பிரசங்கி 3:9-14

பிரசங்கி 3:9-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வேலையாள் தன் உழைப்பினால் பெறும் இலாபம் என்ன? இறைவன், மனிதன்மேல் வைத்திருக்கும் பாரத்தை நான் பார்த்திருக்கிறேன். அவர் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் அழகாய் செய்திருக்கிறார். மனிதருடைய இருதயங்களில் அவர் நித்திய காலத்தின் உணர்வையும் வைத்திருக்கிறார். ஆனால் இறைவன் ஆரம்பம் முதல் இறுதிவரை செய்திருப்பதை அவர்களால் அளவிடமுடியாது. மனிதர் வாழும் காலத்தில் சந்தோஷமாய் இருப்பதையும், நன்மை செய்வதையும்விட மேலானது ஒன்றும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மனிதனும் சாப்பிட்டு, குடித்து, தன் பிரசாயத்தில் திருப்தி காண்பதே இறைவன் கொடுத்த கொடை. இறைவன் செய்கின்ற எதுவும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று எனக்குத் தெரியும். அதனுடன் ஒன்றையும் சேர்க்கவோ, அல்லது அதிலிருந்து எதையாவது எடுக்கவோ முடியாது. மனிதர் அவரிடத்தில் பயபக்தியாய் இருப்பதற்காகவே இறைவன் அதைச் செய்கிறார்.

பிரசங்கி 3:9-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? மனிதர்கள் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். அவர் அனைத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்களுடைய உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆரம்பம்முதல் முடிவுவரை செய்துவரும் செயல்களை மனிதன் கண்டுபிடிக்கமாட்டான். மகிழ்ச்சியாக இருப்பதும் உயிரோடிருக்கும்போது நன்மைசெய்வதையும்தவிர, வேறொரு நன்மையும் மனிதனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனிதர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் குடித்து தங்களுடைய எல்லா பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது தேவனுடைய வெகுமதி. தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடு ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது; மனிதர்கள் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

பிரசங்கி 3:9-14 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒருவன் உண்மையில் தன் கடின உழைப்பின் மூலம் எதையாவது பெறுகிறானா? தேவன் நமக்குக்கொடுத்த அனைத்து கடின வேலைகளையும் நான் பார்க்கிறேன். அவரது உலகத்தைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் திறனை தேவன் நமக்குக்கொடுத்திருக்கிறார். எனினும் தேவன் செய்யும் அனைத்தையும் நாம் முழுவதும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் இதுவரை தேவன் அனைத்தையும் சரியான காலத்திலேயே செய்துவருகிறார். ஜனங்கள் வாழ்கிற காலம்வரை மகிழ்ச்சியாக இருப்பதும், சந்தோஷம் அனுபவிப்பதும் நல்ல செய்கை என்பதை நான் கற்றேன். எல்லோரும் உண்ணவும் குடிக்கவும் அவரது வேலையில் மகிழ்ச்சியடையவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இவை தேவனிடமிருந்து வரும் அன்பளிப்புகள். தேவன் செய்வது என்றென்றும் தொடரும் என்பதை அறிந்தேன். தேவனுடைய கிரியையோடு ஜனங்கள் எதையும் சேர்த்துக்கொள்ள முடியாது. தேவனுடைய கிரியையிலிருந்து ஜனங்கள் எதையும் எடுத்துக்கொள்ளவும் முடியாது. தேவன் இதனைச் செய்கிறார். எனவே தேவனுக்கு ஜனங்கள் மரியாதை செலுத்தவேண்டும்.

பிரசங்கி 3:9-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். மகிழ்ச்சியாயிருப்பதும் உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம். தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.