பிரசங்கி 9:7-10
பிரசங்கி 9:7-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீ போய் உன் உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடு, மகிழ்ச்சியான இருதயத்துடன் திராட்சை இரசத்தைக் குடி; ஏனெனில் இதை இறைவன் ஏற்கெனவே அங்கீகரித்திருக்கிறார். எப்பொழுதும் நல்ல உடைகளை உடுத்தியவனாகவும், உன் தலையில் நறுமணத்தைலம் பூசியவனாகவும் இரு. சூரியனுக்குக் கீழே, இறைவன் உனக்குக் கொடுத்திருக்கும் இந்த அர்த்தமற்ற வாழ்வில், உன் அர்த்தமற்ற நாட்களில், நீ அன்பாய் இருக்கும் உன் மனைவியுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் அனுபவி. உன் வாழ்க்கையிலும், உன் கடும் உழைப்பிலும் சூரியனுக்குக் கீழே உன் பங்கு இதுவே. செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை.
பிரசங்கி 9:7-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீ போய், உன்னுடைய ஆகாரத்தை சந்தோஷத்துடன் சாப்பிட்டு, உன்னுடைய திராட்சைரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன்னுடைய செயல்களை அங்கீகாரம் செய்திருக்கிறார். உன்னுடைய ஆடைகளை எப்பொழுதும் வெள்ளையாகவும், உன்னுடைய தலைக்கு எண்ணெய் குறையாததாகவும் இருப்பதாக. சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடு நிலையில்லாத இந்த வாழ்வை அனுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே செய்கிற பிரயாசத்திலும் பங்கு இதுவே. செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
பிரசங்கி 9:7-10 பரிசுத்த பைபிள் (TAERV)
இப்போது போய் உனது உணவை உண்டு மகிழ்ச்சியைப் பெறு. உனது திராட்சைரசத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைவாய். நீ இவற்றைச் செய்வது தேவனுக்கு உடன்பாடானதுதான். சிறந்த ஆடைகளை அணிந்து அழகாகக் காட்சியளி. நீ விரும்புகிற மனைவியோடு வாழ்க்கையை அனுபவி. குறுகிய உனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் அனுபவி. பூமியில் குறுகிய இந்த வாழ்வை தேவன் உனக்குக்கொடுத்திருக்கிறார். உனக்குரியது எல்லாம் இதுதான். எனவே இவ்வாழ்வில் நீ செய்யவேண்டிய வேலைகளுக்கு மகிழ்ச்சி அடைவாய். எப்பொழுதெல்லாம் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ, அதை எவ்வளவு சிறப்பாகச் செய்யமுடியுமோ, அதனைச் செய். கல்லறையில் உனக்கு வேலையில்லை. அங்கு சிந்தனையும் அறிவும் ஞானமும் இல்லை. நாம் அனைவரும் மரணம் என்ற இடத்துக்கே போய்க்கொண்டிருக்கிறோம்.
பிரசங்கி 9:7-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார். உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக. சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.