எபேசியர் 4:1-6
எபேசியர் 4:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகையால் கர்த்தருக்காக கைதியாய் இருக்கிற நான் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ற தகுதியுடன் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். முழுமையான தாழ்மையும் சாந்தமும் உள்ளவர்களாய் இருங்கள்; ஒருவரையொருவர் சகித்து, பொறுமையோடு அன்புடன் நடவுங்கள். சமாதானத்தில் இணைந்து, ஆவியானவரால் கொடுக்கப்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள உங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்யுங்கள். நீங்கள் அழைக்கப்பட்டபோது, ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டீர்கள்; அதுபோலவே, ஒரே உடலும் ஒரே ஆவியானவரும், ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே திருமுழுக்குமே உண்டு. ஒரே இறைவனாகவும், எல்லோருக்கும் தந்தையாகவும் இருக்கிறவரும் ஒருவரே. அவர் எல்லோருக்கும் மேலாக ஆட்சி செய்கிறவர். அவரே எல்லோரோடும், எல்லோரிலும் செயலாற்றுகிறவர்.
எபேசியர் 4:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எனவே, கர்த்தருக்காக சிறைப்பட்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்னவென்றால், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதி உள்ளவர்களாக நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் அதிக பொறுமையும் உள்ளவர்களாக, அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியானவர் தரும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாக இருங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர்.
எபேசியர் 4:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் கர்த்தரைச் சார்ந்தவனாதலால் சிறையில் இருக்கிறேன். தேவன் உங்களைத் தம் மக்களாகத் தேர்ந்தெடுத்தார். தேவனுடைய மக்கள் வாழும் முறைப்படி நீங்களும் வாழவேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எப்போதும் பணிவும், சாந்தமும் உடையவர்களாக இருங்கள். பொறுமையோடு ஒருவரை ஒருவர் அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் ஆவியின் மூலமாகச் சமாதானத்துடன் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள். இதே வழியில் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவாருங்கள். சமாதானம் உங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கட்டும். ஒரே சரீரமும் ஒரே ஆவியும் தான் உள்ளது. ஒரே பொதுவான விசுவாசம்கொள்ள தேவன் உங்களை அழைக்கிறார். ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் உள்ளன. எல்லாருக்கும் ஒரே பிதாவான தேவன் உண்டு. அவர் எல்லாவற்றையும் ஆள்பவர். அவர் எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் இருப்பவர்.
எபேசியர் 4:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆதலால், கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும் , ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.