பிரசங்கி 3:1-15

பிரசங்கி 3:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு, வானத்தின் கீழே ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய காலமுண்டு. பிறப்பதற்கு ஒரு காலமுண்டு, இறப்பதற்கு ஒரு காலமுண்டு; நடுவதற்கு ஒரு காலமுண்டு, பிடுங்குவதற்கு ஒரு காலமுண்டு; கொல்வதற்கு ஒரு காலமுண்டு, சுகப்படுத்துவதற்கு ஒரு காலமுண்டு; இடித்து வீழ்த்த ஒரு காலமுண்டு, கட்டி எழுப்ப ஒரு காலமுண்டு; அழுவதற்கு ஒரு காலமுண்டு, சிரிப்பதற்கு ஒரு காலமுண்டு; துக்கங்கொண்டாட ஒரு காலமுண்டு, நடனம் ஆட ஒரு காலமுண்டு; கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களை ஒன்றுசேர்க்க ஒரு காலமுண்டு; அணைத்துக்கொள்ள ஒரு காலமுண்டு, அணைத்துக் கொள்ளாதிருக்க ஒரு காலமுண்டு. தேடிச் சேர்க்க ஒரு காலமுண்டு, விட்டுவிட ஒரு காலமுண்டு; வைத்திருக்க ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு; கிழித்துப் பிரிக்க ஒரு காலமுண்டு, தைத்து ஒன்றுசேர்க்க ஒரு காலமுண்டு; பேசாமல் இருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு; அன்பாயிருக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம் பண்ண ஒரு காலமுண்டு; சமாதானமாயிருக்க ஒரு காலமுண்டு. வேலையாள் தன் உழைப்பினால் பெறும் இலாபம் என்ன? இறைவன், மனிதன்மேல் வைத்திருக்கும் பாரத்தை நான் பார்த்திருக்கிறேன். அவர் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் அழகாய் செய்திருக்கிறார். மனிதருடைய இருதயங்களில் அவர் நித்திய காலத்தின் உணர்வையும் வைத்திருக்கிறார். ஆனால் இறைவன் ஆரம்பம் முதல் இறுதிவரை செய்திருப்பதை அவர்களால் அளவிடமுடியாது. மனிதர் வாழும் காலத்தில் சந்தோஷமாய் இருப்பதையும், நன்மை செய்வதையும்விட மேலானது ஒன்றும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மனிதனும் சாப்பிட்டு, குடித்து, தன் பிரசாயத்தில் திருப்தி காண்பதே இறைவன் கொடுத்த கொடை. இறைவன் செய்கின்ற எதுவும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று எனக்குத் தெரியும். அதனுடன் ஒன்றையும் சேர்க்கவோ, அல்லது அதிலிருந்து எதையாவது எடுக்கவோ முடியாது. மனிதர் அவரிடத்தில் பயபக்தியாய் இருப்பதற்காகவே இறைவன் அதைச் செய்கிறார். இருப்பவை எல்லாம் ஏற்கெனவே இருந்தன, இருக்கப்போகிறவைகளும் முன்பு இருந்தவையே; கடந்ததையும் இறைவன் விசாரிப்பார்.

பிரசங்கி 3:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம் உண்டு; வானத்தின் கீழ் இருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரம் உண்டு. பிறக்க ஒரு காலம் உண்டு, இறக்க ஒரு காலம் உண்டு; நட ஒரு காலம் உண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலம் உண்டு; கொல்ல ஒரு காலம் உண்டு, குணமாக்க ஒரு காலம் உண்டு; இடிக்க ஒரு காலம் உண்டு, கட்ட ஒரு காலம் உண்டு; அழ ஒரு காலம் உண்டு, சிரிக்க ஒரு காலம் உண்டு; புலம்ப ஒரு காலம் உண்டு, நடனமாட ஒரு காலம் உண்டு; கற்களை எறிந்துவிட ஒரு காலம் உண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலம் உண்டு; தழுவ ஒரு காலம் உண்டு, தழுவாமல் இருக்க ஒரு காலம் உண்டு; தேட ஒரு காலம் உண்டு, இழக்க ஒரு காலம் உண்டு; காப்பாற்ற ஒரு காலம் உண்டு, எறிந்துவிட ஒரு காலம் உண்டு; கிழிக்க ஒரு காலம் உண்டு, தைக்க ஒரு காலம் உண்டு; மவுனமாக இருக்க ஒரு காலம் உண்டு, பேச ஒரு காலம் உண்டு; நேசிக்க ஒரு காலம் உண்டு, பகைக்க ஒரு காலம் உண்டு; யுத்தம்செய்ய ஒரு காலம் உண்டு, சமாதானப்படுத்த ஒரு காலம் உண்டு. வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? மனிதர்கள் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். அவர் அனைத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்களுடைய உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆரம்பம்முதல் முடிவுவரை செய்துவரும் செயல்களை மனிதன் கண்டுபிடிக்கமாட்டான். மகிழ்ச்சியாக இருப்பதும் உயிரோடிருக்கும்போது நன்மைசெய்வதையும்தவிர, வேறொரு நன்மையும் மனிதனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனிதர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் குடித்து தங்களுடைய எல்லா பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது தேவனுடைய வெகுமதி. தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடு ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது; மனிதர்கள் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார். முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்பே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.

