பிரசங்கி 5:4-7
பிரசங்கி 5:4-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவனுக்கு நீ நேர்ந்ததை நிறைவேற்றத் தாமதியாதே. இறைவன் மூடரில் பிரியமாயிருப்பதில்லை; உனது நேர்த்திக்கடனை நிறைவேற்று. நேர்த்திக்கடனைச் செய்து, அதை நிறைவேற்றாமல் விடுவதைவிட, நேர்த்திக்கடன் செய்யாமல் இருப்பது மிக நல்லது. உன்னை பாவத்திற்குள் வழிநடத்த உன் வாய்க்கு இடங்கொடாதே. ஆலய தூதனுக்கு முன்பாக, “எனது நேர்த்திக்கடன் தவறுதலாகச் செய்யப்பட்டது” என்று மறுத்துச் சொல்லாதே. இறைவன் நீ சொல்வதைக் கேட்டு கோபப்பட்டு, அவர் உன் கையின் வேலையை ஏன் அழித்துப் போடவேண்டும்? அதிக கனவும், அதிக வார்த்தைகளும் அர்த்தமற்றவை. எனவே இறைவனுக்குமுன் பயந்திரு.
பிரசங்கி 5:4-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை செய்துகொண்டால், அதைச் செலுத்தத் தாமதிக்காதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைவிட, நேர்ந்துகொள்ளாமல் இருப்பதே நலம். உன்னுடைய சரீரத்தைப் பாவத்திற்குள்ளாக்க உன்னுடைய வாய்க்கு இடம்கொடுக்காதே; அது புத்திமாறி செய்தது என்று தூதனுக்குமுன்பு சொல்லாதே; தேவன் உன்னுடைய வார்த்தைகளினாலே கோபம் கொண்டு, உன்னுடைய கைகளின் செயல்களை ஏன் அழித்துக்கொள்ளவேண்டும்? அநேக சொப்பனங்கள் மாயையாக இருப்பதுபோல அநேக வார்த்தைகளும் மாயையாக இருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.
பிரசங்கி 5:4-7 பரிசுத்த பைபிள் (TAERV)
நீ தேவனுக்கு பொருத்தனை செய்தால் அதனைக் காப்பாற்று. நீ பொருத்தனை செய்ததை நிறைவேற்ற தாமதிக்காதே. முட்டாள்களின்மேல் தேவன் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார். தேவனுக்குக்கொடுப்பதாக வாக்களித்தவற்றை அவருக்கு கொடுத்துவிடு. நீ பொருத்தனை செய்து அதனை நிறைவேற்ற முடியாமல் இருப்பதைவிட, பொருத்தனை செய்யாமல் போவதே நல்லது. எனவே உனக்குப் பாவம் ஏற்படும்படி நீ வார்த்தைகளைப் பயன்படுத்தாதே. “நான் சொன்னதை அந்த அர்த்தத்துடன் சொல்லவில்லை” என்று ஆசாரியனிடம் சொல்லாதே. இவ்வாறு நீ செய்தால், தேவன் உன் வார்த்தைகளால் கோபங்கொண்டு, நீ செய்த வேலைகளை எல்லாம் அழித்துவிடுவார். உனது பயனற்ற கனவுகளும் வீண் பேச்சும் உனக்குத் துன்பம் தராதபடி பார்த்துக்கொள். நீ தேவனை மதிக்க வேண்டும்.
பிரசங்கி 5:4-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற் போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம். உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திப்பிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்? அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும், வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.