எபேசியர் 2:11-18
எபேசியர் 2:11-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள், அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.
எபேசியர் 2:11-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகையால், “விருத்தசேதனம் செய்துகொண்டிருக்கிறோம்” என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள், பிறப்பினால் யூதரல்லாதவர்களாய் இருந்த உங்களை, “விருத்தசேதனம் பெறாதவர்கள்” என்று உங்களை அழைத்தார்கள் என்பதை நீங்கள் நினைவில்கொள்ளுங்கள். இந்த விருத்தசேதனம், மனிதரின் கைகளால் உடலில் செய்யப்பட்டது. அக்காலத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவிலிருந்து புறம்பானவர்களாய், இறைவனின் சுதந்தரமாகிய இஸ்ரயேலுக்கு உட்படாதவர்களாகவும், வாக்குக்கொடுக்கப்பட்ட உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை அறியாதவர்களாகவும் இருந்தீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாதவர்களாகவும், இறைவன் இல்லாதவர்களாகவுமே இந்த உலகத்தில் வாழ்ந்தீர்கள். ஆனால் முன்பு ஒருகாலத்தில் தூரமாய் இருந்த நீங்கள், இப்பொழுதோ கிறிஸ்து இயேசுவில், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே இறைவனுக்கு சமீபமாயிருக்கிறீர்கள். கிறிஸ்துவே நமது சமாதானத்தின் வழியானார். அவரே இருபிரிவினரையும் ஒன்றாக்கி, தடையாயிருந்த பகைமைச் சுவரை தமது உடலின் மூலமாக அழித்தார். கிறிஸ்து தமது உடலினால் மோசேயின் சட்டத்தை, அதின் கட்டளைகளோடும் விதிமுறைகளோடும் நீக்கியதினால், இந்த இருபிரிவினரையும் தம்மில் ஒரு புதிய மனிதனாக உருவாக்கி, சமாதானத்தை ஏற்படுத்தினார். சிலுவையினால் இருபிரிவினரையும் ஒரே உடலாக இறைவனுடன் ஒப்புரவாக்குவதே அவருடைய நோக்கமாயிருந்தது. கிறிஸ்து தமது சிலுவையினால் அவர்களது பகைமையைச் சாகடித்தார். இவ்விதமாய் அவர் தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாய் இருந்த அவர்களுக்கும் நற்செய்தியின் சமாதானத்தைப் பிரசங்கித்தார். ஆகவே கிறிஸ்து மூலமாக நாங்கள் இரு பிரிவினரும் ஒரே ஆவியானவரினால் பிதாவின் முன்னிலையில் வரக்கூடியவர்களாய் இருக்கிறோம்.
எபேசியர் 2:11-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எனவே, முன்பு சரீரத்தின்படி யூதரல்லாதவராக இருந்து, சரீரத்தில் கையினாலே விருத்தசேதனம்பண்ணப்பட்டவர்களால் விருத்தசேதனம்பண்ணப்பாடாதவர்கள் என்று சொல்லப்பட்ட நீங்கள், அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய குடியுரிமைக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களும், இந்த உலகத்தில் தேவனில்லாதவர்களுமாக இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரத்தில் இருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவிற்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அருகில் வந்தீர்கள். எப்படியென்றால், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருகூட்டத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய சரீரத்தினாலே ஒழித்து, இருகூட்டத்தாரையும் அவருக்குள்ளாக ஒரே புதிய மனிதனாக உருவாக்கி, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருகூட்டத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும், அவர் வந்து, தூரத்தில் இருந்த உங்களுக்கும், அருகில் இருந்த அவர்களுக்கும், சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார். அப்படியே நாம் இருகூட்டத்தாரும் ஒரே ஆவியானவராலே பிதாவினிடத்தில் சேரும் பாக்கியத்தை அவர் மூலமாகப் பெற்றிருக்கிறோம்.
எபேசியர் 2:11-18 பரிசுத்த பைபிள் (TAERV)
நீங்கள் யூதர் அல்லாதவர்களாகப் பிறந்தீர்கள். உங்களை யூதர்கள் “விருத்தசேதனம் செய்யாதவர்கள்” என்று அழைக்கிறார்கள். அவர்கள் தங்களை “விருத்தசேதனம் செய்தவர்கள்” என்று அழைத்துக்கொள்கிறார்கள். இந்த விருத்தசேதனம் என்பது யூதர்கள் தங்கள் சரீரத்தில் செய்துகொள்ளும் ஏதோ ஒன்று தான். கடந்த காலத்தில் கிறிஸ்து இல்லாமல் நீஙகள் இருந்தீர்கள் என்பதை நினைவுகூருங்கள். நீஙகள் இஸ்ரவேலின் மக்கள் அல்ல. தேவன் தம் மக்களுக்குச் செய்து கொடுத்த ஒப்பந்தத்தில் உங்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. உங்களுக்குத் தேவனைப்பற்றித் தெரியாது. அவர் மீது நம்பிக்கையும் இல்லை. ஆமாம், ஒரு முறை தேவனைவிட்டு வெகு தொலைவில் நீங்கள் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது தேவனோடு நெருக்கமாக இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் இரத்தமே உங்களை தேவனின் அருகில் கொண்டு வந்தது. இப்பொழுது கிறிஸ்துவால் நமக்குச் சமாதானம் கிடைத்தது. கிறிஸ்து யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் ஒரே மக்களாக்கினார். இவர்களுக்கு இடையில் ஒரு சுவர் இருப்பது போலப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒருவரை ஒருவர் வெறுத்தனர். கிறிஸ்து தமது சரீரத்தைக் கொடுத்து பகை என்னும் சுவரை உடைத்தெறிந்தார். யூதர்களின் சட்டங்கள் ஏராளமான கட்டளைகளையும், விதிகளையும் உடையன. ஆனால் கிறிஸ்து அச்சட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். யூதர், யூதர் அல்லாதவர் என்னும் இந்த இரு பிரிவுகளையும் ஒன்றாக்குவது அவர் நோக்கம். இதை அவர் சிலுவையில் இறந்ததன் மூலம் செய்து சமாதானத்தைக் கொண்டு வந்தார். இரு பிரிவுகளுக்கும் இடையே இருந்த பகையைச் சிலுவையின் மூலம் முடிவடையச் செய்தார். தேவனை விட்டு வெகு தொலைவில் இருந்த யூதர் அல்லாத உங்களிடம் கிறிஸ்து வந்து சாமாதானத்தை அறிவித்தார். அவர் தேவனுக்கு மிக நெருக்கமாய் இருந்த யூதர்களுக்கும் சமாதானத்தை அறிவித்தார். ஆமாம்! கிறிஸ்து மூலமாக நாம் அனைவருக்கும் ஒரே ஆவிக்குள் பிதாவாகிய தேவனிடம் வருவதற்கு உரிமை பெற்றோம்.