பிரசங்கி 3:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காலம் உண்டு. பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியான காலமுண்டு. பிறப்பதற்கு ஒரு காலமுண்டு, மரிப்பதற்கு ஒரு காலமுண்டு, நடுவதற்கு ஒரு காலமுண்டு, பிடுங்குவதற்கும் ஒரு காலமுண்டு. கொல்வதற்கு ஒரு காலமுண்டு, குணப்படுத்தவும் ஒரு காலமுண்டு, அழிப்பதற்கு ஒரு காலமுண்டு, கட்டுவதற்கும் ஒரு காலமுண்டு. அழுவதற்கு ஒரு காலமுண்டு, சிரிப்பதற்கும் ஒரு காலமுண்டு, வருத்தப்படுவதற்கு ஒரு காலமுண்டு, மகிழ்ச்சியால் நடனமாடுவதற்கும் ஒரு காலமுண்டு. ஆயுதங்களை எறிவதற்கு ஒரு காலமுண்டு, ஆயுதங்களை எடுப்பதற்கு ஒரு காலமுண்டு. தழுவிக்கொள்ள ஒரு காலமுண்டு, தழுவிக்கொள்ளாமல் இருக்கவும் ஒரு காலமுண்டு. சிலவற்றைத் தேட ஒரு காலமுண்டு, இழந்துவிட்டதாகக் கருதவும் ஒரு காலமுண்டு, பொருட்களைப் பாதுகாக்க ஒரு காலமுண்டு, பொருட்களைத் தூக்கி எறியவும் ஒரு காலமுண்டு. துணிகளைக் கிழிப்பதற்கு ஒரு காலமுண்டு, அதனைத் தைப்பதற்கும் ஒரு காலமுண்டு, அமைதியாக இருப்பதற்கு ஒரு காலமுண்டு, பேசுவதற்கும் ஒரு காலமுண்டு. அன்பு செய்ய ஒரு காலமுண்டு, வெறுக்கவும் ஒரு காலமுண்டு, சண்டையிடுவதற்கு ஒரு காலமுண்டு, சமாதானம் கொள்வதற்கும் ஒரு காலமுண்டு. ஒருவன் உண்மையில் தன் கடின உழைப்பின் மூலம் எதையாவது பெறுகிறானா? தேவன் நமக்குக்கொடுத்த அனைத்து கடின வேலைகளையும் நான் பார்க்கிறேன். அவரது உலகத்தைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் திறனை தேவன் நமக்குக்கொடுத்திருக்கிறார். எனினும் தேவன் செய்யும் அனைத்தையும் நாம் முழுவதும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் இதுவரை தேவன் அனைத்தையும் சரியான காலத்திலேயே செய்துவருகிறார். ஜனங்கள் வாழ்கிற காலம்வரை மகிழ்ச்சியாக இருப்பதும், சந்தோஷம் அனுபவிப்பதும் நல்ல செய்கை என்பதை நான் கற்றேன். எல்லோரும் உண்ணவும் குடிக்கவும் அவரது வேலையில் மகிழ்ச்சியடையவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இவை தேவனிடமிருந்து வரும் அன்பளிப்புகள். தேவன் செய்வது என்றென்றும் தொடரும் என்பதை அறிந்தேன். தேவனுடைய கிரியையோடு ஜனங்கள் எதையும் சேர்த்துக்கொள்ள முடியாது. தேவனுடைய கிரியையிலிருந்து ஜனங்கள் எதையும் எடுத்துக்கொள்ளவும் முடியாது. தேவன் இதனைச் செய்கிறார். எனவே தேவனுக்கு ஜனங்கள் மரியாதை செலுத்தவேண்டும். ஏற்கெனவே நடந்து முடிந்தவை முடிந்தவையே. அவற்றை நாம் மாற்ற முடியாது. எதிர்காலத்தில் நடப்பவை நடந்தே தீரும். நாம் அவற்றையும் மாற்ற முடியாது. ஆனால் தேவன், மிகமோசமாக நடத்தப்படுபவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார்.

பிரசங்கி 3:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு; கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு; அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு; கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு; தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு; காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு; கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு; மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு; சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு. வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். மகிழ்ச்சியாயிருப்பதும் உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம். தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார். முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.