பிரசங்கி 7:11-29
பிரசங்கி 7:11-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலே பிரயோஜனமுண்டு. ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை. தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்? வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் என் மாயையின் நாட்களில் கண்டேன்; தன் நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானுமுண்டு, தன் பாவத்திலே நீடித்திருக்கிற பாவியுமுண்டு. மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்கு முன்னே நீ ஏன் சாகவேண்டும்? நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாதிருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றினின்றும் காக்கப்படுவான். நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப் பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும். ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை. சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும். அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே. இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்; நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று. தூரமும் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்? ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் ஆகாமியத்தையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என் மனதைச் செலுத்தினேன். கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிகக் கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான். காரியத்தை அறியும்படிக்கு ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்: என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன்; இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை. இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.
பிரசங்கி 7:11-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உரிமைச்சொத்தைப்போல, ஞானம் இருப்பது நல்லது; உயிரோடிருக்கும் அனைவருக்கும் அதுவே நன்மை கொடுக்கிறது. பணம் புகலிடமாய் இருப்பதுபோலவே, ஞானமும் ஒரு புகலிடம்; ஆனால் ஞானம் அதைக் கொண்டிருக்கிறவர்களின் உயிரைப் பாதுகாக்கிறது, இதுவே அறிவின் மேன்மை. இறைவன் செய்திருப்பதைக் கவனித்துப் பாருங்கள்: அவர் கோணலாக்கினதை யாரால் நேராக்க முடியும்? காலங்கள் நலமாயிருக்கும்போது, மகிழ்ச்சியாயிரு; காலங்கள் கஷ்டமாய் இருக்கும்போது, சிந்தனை செய்: இறைவனே இரண்டையும் ஏற்படுத்தியிருக்கிறார், ஆகையால் ஒரு மனிதனால் தனது எதிர்காலத்தைக் குறித்து எதையும் கண்டுபிடிக்க முடியாது. நீதியானவன் தன் நீதியில் அழிந்துபோகிறதும்: கொடுமையானவன் தன் கொடுமையிலே நீடித்து வாழ்கிறதுமான இரண்டையும் அர்த்தமற்ற என் வாழ்வில் நான் கண்டேன். ஆகையால் மிதமிஞ்சி நீதிமானாகவோ, மிதமிஞ்சிய ஞானமுள்ளவனாகவோ காட்டிக்கொள்ளாதே. அதினால் நீ ஏன் உன்னை அழித்துக்கொள்ள வேண்டும்? அதிக கொடியவனாய் இராதே, முட்டாளாயும் இராதே. உன் காலத்திற்கு முன் நீ ஏன் சாகவேண்டும்? முதலாவதைப் பற்றிக்கொள்வதும், இரண்டாவதைக் கைவிடாதிருப்பதும் நல்லது. இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனோ மிதமிஞ்சிய நடத்தைகளைக் கைக்கொள்ளமாட்டான். பட்டணத்திலுள்ள பத்து ஆளுநர்களைப் பார்க்கிலும், ஒரு ஞானியை, ஞானம் அதிக வலிமையுள்ளவனாக்கும். ஒருபோதும் பாவம் செய்யாமல், சரியானதையே செய்கிற, நீதியான மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை. மனிதர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தில் எடுக்காதே; கவனிப்பாயானால் உன் வேலைக்காரன் உன்னைச் சபிப்பதையும் நீ கேட்க நேரிடலாம். ஏனெனில் பலமுறை, நீயும் மற்றவர்களைச் சபிக்கிறதை உன் இருதயத்தில் அறிவாயே. இவை எல்லாவற்றையும் நான் என் ஞானத்தினால் சோதித்துப் பார்த்து, “நான் ஞானமுள்ளவனாய் இருக்க உறுதிகொண்டேன்” என்று சொன்னேன்; ஆனால் இதுவும் எனக்கு எட்டாததாய் இருந்தது. ஞானம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அது