பிரசங்கி 2:1-5

பிரசங்கி 2:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாயிருந்தது. நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன். வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டும், என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன். நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன். எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன்.

பிரசங்கி 2:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“வா, இப்பொழுது நன்மையானது என்னவென்று கண்டுபிடிக்கும்படி இன்பத்தை அனுபவித்துச் சோதித்துப் பார்ப்போம்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் அதுவும் அர்த்தமற்றது என்று நிரூபிக்கப்பட்டது. சிரிப்பு மூடத்தனமானது என்றும், இன்பம் என்ன பலனைக் கொடுக்கிறது என்றும் நான் சொன்னேன். திராட்சை இரசத்தினால் என்னை உற்சாகப்படுத்தியும், மூடத்தனமாயும் நடந்து பார்த்தேன்; அப்பொழுது இன்னும் என் மனமே ஞானத்தினால் எனக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது. மனிதர் தங்களுடைய வாழ்வின் குறுகிய நாட்களில், வானத்தின் கீழே செய்யப் பயனுள்ளது என்ன என்று பார்க்க விரும்பினேன். பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினேன். அழகிய சோலைகளையும் பூந்தோட்டங்களையும் எனக்காக உண்டாக்கி, எல்லாவித பழமரங்களையும் அதில் நட்டேன்.

பிரசங்கி 2:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அனுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாக இருந்தது. சிரிப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன். வானத்தின்கீழ் மனுமக்கள் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பெற்று அனுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்வரை, என்னுடைய இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என்னுடைய உடலை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என்னுடைய உள்ளத்தில் வகைதேடினேன். நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கினேன். எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் எல்லாவகைக் கனிமரங்களையும் உண்டாக்கினேன்.

பிரசங்கி 2:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் எனக்குள்: “நான் வேடிக்கை செய்வேன். என்னால் முடிந்தவரை எல்லாவற்றிலும் மகிழ்ச்சி அடைவேன்” என்று சொன்னேன். ஆனால் நான் இவையும் பயனற்றவை என்று கற்றுக்கொண்டேன். எல்லா நேரத்திலும் சிரித்துக்கொண்டிருப்பது முட்டாள்தனமானது. கேளிக்கையை அனுபவிப்பது எந்த நன்மையையும் செய்யாது. எனவே என் மனதை ஞானத்தால் நிரப்பும்போது என் உடலை திராட்சைரசத்தால் நிரப்ப முடிவு செய்தேன். இந்த முட்டாள்தனத்தை நான் முயற்சி செய்தேன். ஏனென்றால் நான் மகிழ்ச்சியடைவதற்குரிய வழியைக் கண்டுபிடிக்க எண்ணினேன். ஜனங்களின் குறுகிய வாழ்வில் அவர்கள் என்ன நன்மை செய்யக்கூடும் என்று பார்க்க விரும்பினேன். பிறகு நான் பெரிய செயல்களைச் செய்யத் துவங்கினேன். வீடுகளைக் கட்டினேன். திராட்சைத் தோட்டங்களை எனக்காக நட்டேன். நான் தோட்டங்களை அமைத்தேன், பூங்காவனங்களை உருவாக்கினேன். எல்லாவகையான பழமரங்களையும் நட்டேன்.