எபேசியர் 4:20-32

எபேசியர் 4:20-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால் நீங்கள் கிறிஸ்துவை இவ்விதமாக கற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் நிச்சயமாகவே அவரைக்குறித்துக் கேள்விப்பட்டதும் இயேசுவில் இருக்கும் சத்தியதின்படியே நீங்கள் போதிக்கப்பட்டீர்கள். உங்கள் முந்திய வாழ்க்கை முறையைப் பொறுத்தவரையில், ஏமாற்றும் ஆசைகளினால் உங்கள் பழைய மனித சுபாவம் சீர்கெடுவதால், அதை நீக்கிவிட வேண்டும் என போதிக்கப்பட்டீர்கள்; உங்கள் மனப்பான்மையில் புதிதாக்கப்பட வேண்டும் என்றும் அறிந்திருக்கிறீர்கள். இறைவனுடைய தன்மையைக் கொண்டதாக இருக்கும்படி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் உருவான புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவத்தை தரித்துக்கொள்ளுங்கள். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும், உங்களிடமிருந்து பொய் சொல்வதை அகற்றிவிடுங்கள். நாம் எல்லோரும் ஒரே உடலின் அங்கத்தினர்களாய் இருப்பதனால், நாம் ஒவ்வொருவரும் நமது அயலவருடன் உண்மையையே பேசவேண்டும். “நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்”: பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும். பிசாசுக்கு உங்கள் வாழ்வில் கால் வைக்க இடம் கொடாதிருங்கள். களவு செய்வதில் ஈடுபட்டவன் தொடர்ந்து களவு செய்யாமல், தனது கைகளினால் பயனுள்ள வேலைகளைச் செய்யவேண்டும். அப்போது ஏழைகளுடன் பகிர்ந்துகொள்வதற்கும், அவனிடம் ஏதாவது இருக்கும். தீமையான வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளியே புறப்படவேண்டாம். ஆனால் கேட்பவர்கள் பயனடையும்படி, அவர்களுடைய தேவைக்கு ஏற்றவாறு, வளர்ச்சி பெறுவதற்கு உதவியான வார்த்தைகளையே பேசுங்கள். இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாதிருங்கள். நீங்கள் இறைவனுடையவர்கள் என்பதற்கு உங்களின் மீட்பு நாள்வரை உங்கள்மீது பொறிக்கப்பட்ட அச்சடையாளமாய் ஆவியானவர் இருக்கிறார். எல்லா விதமான கசப்பு உணர்வுகள், சினம், கோபம், வாய்ச்சண்டை, அவதூறாய் பேசுதல் ஆகியவற்றையும், எல்லா விதமான தீங்கையும் விட்டுவிடுங்கள். ஒருவரில் ஒருவர் தயவுள்ளவர்களாயும், மனவுருக்கமுள்ளவர்களாயும் இருங்கள். கிறிஸ்துவில் இறைவன் உங்களை மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.

எபேசியர் 4:20-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீங்களோ இந்தவிதமாகக் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. இயேசுவிடம் உள்ள சத்தியத்தின்படி, நீங்கள் அவரிடம் கேட்டு, அறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. அப்படியே, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனிதனை நீங்கள் களைந்துவிட்டு, உங்களுடைய உள்ளத்திலே புதியவர்களாகி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள். அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் சரீர பாகங்களாக இருக்கிறபடியால், பொய்யைப் பேசாமல், ஒவ்வொருவனும் மற்றவனோடு உண்மையைப் பேசவேண்டும். நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்களுடைய எரிச்சல் மறைந்துபோகட்டும்; பிசாசுக்கு இடம் கொடுக்கவேண்டாம். திருடுகிறவன் இனித் திருடாமல், குறைவாக உள்ளவனுக்குத் தன்னிடமிருந்து கொடுக்கும்படி, தன் கைகளினால் பயனுள்ள வேலைசெய்து முயற்சி செய்யவேண்டும். கெட்டவார்த்தை எதுவும் உங்களுடைய வாய்களால் பேசவேண்டாம்; பக்திவளர்ச்சிக்கு தகுந்த நல்லவார்த்தை இருந்தால், கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாக இருப்பதற்காக அதையே பேசுங்கள். அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாமல் இருங்கள். எல்லாவிதமான கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், அவமதிப்பதும், மற்ற எல்லாக் கெட்டகுணமும் உங்களைவிட்டு நீங்கட்டும். ஒருவருக்கொருவர் தயவாகவும் மனஉருக்கமாகவும் இருந்து, கிறிஸ்துவிற்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

