எபேசியர் 1:3-8
எபேசியர் 1:3-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமாயிருக்கிறவருக்கு துதி உண்டாவதாக. அவர் பரலோகத்தின் உயர்வான இடங்களில் எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் நம்மை கிறிஸ்துவில் ஆசீர்வதித்திருக்கிறார். நாம் இறைவனுடைய பார்வையிலே, பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் இருக்கும்படி, உலகம் படைக்கப்படுவதற்கு முன்னதாகவே, அவர் நம்மை கிறிஸ்துவில் தெரிந்துகொண்டார். இறைவன் தம்முடைய அன்பின் நிமித்தமாக, இயேசுகிறிஸ்துவின் மூலமாய் சொந்த பிள்ளைகளாக்கிக்கொள்ள நம்மை முன்குறித்தார். இதை அவர் தமது சித்தத்தின்படியும், விருப்பத்தின்படியும் செய்தார். தாம் அன்பு செலுத்திய கிறிஸ்துவில், நமக்கு இலவசமாய் வழங்கப்பட்டுள்ள இந்த மகிமையான கிருபையின் நிமித்தம் இறைவனைப் புகழ்வோமாக. கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக நமக்கு மீட்பு உண்டு. அது இறைவனுடைய கிருபையின் நிறைவிலிருந்து கிடைக்கும் பாவங்களுக்கான மன்னிப்பு. அந்தக் கிருபையை, இறைவன் நமக்கு எல்லா ஞானத்துடனும், விளங்கும் ஆற்றலுடனும் சேர்த்து, நிறைவாய் கொடுத்திருக்கிறார்.
எபேசியர் 1:3-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவிற்குள் உன்னதங்களிலே ஆவியானவருக்குரிய எல்லா ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். அவருக்கு முன்பாக நாம் எல்லோரும் பரிசுத்தம் உள்ளவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருப்பதற்கு, உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்துவிற்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் அவர் நமக்கு அருளிய அவருடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, அவருடைய தயவுள்ள விருப்பத்தின்படியே, இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவருக்குச் சொந்த பிள்ளைகளாகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார். தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் எல்லா ஞானத்திலும் புத்தியிலும் எங்களுக்குள் பெருகப்பண்ணினார்.
எபேசியர் 1:3-8 பரிசுத்த பைபிள் (TAERV)
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். பரலோகத்தில் அவர் கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசிகளையும் நமக்குத் தந்துள்ளார். உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்தெடுத்து உள்ளார். தமக்கு முன்பாக நாம் அன்பில் தூய்மையானவர்களும், குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்காகவே நம்மை அவர் தேர்ந்தெடுத்தார். உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே, நம்மைத் தம் பிள்ளைகளாய் கிறிஸ்து மூலமாகத் தேர்ந்தெடுக்க தேவன் முடிவு செய்துவிட்டார். தேவன் செய்ய விரும்பியதும் அதுவே ஆகும். அதுவே அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரது வியக்கத்தக்க கருணை அவருக்கு மகிமை உண்டாக்கியது. அவர் தன் கிருபையால் நமக்கு இலவசமாய் அதைத் தான் நேசிக்கிற குமாரனான இயேசு மூலமாக நமக்குத் தந்தார். கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் விடுதலை பெற்றோம். தேவனின் வளமான இரக்கத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. தேவன் அவரது இரக்கத்தை முழுமையாகவும் இலவசமாகவும் தந்தார்.
எபேசியர் 1:3-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.