பிரசங்கி 12:9-13

பிரசங்கி 12:9-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரசங்கி ஞானமுள்ளவனாய் இருந்தது மட்டுமல்ல, அவன் மக்களுக்கு அறிவையும் புகட்டினான். இதனாலேயே அவன் ஆழ்ந்து யோசித்துப் பார்த்து, அநேக நீதிமொழிகளை தொகுத்து எழுதிவைத்தான். பிரசங்கி சரியான சொற்களையே கண்டுபிடிக்கத் தேடினான். அதினால் அவன் எழுதியவையெல்லாம் நேர்மையும் உண்மையுமானவை. ஞானமுள்ளவர்களின் வார்த்தைகள் நல்வழிக்கு உந்தித் தள்ளும் தாற்றுக்கோல் போன்றது. தொகுக்கப்பட்ட அவர்களின் முதுமொழிகள் உறுதியாய் அடிக்கப்பட்ட ஆணிகளைப் போன்றவை. அவை ஒரே மேய்ப்பனாலேயே கொடுக்கப்பட்டன. என் மகனே, இவைகளினாலே எச்சரிப்பாயிருப்பாயாக. புத்தகங்களை எழுதுவது முடிவற்றது, மேலும் அதிக படிப்பு உடலை இளைக்கப்பண்ணும். எல்லாவற்றையும் கேட்டு, நான் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்: இறைவனுக்குப் பயந்து நட, அவர் கட்டளைகளைக் கைக்கொள்; மனிதனின் பிரதான கடமை இதுவே.

பிரசங்கி 12:9-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் மக்களுக்கு அறிவைப் போதித்து, கவனமாகக் கேட்டு ஆராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள். ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது. என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புத்தகங்களை உண்டாக்குகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே.

பிரசங்கி 12:9-14 பரிசுத்த பைபிள் (TAERV)

பிரசங்கி ஞானமுடையவர். அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பிரசங்கி மிக கவனமாகப் படித்து தன் பாடங்களைக் கற்றுத்தர ஒழுங்குபடுத்தினார். சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க பிரசங்கி மிகக் கடுமையாக முயற்சி செய்தார். அவர் உண்மையானதும் செம்மையானதுமான போதனைகளை எழுதி வைத்தார். ஞானிகளின் வார்த்தைகள் மிருகங்களை வழி நடத்தப் பயன்படும் கூர்மையான கோல்களைப்போல இருக்கும். அவர்களின் போதனைகள் என்றும் உடைந்துபோகாத உறுதியான ஆப்புகளைப் போன்றிருக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டும் இப்போதனைகள் நம்பிக்கைக்கு உரியவை. இந்த ஞானப் போதனைகள் எல்லாம், அதே மேய்ப்பனிடமிருந்து (தேவன்) வந்தவை. என் மகனே! அப்போதனைகளைக் கற்றுக்கொள். ஆனால் மற்ற புத்தகங்களைப்பற்றி ஜாக்கிரதையாக இரு. ஜனங்கள் எப்பொழுதும் புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதிகமாக வாசிப்பதும் உன்னைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும். இப்போது, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய காரியம் என்ன? ஒரு மனிதனால் செய்யக் கூடிய மிக முக்கியமான செயல் என்னவென்றால், தேவனுக்கு மரியாதை செய்து, அவரது கட்டளைகளுக்கு அடிபணியவேண்டும். ஏனென்றால், தேவன் நாம் செய்யும் அனைத்தையும், இரகசியமான செயல்கள் உட்பட அறிந்திருக்கிறார். அவருக்கு அனைத்து நற்செயல்களைப் பற்றியும், அனைத்து தீய செயல்களைப்பற்றியும் தெரியும். ஜனங்கள் செய்யும் அனைத்தையும் அவர் நியாயம்தீர்ப்பார்.

பிரசங்கி 12:9-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள். ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது. என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.