எபேசியர் 4:7-13
எபேசியர் 4:7-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
எபேசியர் 4:7-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கிறிஸ்து தாராளமாய் கொடுத்திருக்கிறதற்கு ஏற்றவாறு, நம்மில் ஒவ்வொருவரும் அவருடைய கிருபை வரத்தைப் பெற்றிருக்கிறோம். ஆதலால்: “அவர் வானமண்டலத்திற்கு மேலெழுந்து போனபோது, தம்முடன் பல கைதிகளை அணியணியாய் கூட்டிச்சென்றார். அவர் மனிதருக்கு வரங்களையும் கொடுத்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. “அவர் மேலெழுந்து போனார்” என்பதன் அர்த்தம் என்ன? அவர் அதற்குமுன்னதாக பூமியின் தாழ்வான இடங்களுக்கு இறங்கினார் என்று அர்த்தமாகிறது அல்லவா? கீழே இறங்கிச் சென்றவர் தான் எல்லா வானங்களுக்கும் மேலாய், படைப்பு முழுவதிலும் தாம் நிறைந்திருப்பதற்காக மேலெழுந்து சென்றார். கிறிஸ்து சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை நற்செய்தி வேலைக்காரர்களாகவும், இன்னும் சிலரை மேய்ப்பர்களாகவும், வேதாகம ஆசிரியர்களாகவும் இருக்கும்படி திருச்சபைக்குக் கொடுத்தார். கிறிஸ்துவின் பணிகளைச் செய்வதற்கு, இறைவனுடைய மக்களை ஆயத்தப்படுத்துவதற்காகவே கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை இவ்விதமாய் கட்டியெழுப்புவதே அவர் இவர்களைக் கொடுத்த நோக்கமாயிருந்தது. இவ்விதமாக நாம் எல்லோரும் இறைவனுடைய மகனைப்பற்றிய விசுவாசத்திலும், அறிவிலும் ஒருமனப்பட்டு, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான வளர்ச்சியின் அளவை பெற்று, நாம் முதிர்ச்சியடைந்த மக்களாவதே, அந்த நோக்கத்தின் முடிவாயிருக்கிறது.
எபேசியர் 4:7-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கிறிஸ்துவினுடைய பரிசின் அளவிற்குத்தக்கதாக நம் ஒவ்வொருவருக்கும் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்பே பூமியின் தாழ்வான இடங்களில் இறங்கினார் என்றும் புரிகிறதல்லவா? இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாக இருக்கிறார். மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரன்மேலுள்ள விசுவாசத்திலும் அறிவிலும் ஒன்றுபட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவிற்குத்தக்கதாக தேறின விசுவாசியாகும் வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்படுத்தப்படுவதற்காகவும், நற்செய்தி ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயமானது பக்தியில் வளர்ச்சி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார்.
எபேசியர் 4:7-13 பரிசுத்த பைபிள் (TAERV)
நம்மில் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து ஒரு சிறப்புப் பரிசு கொடுத்திருக்கிறார், கிறிஸ்து ஒவ்வொருவருக்கும் எதைக் கொடுக்க விரும்புகிறாரோ அதையே அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அதனால் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. அவர் உயரத்தில் ஏறி ஆகாயத்துக்குள் சென்றார். அவர் சிறைபட்டவர்களை சிறையாக்கி, அவர்களுக்கு வரங்களையும் கொடுத்தார். அவர் மேலே சென்றார் என்று சொல்லும்போது அதன் பொருள் என்ன? முதலில் அவர் பூமிக்குக் கீழிறங்கி வந்தார் என்பது பொருளாகிறது. எனவே இயேசு இறங்கி வந்தார். பின் அவரே மேலேயும் சென்றார். அவர் எல்லா வானங்களுக்கும் மேலே ஏறிச் சென்றார். கிறிஸ்து தாமாகவே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக அப்படிச் செய்தார். அதே கிறிஸ்து மக்களுக்கு வரங்களைக் கொடுத்தார். சிலரை அப்போஸ்தலராக்கினார், சிலரை தீர்க்கதரிசிகளாக்கினார், சிலரை சுவிசேஷகர்களாக்கினார். சிலரை தேவனின் மக்களைப் பற்றி அக்கறைகொள்ளும் மேய்ப்பர்களாக்கினார், சிலரை போதிப்பவர்களாக்கினார். கிறிஸ்துவின் பரிசுத்தவான்களைச் சேவை செய்ய தேவன் பல வரங்களைக் கொடுத்தார். கிறிஸ்துவின் சபையானது வல்லமை பெறவே அவர் வரங்களைக் கொடுத்தார். நாம் அனைவரும் அதே நம்பிக்கையில் ஒன்றுபட வேண்டும். தேவனுடைய குமாரனைப் பற்றிய அறிவைப் பெறவேண்டி, அதுவரை இவ்வேலை தொடரவேண்டும். நாம் முழுமை பெற்றவர்களாக மாற வேண்டும். நாம் கிறிஸ்துவைப்போல் ஆகும் வரை வளர வேண்டும். அவரது முழுமையைப் பெற வேண்டும்.