மிக தூரமாகவும் ஆழமாகவும் இருக்கிறது. அதை யாரால் கண்டறிய முடியும்? ஆகவே, ஞானத்தையும் நிகழ்வுகளுக்கான காரணகாரியத்தையும் அறியவும், விசாரிக்கவும், ஆராயவும் என் மனதைச் செலுத்தினேன். கொடுமையின் மூடத்தனத்தையும், மூடத்தனத்தின் அறிவீனத்தையும் விளங்கிக்கொள்ள என் மனதைத் திருப்பினேன். கண்ணியாய் இருக்கும் பெண், மரணத்திலும் பார்க்க கசப்பானவள் என்று நான் கண்டேன்; அவளது இருதயம் பொறியாயும், அவளது கைகள் சங்கிலிகளாயும் இருக்கின்றன. இறைவனுக்குப் பிரியமாய் நடக்கும் மனிதனோ அவளிடமிருந்து தப்புவான். பாவியையோ அவள் சிக்க வைப்பாள். “இதோ, நிகழ்வுகளின் திட்டங்களை விளங்கிக்கொள்வதற்காக ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்துப் பார்த்தேன்”: அப்பொழுது நான் கண்டது இதுவே என்று பிரசங்கி சொல்கிறான்: “நான் ஆயிரம் பேருக்குள்ளே நேர்மையான ஒருவனை கண்டேன்; ஆனால் ஆயிரம் பெண்களுக்குள்ளே நேர்மையான ஒரு பெண்ணை நான் காணவில்லை. நான் இன்னும் ஆராய்ந்து கொண்டேயிருக்கிறேன்; ஆனால் விளங்கவில்லை.” ஆனால் இது ஒன்றையே நான் கண்டுபிடித்தேன்: இறைவன் மனுக்குலத்தை நீதியானதாகவே படைத்தார்; மனிதர்களோ தங்கள் மனம்போன போக்கில் நடந்துகொள்கிறார்கள்.
பிரசங்கி 7:11-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பூமியில் வசிப்பவர்களுக்கு சுதந்தரத்தோடு ஞானம் நல்லது; இதினாலே பலனுமுண்டு. ஞானம் கேடகம், செல்வமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்; இதுவே அறிவின் மேன்மை. தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேராக்கக்கூடியவன் யார்? வாழ்வுகாலத்தில் நன்மையை அனுபவித்திரு, தாழ்ந்து இருக்கும் காலத்தில் சிந்தனைசெய்; மனிதன் தனக்குப்பின்பு வருவது ஒன்றையும் கண்டுபிடிக்கமுடியாதபடி தேவன் இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் என்னுடைய மாயையின் நாட்களில் கண்டேன்; தன்னுடைய நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானும் உண்டு, தன்னுடைய பாவத்திலே நீடித்திருக்கிற பாவியும் உண்டு. மிஞ்சின நீதிமானாக இருக்காதே, உன்னை அதிக ஞானியுமாகவும் ஆக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? மிஞ்சின துன்மார்க்கனாக இருக்காதே, அதிக பேதையுமாக இருக்காதே; உன்னுடைய காலத்திற்கு முன்பே நீ ஏன் சாகவேண்டும்? நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாமல் இருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றிலிருந்தும் காக்கப்படுவான். நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைவிட, ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும். ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யக்கூடிய நீதிமான் பூமியில் இல்லை. சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனிக்காதே; கவனித்தால் உன்னுடைய வேலைக்காரன் உன்னை சபிப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும். அநேகமுறை நீயும் பிறரைச் சபித்தாயென்று, உன்னுடைய மனதிற்குத் தெரியுமே. இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்; நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமானது. தூரமும் மகா ஆழமுமாக இருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்? ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் தீமையையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என்னுடைய மனதைச் செலுத்தினேன். கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய பெண்ணானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான். காரியத்தை அறியும்படி ஒவ்வொன்றாக விசாரணைசெய்து, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்: என்னுடைய மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு மனிதனைக் கண்டேன்; இவர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு பெண்ணை நான் காணவில்லை. இதோ, தேவன் மனிதனை நேர்மை உள்ளவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக காரியங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமட்டும் கண்டேன்.
