பிரசங்கி 9:11-12

பிரசங்கி 9:11-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும். தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாத காலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

பிரசங்கி 9:11-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சூரியனுக்குக் கீழே இன்னும் ஒன்றையும் நான் கண்டேன்: ஓட்டப் பந்தயத்தில் வேகமாய் ஓடுகிறவரே வெற்றி பெறுவார் என்றில்லை, பலசாலியே யுத்தத்தில் வெற்றி பெறுவார் என்றில்லை; ஞானமுள்ளவர்களுக்கு உணவு கிடைக்கும் என்பதில்லை, புத்தியுள்ளவர்களுக்குச் செல்வம் கிடைக்கும் என்பதில்லை, கல்விமான்களுக்குத் தயவு கிடைக்கும் என்பதில்லை; ஆனால் சரியான நேரமும் வாய்ப்பும் இவை எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. அத்துடன் ஒரு மனிதனும் துக்கவேளை எப்பொழுது வருமென்று அறியாதிருக்கிறான்: மீன்கள் கொடிய வலையில் பிடிபடுகின்றன, பறவைகள் கண்ணியில் அகப்படுகின்றன, அதுபோலவே மனிதர்களும் தீமையான காலங்களில் அகப்படுகின்றார்கள்; அவை அவர்கள்மேல் எதிர்பாராதவிதமாய் வருகின்றன.

பிரசங்கி 9:11-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே பார்த்தது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்திற்கு வீரர்களின் வீரம் போதாது; பிழைப்பிற்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு அறிவில் தேறினவர்களின் அறிவும் போதாது; அவர்கள் எல்லோருக்கும் நேரமும் தேவச்செயலும் நேரிடவேண்டும். தன்னுடைய காலத்தை மனிதன் அறியான்; மீன்கள் மரண வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுமக்கள் பொல்லாத காலத்திலே திடீரென தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

பிரசங்கி 9:11-12 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் வாழ்க்கையில் நியாயமற்ற சிலவற்றைப் பார்த்தேன். வேகமாக ஓடுகிறவன் பந்தயத்தில் எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை. வலுமிக்க படை போரில் எப்பொழுதும் வெற்றிபெறுவதில்லை. ஞானத்தில் சிறந்தவன் எப்பொழுதும் அதிகமாகச் சம்பாதிப்பதில்லை. அறிவுக் கூர்மைமிக்கவன் எப்பொழுதும் செல்வத்தைப் பெறுவதில்லை. கல்வி அறிவுமிக்கவன் எப்பொழுதும் தனக்குரிய பாராட்டுகளைப் பெறுவதில்லை; நேரம் வரும்போது ஒவ்வொருவருக்கும் தீமையே ஏற்படுகின்றன. அடுத்து என்ன நடக்கும் என்று ஒருவனால் என்றைக்கும் அறிய முடியாது. அவன் வலைக்குள் அகப்பட்ட மீனைப்போன்று இருக்கிறான். அம்மீனுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. அவன் கண்ணியில் அகப்பட்ட பறவையைப் போன்றவன். அப்பறவை அடுத்து நடக்கப்போவதை அறியாது. இதுபோலவே, ஒருவன் தீயவற்றால் கண்ணியில் அகப்படுகிறான். அது திடீரென்று அவனுக்கு ஏற்படுகின்றது.