எபேசியர் 3:5-15
எபேசியர் 3:5-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவன் இந்த இரகசியத்தை முன்னிருந்த தலைமுறையினருக்குச் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுதோ, இறைவனின் பரிசுத்த அப்போஸ்தலருக்கும், இறைவாக்கினர்களுக்கும் பரிசுத்த ஆவியானவராலே அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இரகசியம் என்னவென்றால், நற்செய்தியின் மூலமாய் யூதரல்லாத மக்களும், இஸ்ரயேலருடன் உரிமைப் பங்கு உடையவர்களாயும், அவர்களுடன் கிறிஸ்து இயேசுவின் ஒரே உடலின் அங்கத்தினர்களாயும், அவரது வாக்குத்தத்தத்தில் பங்குள்ளவர்களாயும் இருக்கிறார்கள் என்பதாகும். இறைவனுடைய வல்லமை எனக்குள் செயலாற்றுவதன் மூலம், எனக்குக் கொடுக்கப்பட்ட அவருடைய கிருபையின் கொடையினால், நான் இந்த நற்செய்தியின் ஊழியனானேன். நான் இறைவனுடைய எல்லா மக்களையும்விட குறைவுள்ளவனாய் இருந்தும், கிறிஸ்துவின் அளவற்ற நிறைவை யூதரல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்க இந்தக் கிருபை எனக்குக் கொடுக்கப்பட்டது. அது செயல்படுவதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவுமே, எனக்கு இந்த ஊழியம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் கடந்த காலங்களில் இந்த இரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது இறைவனின் மகத்துவமான ஞானம் வானமண்டலங்களில் ஆளுகை செய்யும் தூதர்களுக்கும் அதிகாரங்களுக்கும் திருச்சபையின் மூலமாய் அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். இவ்விதமாக அவர் தமது நித்திய நோக்கத்தை நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றினார். நாம் அவரில் இருப்பதினாலும், அவரில் கொண்டிருக்கும் விசுவாசத்தினாலும், நாங்கள் சுதந்தரமாய் மனவுறுதியுடன் இறைவனுக்கு முன்பாக வரக்கூடியவர்களாய் இருக்கிறோம். எனவே நான் துன்பம் அனுபவிப்பதால், நீங்கள் மனசோர்வடையக் கூடாது என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது என்பதால் உற்சாகமடையுங்கள். நான் அவருடைய ஞானத்தையும் திட்டத்தையும் நினைக்கும்போது, பிதாவுக்கு முன்பாக முழங்காற்படியிடுகிறேன். அவரிடமிருந்து பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும், அவருடைய முழுக் குடும்பமும் சிறப்பியல்பைப் பெறுகின்றன.
எபேசியர் 3:5-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அதை நீங்கள் படிக்கும்போது கிறிஸ்துவின் இரகசியத்தைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுக்குலத்திற்கு அறிவிக்கப்படவில்லை. தேவனுடைய பலத்த வல்லமையினால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்த நற்செய்திப் பணிக்கு ஊழியக்காரன் ஆனேன். பரிசுத்தவான்கள் எல்லோரையும்விட சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவில்லாத ஐசுவரியத்தை யூதரல்லாதவர்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, உன்னதங்களிலுள்ள ஆட்சிக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாக இப்பொழுது தெரியவரும்படி, இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்மேல் உள்ள விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடு தேவனிடம் சேரும் பாக்கியமும் உண்டாயிருக்கிறது. ஆகவே, உங்களுக்காக நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாமலிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது. இதற்காக நான் பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள எல்லாக்குடும்பத்திற்கும் பெயரிட்ட சிருஷ்டிகராகிய, நம்முடைய கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு
எபேசியர் 3:5-15 பரிசுத்த பைபிள் (TAERV)
முற்காலங்களில் வாழ்ந்த மக்களுக்கு இந்த இரகசியம் சொல்லப்படவில்லை. ஆனால் இப்போது ஆவியின் மூலம் தேவன் அந்த இரகசிய உண்மையை அவரது அப்போஸ்தலர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கு புலப்படுத்தினார். இது தான் அந்த உண்மை. தேவன் தனது மக்களுக்குக் குறிப்பாக யூத மக்களுக்குக் கொடுத்த அத்தனையும் யூதர் அல்லாதவர்களுக்கும் கொடுப்பார். ஒரே குழுவில் யூதர்களோடு யூதர் அல்லாதவர்களும் சேர்ந்து இருப்பார்கள். தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள் செய்த வாக்குறுதியில் அவர்கள் யாவரும் பங்கு பெறுவர். யூதர் அல்லாதவர்களும் நற்செய்தியினாலேயே இவற்றை அடைகிறார்கள். தேவனின் சிறப்புப் பரிசாகிய அவரது கிருபையால் நற்செய்தியைக் கூறுகிற தொண்டனானேன். தேவன் தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்தி அந்தக் கிருபையை எனக்குத் தந்தார். தேவனின் பிள்ளைகளில் நானே முக்கியத்துவம் மிககுறைந்தவன். ஆனால் யூதர் அல்லாதவராகிய உங்களுக்கு நான் கிறிஸ்துவின் உயர்வு பற்றிய நற்செய்தியைச் சொல்லும் வாய்ப்பு பெற்றேன். அவரது உயர்வு சொல்ல முடியாத அளவுக்கு மிகப் பெரியது. தேவனைப் பற்றிய இரகசிய உண்மையை அனைத்து மக்களிடமும் சொல்கின்ற அரிய பணியை தேவன் எனக்குக் கொடுத்திருக்கிறார். தொடக்க காலத்திலிருந்தே இந்த இரகசிய உண்மை தேவனிடம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் படைத்தது தேவன் ஒருவரே, பரலோகத்தில் உள்ள ஆளுகைகளும், அதிகாரங்களும் தேவனின் அளவற்ற பலவகை ஞானத்தையும் சபையின் மூலம் தெரியவரும்படிச் செய்வதே தேவனுடைய நோக்கமாகும். தொடக்க காலத்திலிருந்தே இது தேவனின் திட்டம். தேவன் தன் திட்டப்படியே செய்து வருகிறார். கிறிஸ்துவால் நாம் தைரியத்தோடும் முழு விசுவாசத்தோடும் தேவன் முன் வந்து சேரமுடியும். நாம் இவற்றை கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தால் செய்ய முடியும். நான் உங்களுக்காக பட்ட துன்பங்களால் நீங்கள் நம்பிக்கையில் தளர வேண்டாம் என்றும் தைரியம் இழக்க வேண்டாம் என்றும், உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனது துயரங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரும். ஆகையால் நான் பிதாவாகிய தேவன் முன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறேன். அவரிடத்தில் இருந்து பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாக் குடும்பங்களும் தம் உண்மையான பெயரைப் பெறும்
எபேசியர் 3:5-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன். பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதித் தீர்மானத்தின்படியே, உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக, இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே. இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு