுகளும், கீழ்த்தரமான பரியாசங்களும் உங்களுக்கு ஏற்றதல்ல. இறைவனுக்கு நன்றி செலுத்துவதே உங்களுக்குத் தகுதியானது. ஒழுக்கக்கேடாய் நடக்கிறவனோ, தூய்மையற்றவனோ, இறைவன் அல்லாதவைகளை வணங்குகிறவனுக்கு ஒப்பான பேராசைக்காரனோ, கிறிஸ்துவுக்கும் இறைவனுக்கும் உரிய அரசில் எவ்வித உரிமைப்பங்கும் பெறுவதில்லை. இதை நிச்சயமாய் அறிந்துகொள்ளுங்கள். வீணான வார்த்தைகளினால் ஒருவரும் உங்களை ஏமாற்ற இடமளிக்காதீர்கள். இப்படிப்பட்டவற்றின் நிமித்தமே இறைவனுடைய கோபம், அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள்மேல் வருகிறது, எனவே இப்படிப்பட்டவர்களோடு பங்காளர்களாய் இருக்கவேண்டாம். ஏனெனில் ஒருகாலத்தில் நீங்கள் இருளாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, கர்த்தரில் வெளிச்சமாய் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழுங்கள். வெளிச்சத்தின் கனியோ, எல்லா நன்மைகளையும், நீதியையும், உண்மையையும் கொண்டிருக்கிறது. எனவே கர்த்தருக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடியது எது என்று அறிந்துகொள்ளுங்கள். இருளுக்குரிய பயனற்ற செயல்களில் பங்காளர்களாய் இருக்கவேண்டாம். அவைகளை வெளியரங்கமாக்குங்கள். ஏனெனில், கீழ்ப்படியாதவர்கள் இரகசியமாக செய்கின்ற காரியங்களைக் குறித்துப் பேசுவதுகூட வெட்கத்துக்குரியதாய் இருக்கிறது. எல்லாக் காரியங்களும் வெளிச்சத்தினால் வெளிப்படுத்தப்படும்போது, மறைந்திருந்தவைகள் தெரியவருகின்றன. ஏனெனில், வெளிச்சமே எல்லாவற்றையும் தெளிவாய் வெளிப்படுத்துகிறது. அதனால்தான் இப்படி சொல்லப்பட்டுள்ளது: “நித்திரை செய்பவனே விழித்தெழு, இறந்தவர்களை விட்டு உயிர்த்தெழு, கிறிஸ்து உன்மேல் பிரகாசிப்பார்.” எனவே நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதைக்குறித்து கவனமாயிருங்கள். ஞானமற்றவர்களைப்போல் வாழவேண்டாம், ஞானமுள்ளவர்களாய் வாழுங்கள். நாட்கள் தீயதாய் இருப்பதனால், கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
எபேசியர் 5:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள். மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது. அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது. விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிப்பட்டவர்களோடு சேராமல் இருங்கள். முற்காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள். வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும். கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள். அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே. அவைகள் எல்லாம் வெளிச்சத்தினால் வெளியாக்கப்படும்; வெளியாக்கப்படுவது எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது. எனவே, தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார் என்று சொல்லியிருக்கிறார். எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு, நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
எபேசியர் 5:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)
நீங்கள் தேவனால் நேசிக்கப்படுகிற அவரது பிள்ளைகள். எனவே தேவனைப் போல ஆக முயலுங்கள். அன்புக்குரிய ஒரு வாழ்க்கையை வாழுங்கள். கிறிஸ்து நம்மை நேசித்தது போலவே மற்றவர்களை நேசியுங்கள். கிறிஸ்து தம்மையே நமக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார். இனிய நறுமணம் உடைய காணிக்கையாகவும், பலியாகவும் தேவனுக்குத் தம்மைத் தந்தார். ஆனால் உங்களிடையே மோகத்திற்குறிய பாவங்கள் இருக்கக்கூடாது. உங்களிடம் எவ்வகையான தீய செயல்களும், பொருளாசையும் இருக்கக்கூடாது. ஏனென்றால் இவை தேவனுடைய புனிதமான மக்களுக்கு ஏற்றதல்ல. நீங்கள் வம்பு பேசக்கூடாது. முட்டாள்தனங்களும், பரியாசங்களும் பேசக்கூடாது. இவை உங்களுக்குப் பொருத்தமானவை அல்ல. நீங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும். பாலியல் பாவங்கள் செய்பவனும், தீயசெயல் புரிபவனும், தனக்கு மேலும், மேலும் வேண்டும் என ஆசைப்படும் சுயநலக்காரனுமான விக்கிரக வணக்கம் செய்பவனும் தேவனுடையதும், கிறிஸ்துவுடையதுமாகிய இராஜ்யத்தில் இடம் பெறுவதில்லை. இதைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். உங்களிடம் உண்மை இல்லாதவற்றைச் சொல்லி உங்களை எவரும் முட்டாளாக ஆக்கிவிட அனுமதிக்காதீர்கள். கீழ்ப்படியாதவர்கள் மீது தேவனைக் கோபம் கொள்ள அத்தீய செயல்கள் செய்கிறது. எனவே அவர்களோடு இத்தகைய தீய செயல்களைச் செய்யாதீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் இருளில் இருந்தீர்கள். இப்பொழுது தேவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளைப் போன்று நடக்கவேண்டும். வெளிச்சமானது எல்லாவகையான நன்மைகளையும், சரியான வாழ்க்கையையும், உண்மையையும் கொண்டு வரும். தேவனுக்கு விருப்பமானது எது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். இருட்டில் வாழ்பவர்கள் செய்கின்ற பாவங்களை எல்லாம் நீங்கள் செய்யாதீர்கள். அவற்றைச் செய்வதால் உங்களுக்கு நன்மை வருவதில்லை. இருட்டில் செய்யப்படுபவை எல்லாம் தவறானவை என்பதை எடுத்துக்காட்ட நீங்கள் நற்செயல்களைச் செய்யுங்கள். அவர்கள் இருட்டில் இரகசியமாகச் செய்பவற்றைக் குறிப்பிடுவது கூட வெட்கப்படத்தக்கது ஆகும். அவற்றை நாம் தவறானவை என்று காட்டும்பொழுது அவற்றை எளிதாகப் பார்ப்பதற்கு வெளிச்சம் உதவும். எளிதாகப் பார்ப்பதுபோல் இருக்கிற எல்லாப் பொருள்களும் தமக்குள் வெளிச்சமுடையதாகிவிடும். அதனால்தான் நாம் கூறுகிறோம். “தூங்குகிறவர்களே எழும்புங்கள், மரணத்திலிருந்து எழும்புங்கள். கிறிஸ்து உங்கள் மீது பிரகாசமாயிருப்பார்.” எனவே எப்படி வாழ்வது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். ஞானம் இல்லாதவர்கள் வாழ்வது போன்று வாழாதீர்கள். ஞானத்தோடு வாழுங்கள். நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நற்செயல்களைச் செய்யுங்கள். ஏனென்றால் நாம் கெட்ட காலங்களில் வாழ்கிறோம்.
எபேசியர் 5:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. இப்படிப்பட்டவைகளினிமித்த மாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள். முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.