எபேசியர் 1:4-14
எபேசியர் 1:4-14 பரிசுத்த பைபிள் (TAERV)
உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்தெடுத்து உள்ளார். தமக்கு முன்பாக நாம் அன்பில் தூய்மையானவர்களும், குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்காகவே நம்மை அவர் தேர்ந்தெடுத்தார். உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே, நம்மைத் தம் பிள்ளைகளாய் கிறிஸ்து மூலமாகத் தேர்ந்தெடுக்க தேவன் முடிவு செய்துவிட்டார். தேவன் செய்ய விரும்பியதும் அதுவே ஆகும். அதுவே அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரது வியக்கத்தக்க கருணை அவருக்கு மகிமை உண்டாக்கியது. அவர் தன் கிருபையால் நமக்கு இலவசமாய் அதைத் தான் நேசிக்கிற குமாரனான இயேசு மூலமாக நமக்குத் தந்தார். கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் விடுதலை பெற்றோம். தேவனின் வளமான இரக்கத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. தேவன் அவரது இரக்கத்தை முழுமையாகவும் இலவசமாகவும் தந்தார். தேவன் முழு ஞானத்தோடும், பலத்தோடும் அவரது இரகசியத் திட்டத்தை நாம் அறியச் செய்தார். சரியான நேரம் வரும்போது தனது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தேவன் ஏற்கெனவே செய்த முடிவு. பரலோகத்திலும், பூமியிலும் உள்ள அனைத்து பொருள்களும் ஒன்று கூடி கிறிஸ்துவின் கீழ் இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய திட்டம். நாம் கிறிஸ்துவுக்குள் தேவனின் மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேவன் நம்மைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் அதுதான் அவர் விருப்பம். அவரது விருப்பத்திற்கும், முடிவுக்கும் ஏற்றவாறு அவர் எல்லாவற்றையும் சரிசெய்துகொள்வார். கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்தவர்களில் நாமே முதல் மக்கள். நாம் தேவனின் மகிமைக்குப் புகழ் சேர்ப்போம் என்பதனால் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இந்தப் பெருமை உங்களையும் சேரும். நீங்களும் உங்கள் இரட்சிப்புக்காக உண்மையான நற்செய்தியைக் கேட்டீர்கள். நீங்கள் நற்செய்தியைக் கேட்டதால் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்தீர்கள். தேவன் தந்த அவரது வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியால் கிறிஸ்துவில் உங்களுக்கு அடையாளக் குறியிடப்பட்டீர்கள். தேவன் தம் மக்களுக்கு வாக்களித்தபடி நாம் பெறுவோம் என்பதற்கு பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாய் உள்ளார். தேவனைச் சேர்ந்தவர்களுக்கு இது முழு விடுதலை தரும். தேவனின் மகிமைக்குப் புகழ்ச்சியைத் தேடித் தருவது தான் இவை எல்லாவற்றின் நோக்கமாக இருக்கும்.
எபேசியர் 1:4-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார். காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம். நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.
எபேசியர் 1:4-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நாம் இறைவனுடைய பார்வையிலே, பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் இருக்கும்படி, உலகம் படைக்கப்படுவதற்கு முன்னதாகவே, அவர் நம்மை கிறிஸ்துவில் தெரிந்துகொண்டார். இறைவன் தம்முடைய அன்பின் நிமித்தமாக, இயேசுகிறிஸ்துவின் மூலமாய் சொந்த பிள்ளைகளாக்கிக்கொள்ள நம்மை முன்குறித்தார். இதை அவர் தமது சித்தத்தின்படியும், விருப்பத்தின்படியும் செய்தார். தாம் அன்பு செலுத்திய கிறிஸ்துவில், நமக்கு இலவசமாய் வழங்கப்பட்டுள்ள இந்த மகிமையான கிருபையின் நிமித்தம் இறைவனைப் புகழ்வோமாக. கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக நமக்கு மீட்பு உண்டு. அது இறைவனுடைய கிருபையின் நிறைவிலிருந்து கிடைக்கும் பாவங்களுக்கான மன்னிப்பு. அந்தக் கிருபையை, இறைவன் நமக்கு எல்லா ஞானத்துடனும், விளங்கும் ஆற்றலுடனும் சேர்த்து, நிறைவாய் கொடுத்திருக்கிறார். இறைவன் தமது திட்டத்தின் இரகசியத்தை நமக்குத் தெரியப்படுத்தினார். அது அவருடைய விருப்பத்தின்படி, தாம் கிறிஸ்துவில் செய்யவிருந்த நோக்கமாயிருந்தது. பரலோகத்திலும் பூமியிலுமுள்ள எல்லாவற்றையும், கிறிஸ்துவின் தலைமையின்கீழ் ஒன்றுசேர்ப்பதே அந்த இரகசியம். காலங்கள் அவற்றின் நிறைவை அடையும்போது, இறைவன் அதை நிறைவேற்றுவார். தம்முடைய திட்டத்தின் நோக்கத்திற்கேற்ப எல்லாவற்றையும் நிறைவேற்றுகிற, இறைவனுடைய தீர்மானத்தின்படியே நாமும் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவில் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். இதனால் கிறிஸ்துவில் முதலாவதாக நம்பிக்கை கொண்டிருக்கிற நாம், அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாய் இருக்கும்படி, இறைவன் விரும்பினார். அப்படியே நீங்களும் சத்திய வார்த்தையை, அதாவது உங்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கிற நற்செய்தியைக் கேட்டபோது, கிறிஸ்துவுக்கு உட்பட்டவர்களானீர்கள். அதை நீங்கள் விசுவாசித்தபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே, அவரில் முத்திரை பொறிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு இருக்கிறீர்கள். இறைவனுக்கு உரிமையானவர்களான நாம் மீட்கப்படும் வரைக்கும், நமக்குரிய உரிமைச்சொத்தை அடைவோம் என்பதற்கு இந்தப் பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாய் இருக்கிறார். அவருடைய மகிமையின் நிமித்தம் அவரைப் புகழ்வோமாக.
எபேசியர் 1:4-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவருக்கு முன்பாக நாம் எல்லோரும் பரிசுத்தம் உள்ளவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருப்பதற்கு, உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்துவிற்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் அவர் நமக்கு அருளிய அவருடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, அவருடைய தயவுள்ள விருப்பத்தின்படியே, இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவருக்குச் சொந்த பிள்ளைகளாகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார். தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் எல்லா ஞானத்திலும் புத்தியிலும் எங்களுக்குள் பெருகப்பண்ணினார். காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் ஒழுங்கின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய எல்லாம் கிறிஸ்துவிற்குள்ளே ஒன்று சேர்க்கப்படவேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த அவருடைய தயவுள்ள திட்டத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். மேலும் கிறிஸ்துவின்மேல் முன்பு நம்பிக்கையாக இருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருப்பதற்காக, அவருடைய விருப்பத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவிற்குள் அவருடைய உரிமைப்பங்காகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம். நீங்களும் உங்களுடைய இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக்கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய உரிமைப்பங்கின் உத்திரவாதமாக இருக்கிறார்.