பிரசங்கி 7:11-29 பரிசுத்த பைபிள் (TAERV)
உன்னிடம் செல்வம் இருக்குமானால் ஞானம் அதைவிடச் சிறந்தது. உண்மையில் ஞானமுள்ளவர்கள் தேவைக்கு மிகுதியாகவே செல்வத்தைப் பெறுகிறார்கள். ஞானமுள்ளவனால் செல்வந்தனாக முடியும். ஞானம் அதன் சொந்தக்காரனைப் பாதுகாக்கும். தேவனால் படைக்கப்பட்ட பொருட்களைப் பாருங்கள். ஒருவேளை அது தவறு என்று நினைத்தாலும் உன்னால் எதையும் மாற்ற முடியாது. வாழ்க்கை நல்லதாக இருந்தால், அனுபவி. வாழ்க்கை கடினமாக இருக்கும்போது தேவன் நமக்கு நல்ல காலத்தையும் கஷ்டகாலத்தையும் கொடுக்கிறார் என்று நினைத்துக்கொள். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பது எவருக்கும் தெரியாது. எனது குறுகிய வாழ்வில் நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். நல்லவர்கள் இளமையிலேயே மரித்துப்போகிறார்கள். தீயவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும் பார்த்திருக்கிறேன். ஏன் நீ உன்னையே கொன்றுகொள்கிறாய். அதிக நல்லவனாகவும் அதிக கெட்டவனாகவும் இராதே. நீ அதிக ஞானமுள்ளவனாகவும் அதிக முட்டாளாகவும் இராதே. உனக்குரிய காலத்திற்கு முன் நீ ஏன் மரிக்கவேண்டும்? இதில் கொஞ்சம் அதில் கொஞ்சமுமாய் இருக்க முயற்சிசெய். தேவனுடைய பக்தர்களும் கூட கொஞ்சம் நல்லவர்களாகவும் கொஞ்சம் தீயவர்களாகவும் இருக்கின்றனர். பாவமே செய்யாமல் எப்பொழுதும் நல்லதையே செய்துகொண்டிருக்கிற மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை. ஞானம் ஒருவனுக்குப் பலத்தைக்கொடுக்கிறது. பட்டணத்திலுள்ள பத்து முட்டாள் தலைவர்களைவிட ஒரு ஞானவான் பலமுள்ளவன். ஜனங்கள் சொல்லுகின்ற அனைத்தையும் நீ கேட்காதே. உனது சொந்த வேலைக்காரனே உனக்கு எதிராகப் பேசுவதை நீ கேட்கலாம். மற்றவர்களைப்பற்றி நீயே பல தடவை அவதூறு சொல்லியிருப்பதை நீ அறியலாம். நான் எனது ஞானத்தைப் பயன்படுத்தி இவற்றைப்பற்றிச் சிந்தித்தேன். நான் உண்மையில் ஞானமுள்ளவனாக இருக்க விரும்பினேன். ஆனால் அது முடியாமற்போனது. ஏன் பல விஷயங்கள் இவ்வாறு இருக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இதனைப் புரிந்துக்கொள்வது எவருக்கும் கடினம்தான். நான சற்றுக் கடினப்பட்டு முயன்று ஞானத்தைப் பெற்றேன். நான், எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுகொள்ள விரும்பினேன். நான் என்ன கற்றுக்கொண்டேன்? கெட்டவனாக இருப்பது முட்டாள்தனம் என்பதைக் கற்றேன். ஒரு அறிவற்றவனைப்போன்று நடிப்பதும் பைத்தியகாரத்தனமானதுதான். சில பெண்கள் கண்ணிகளைப்போன்று ஆபத்தானவர்கள் என்பதை அறிந்துக்கொண்டேன். அவர்களின் இதயம் வலைகளைப் போன்றது, அவர்களது கைகள் சங்கிலிகளைப் போன்றவை. இத்தகைய பெண்களிடம் அகப்பட்டுக்கொள்வது மரணத்தைவிட பயங்கரமானது. தேவனைப் பின்பற்றுகிற ஒருவன் இத்தகைய பெண்களிடம் இருந்து விலகி ஓடுவான். பாவியோ இவர்களிடம் அகப்பட்டுக்கொள்வான். பிரசங்கி, “என்னால் எத்தகைய பதிலைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதற்காகவே நான் இவற்றையெல்லாம் சேர்க்கிறேன். நான் இன்னும் பதில்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் ஆயிரத்தில் ஒருவனை நல்லவனாகக் கண்டுபிடித்தேன். ஆனாலும் ஒரு நல்ல பெண்ணைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.” “தேவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார். ஆனால் ஜனங்கள் கெட்டுப்போக பல வழிகளைக் கண்டுபிடித்தனர். இதுவும் நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடமாகும்” என்று கூறுகிறான்.