எபேசியர் 2:1-10
எபேசியர் 2:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்களோ ஒருகாலத்தில் உங்களுடைய மீறுதல்களிலும், பாவங்களிலும் மரித்தவர்களாக இருந்தீர்கள். அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. ஒருகாலத்தில் நாம் எல்லோரும் அவர்களிடையே வாழ்ந்தோம். நமது மாம்சத்திலிருந்து எழும் இச்சைகளைத் தீர்த்துக்கொள்கிறவர்களாகவும், மாம்சத்திலிருந்து எழும் ஆசைகளின்படியும் யோசனைகளின்படியும், நடக்கிறவர்களாகவும் இருந்தோம். மற்றவர்களைப் போலவே, இறைவனுடைய கோபத்துக்கு உட்பட்டவர்களாய் இருந்தோம். ஆனால் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள இறைவன், நமக்கு மிகுந்த அன்பு காண்பித்தார். எப்படியென்றால், நாம் மீறுதல்களினால் இறந்தவர்களாய் இருந்தபோதும், நம்மை கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். இறைவனுடைய கிருபையினாலேயே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இறைவன் கிறிஸ்துவுடனேகூட நம்மை உயிருடன் எழுப்பி, கிறிஸ்து இயேசுவில் நம்மைத் தம்முடனே பரலோகத்தின் உயர்வான இடங்களில் அமரும்படி செய்தார். இனிவரும் காலங்களிலும், கிறிஸ்து இயேசுவில் நமக்குக் காட்டிய தயவின்மூலம், இறைவனுடைய கிருபையின் அளவற்ற நிறைவை காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார். விசுவாசத்தின்மூலமாய், கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இந்த இரட்சிப்பு உங்களால் உண்டானதல்ல. இது இறைவனுடைய கொடையே ஆகும். இந்த இரட்சிப்பு நற்செயல்களினால் வந்தது அல்ல. ஆகையால் இதைக்குறித்து ஒருவரும் பெருமைப்பாராட்ட முடியாது. ஏனெனில், நாங்கள் கிறிஸ்து இயேசுவில் படைக்கப்பட்ட இறைவனின் வேலைப்பாடுகளாய் இருக்கிறோம். நல்ல செயல்களைச் செய்யும்படி, இறைவனால் முன்னதாகவே ஆயத்தம் பண்ணப்பட்டபடியே நம்மை ஏற்பாடு செய்திருக்கிறார்.
எபேசியர் 2:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது சரீர விருப்பத்தின்படியே நடந்து, நமது சரீரமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபத்தின் பிள்ளைகளாக இருந்தோம். தேவனோ இரக்கத்தில் செல்வந்தமுள்ளவராக நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாக இருந்த நம்மைக் கிறிஸ்துவோடு உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்; கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவரோடு எழுப்பி, உன்னதங்களிலே அவரோடு உட்காரவும் செய்தார். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானது இல்லை, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைப்படாதபடி இது செயல்களினால் உண்டானது இல்லை; ஏனென்றால், நற்செயல்களைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவிற்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாக இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
எபேசியர் 2:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
கடந்த காலத்தில் உங்கள் ஆன்மீகமான வாழ்வு செத்துப்போயிற்று. இதற்கு, உங்களது பாவங்களும், தேவனுக்கு எதிரான உங்களது கெட்ட செயல்களுமே காரணம் ஆம், கடந்த காலத்தில் பாவங்களில் வாழ்ந்தீர்கள். உலகம் வாழ்கிறபடி வாழ்ந்தீர்கள். பூமியில் தீய சக்திகளின் ஆள்வோர்களைப் பின்பற்றினீர்கள். தேவனுக்குக் கீழ்ப்படிய மறந்த அந்த மக்களுக்குள் தீய ஆவி வேலை செய்கிறது. கடந்த காலத்தில் நாம் அனைவரும் அவர்களைப் போலவே வாழ்ந்தோம். நமது மனவிருப்பப்படி பாவத்தில் வாழ்ந்தோம். நமது மனமும் சரீரமும் விரும்பியதையே நாம் செய்தோம். நாம் தீயவர்களாய் இருந்தோம். நமது வாழ்க்கை முறையின் காரணமாக தேவனின் கோபத்தால் நாம் துன்பப்பட வேண்டும். மற்ற அனைத்து மக்களைப் போலவே நாமும் இருந்தோம். ஆனால் தேவனுடைய இரக்கம் மிகப் பெரியது. தேவன் நம்மை மிகுதியாக நேசித்தார். ஆன்மீகப்படி நாம் இறந்துபோனோம். தேவனுக்கு எதிரான காரியங்களைச் செய்ததால் இறந்து போனோம். தேவன் கிறிஸ்துவுடன் புது வாழ்க்கையைத் தந்தார். தேவனின் கிருபையால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்துவோடு நம்மையும் தேவன் உயிர்த்தெழச் செய்தார். பரலோகத்தில் நமக்கென்று இருக்கைகளையும் ஏற்படுத்தினார். இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிற நமக்காக தேவன் இதைச் செய்தார். தேவன் இதைச் செய்ததால் எதிர்காலம் முழுவதும் அவர் தனது செல்வம் மிக்க இரக்கத்தையும் உயர்ந்த தயவையும் காட்டுவார். அவர் இதையும் கிறிஸ்துவுக்குள் நமக்குச் செய்வார். தேவனுடைய இரக்கத்தால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். அந்தக் கிருபையை நீங்கள் உங்களது விசுவாசத்தினால் பெற்றீர்கள். உங்களை நீங்களே இரட்சித்துக்கொள்ள முடியாது. இது தேவனிடமிருந்து கிடைக்கும் பரிசு. நீங்கள் செய்த செயல்களால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. எனவே தன்னைத்தானே இரட்சித்துக்கொண்டதாக ஒருவனும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே தேவன் நம்மைப் படைத்தார். நாம் நற்செயல்கள் செய்யும்படி கிறிஸ்துவுக்குள் நம்மைப் புதிய மக்களாக்கினார். தேவன் ஏற்கெனவே நமக்காக அந்நற்செயல்கள் பற்றித் திட்டமிட்டிருக்கிறார். நமது வாழ்வு அந்நற்செயல்களோடு இணைய வேண்டும் என்றே தேவன் திட்டமிட்டிருக்கிறார்.
எபேசியர் 2:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.