எபேசியர் 2:8-13
எபேசியர் 2:8-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
விசுவாசத்தின்மூலமாய், கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இந்த இரட்சிப்பு உங்களால் உண்டானதல்ல. இது இறைவனுடைய கொடையே ஆகும். இந்த இரட்சிப்பு நற்செயல்களினால் வந்தது அல்ல. ஆகையால் இதைக்குறித்து ஒருவரும் பெருமைப்பாராட்ட முடியாது. ஏனெனில், நாங்கள் கிறிஸ்து இயேசுவில் படைக்கப்பட்ட இறைவனின் வேலைப்பாடுகளாய் இருக்கிறோம். நல்ல செயல்களைச் செய்யும்படி, இறைவனால் முன்னதாகவே ஆயத்தம் பண்ணப்பட்டபடியே நம்மை ஏற்பாடு செய்திருக்கிறார். ஆகையால், “விருத்தசேதனம் செய்துகொண்டிருக்கிறோம்” என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள், பிறப்பினால் யூதரல்லாதவர்களாய் இருந்த உங்களை, “விருத்தசேதனம் பெறாதவர்கள்” என்று உங்களை அழைத்தார்கள் என்பதை நீங்கள் நினைவில்கொள்ளுங்கள். இந்த விருத்தசேதனம், மனிதரின் கைகளால் உடலில் செய்யப்பட்டது. அக்காலத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவிலிருந்து புறம்பானவர்களாய், இறைவனின் சுதந்தரமாகிய இஸ்ரயேலுக்கு உட்படாதவர்களாகவும், வாக்குக்கொடுக்கப்பட்ட உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை அறியாதவர்களாகவும் இருந்தீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாதவர்களாகவும், இறைவன் இல்லாதவர்களாகவுமே இந்த உலகத்தில் வாழ்ந்தீர்கள். ஆனால் முன்பு ஒருகாலத்தில் தூரமாய் இருந்த நீங்கள், இப்பொழுதோ கிறிஸ்து இயேசுவில், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே இறைவனுக்கு சமீபமாயிருக்கிறீர்கள்.
எபேசியர் 2:8-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானது இல்லை, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைப்படாதபடி இது செயல்களினால் உண்டானது இல்லை; ஏனென்றால், நற்செயல்களைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவிற்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாக இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எனவே, முன்பு சரீரத்தின்படி யூதரல்லாதவராக இருந்து, சரீரத்தில் கையினாலே விருத்தசேதனம்பண்ணப்பட்டவர்களால் விருத்தசேதனம்பண்ணப்பாடாதவர்கள் என்று சொல்லப்பட்ட நீங்கள், அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய குடியுரிமைக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களும், இந்த உலகத்தில் தேவனில்லாதவர்களுமாக இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரத்தில் இருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவிற்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அருகில் வந்தீர்கள்.
எபேசியர் 2:8-13 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனுடைய இரக்கத்தால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். அந்தக் கிருபையை நீங்கள் உங்களது விசுவாசத்தினால் பெற்றீர்கள். உங்களை நீங்களே இரட்சித்துக்கொள்ள முடியாது. இது தேவனிடமிருந்து கிடைக்கும் பரிசு. நீங்கள் செய்த செயல்களால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. எனவே தன்னைத்தானே இரட்சித்துக்கொண்டதாக ஒருவனும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே தேவன் நம்மைப் படைத்தார். நாம் நற்செயல்கள் செய்யும்படி கிறிஸ்துவுக்குள் நம்மைப் புதிய மக்களாக்கினார். தேவன் ஏற்கெனவே நமக்காக அந்நற்செயல்கள் பற்றித் திட்டமிட்டிருக்கிறார். நமது வாழ்வு அந்நற்செயல்களோடு இணைய வேண்டும் என்றே தேவன் திட்டமிட்டிருக்கிறார். நீங்கள் யூதர் அல்லாதவர்களாகப் பிறந்தீர்கள். உங்களை யூதர்கள் “விருத்தசேதனம் செய்யாதவர்கள்” என்று அழைக்கிறார்கள். அவர்கள் தங்களை “விருத்தசேதனம் செய்தவர்கள்” என்று அழைத்துக்கொள்கிறார்கள். இந்த விருத்தசேதனம் என்பது யூதர்கள் தங்கள் சரீரத்தில் செய்துகொள்ளும் ஏதோ ஒன்று தான். கடந்த காலத்தில் கிறிஸ்து இல்லாமல் நீஙகள் இருந்தீர்கள் என்பதை நினைவுகூருங்கள். நீஙகள் இஸ்ரவேலின் மக்கள் அல்ல. தேவன் தம் மக்களுக்குச் செய்து கொடுத்த ஒப்பந்தத்தில் உங்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. உங்களுக்குத் தேவனைப்பற்றித் தெரியாது. அவர் மீது நம்பிக்கையும் இல்லை. ஆமாம், ஒரு முறை தேவனைவிட்டு வெகு தொலைவில் நீங்கள் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது தேவனோடு நெருக்கமாக இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் இரத்தமே உங்களை தேவனின் அருகில் கொண்டு வந்தது.
எபேசியர் 2:8-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள், அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.