எபேசியர் 4:20-32 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆனால் நீங்கள் கிறிஸ்துவின் மூலமாகக் கற்றுக் கொண்டவை அந்தக் கெட்டவற்றைப் போன்றதல்ல. அவரைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது எது என்பது எனக்குத் தெரியும். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு உண்மையானது கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆமாம், அந்த உண்மை இயேசுவிடம் உள்ளது. உங்கள் பழைய வாழ்க்கை முறைகளை விட்டுவிடவும், எப்போதும் தீமையைத் தருகிற பழைய குணங்களை ஒதுக்கவும் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அது மேலும் மோசமாகிவிட்டது. ஏனென்றால் அவர்கள் தீயவற்றால் முட்டாளாக்கப்பட்டு அவற்றையே புதுப்பிக்க விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் இதயத்தில் புதியவர்களாகும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் புதிய மனிதனாக இருக்கக் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்தப் புதிய மனிதன் தேவனைப்போன்று செய்யப்படுகிறான். உண்மையான நீதியிலும், பரிசுத்தத்திலும் இருக்கிறான். எனவே நீங்கள் பொய் சொல்வதை நிறுத்துங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே சரீரத்தின் பல்வேறு உறுப்புகளாகச் சேர்ந்திருக்கிறோம். உங்கள் கோபம் உங்களைப் பாவம் செய்யக் கொண்டுசெல்லுமளவு அனுமதிக்காதீர்கள். நாள் முழுவதும் கோபம் உடையவர்களாக இருக்காதீர்கள். உங்களை வீழ்த்துவதற்குரிய வழியைப் பிசாசுக்குக் கொடுக்க வேண்டாம். ஒருவன் திருடுகின்றவனாக இருந்தால் தன் திருட்டை நிறுத்துவானாக. அவன் வேலை செய்யத் தொடங்கட்டும். அவன் தனது கைகளை நல்ல செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தட்டும். பிறகு ஏழைகளோடு பகிர்ந்துகொள்ள அவனுக்கென்று சில இருக்கும். நீங்கள் பேசும்போது தீயவற்றைச் சொல்லாதீர்கள். ஆனால் மற்றவர்களுக்குப் பயன் தரத்தக்கதும், மற்றவர்களைப் பலமுள்ளதாக்குகிறவைகளை மட்டும் பேசுங்கள். அதனால் உங்கள் பேச்சைக் கேட்பவர்களுக்கு உங்கள் பேச்சு ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். பரிசுத்த ஆவியானவரைச் சோகப்படுத்தாதீர்கள். நீங்கள் தேவனுக்குரியவராக இருக்கிறீர்கள் என்பதற்கு ஆவியானவரே சான்றாக உள்ளார். தேவன் உங்களுக்குச் சரியான நேரத்தில் விடுதலை தருவார் என்பதைக் காட்டவே தேவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குத் தந்துள்ளார். கசப்பும், கோபமும், மூர்க்கமும் அடையாதீர்கள். கோபத்தில் சத்தம் இடாதீர்கள். கடுஞ்சொற்களைச் சொல்லாதீர்கள். பாவங்களை செய்யாதீர்கள். ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருங்கள். கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்துவிடுவதைப்போல நீங்களும் மற்றவர்களை மன்னித்துவிடுங்கள்.

எபேசியர் 4:20-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.