உபாகமம் 8:3-7

உபாகமம் 8:3-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர் உங்களை சிறுமைப்படுத்தி, உங்களை பசியடையச்செய்து, பின்பு உங்கள் முற்பிதாக்கள் அறியாதிருந்த மன்னாவை உங்களுக்கு உண்ணக்கொடுத்தார். மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, யெகோவாவினுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான் என்று உங்களுக்குப் போதிக்கும்படியே இப்படிச் செய்தார். இந்த நாற்பது வருட காலத்தில் உங்கள் உடைகள் பழையதாகிக் கிழியவுமில்லை, உங்கள் கால்கள் வீங்கவுமில்லை. ஒருவன் தன் மகனைக் கண்டித்து நடத்துவதுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைக் கண்டித்து நடத்துகிறார் என்பதை உங்கள் இருதயத்தில் அறிந்துகொள்ளுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவின் வழிகளில் நடந்து அவரிடத்தில் பயபக்தியாயிருந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வளமான நாட்டிற்குக் கொண்டுவரப்போகிறார். அது ஆறுகளும் நீரோடைகளும் ஏரிகளும் நிறைந்து பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்ந்தோடும் நாடு.

உபாகமம் 8:3-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார். இந்த நாற்பது வருடங்களும் உன்மேல் இருந்த ஆடை பழையதாகிப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை. ஒருவன் தன் மகனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக. ஆகையால், உன் தேவனாகிய யெகோவாவுடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய். உன் தேவனாகிய யெகோவா உன்னை நல்ல தேசத்திலே நுழையச்செய்கிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளுமுள்ள தேசம்

உபாகமம் 8:3-7 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் உங்களைத் தாழ்மையாக்கி உங்களைப் பசியால் வருத்தி, பின் நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் இதுவரை பார்க்காத, “மன்னா” என்னும் உணவை உண்ணச் செய்தார். தேவன் ஏன் இப்படிச் செய்தார்? ஏனென்றால் மனிதன் வெறும் அப்பத்தைத் தின்பதால் மட்டும் உயிர்வாழ்ந்திட முடியாது. அவர்கள் கர்த்தர் கூறியதைக் கேட்பதினாலேயே வாழலாம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என தேவன் விரும்பினார். கடந்த 40 ஆண்டுகளில் உங்களது ஆடைகள் பழைமையடைந்து போகவிடவில்லை. உங்களது கால்கள் வீக்கமடைந்துவிடவில்லை. (ஏனென்றால் கர்த்தர் உங்களைப் பாதுகாத்தார்.) உங்களுக்காக உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஒரு தந்தை தன் குமாரனுக்கு கற்றுக்கொடுத்து அவனைத் திருத்துவதுபோல் தேவன் உங்களுக்கு விளக்கினார். “அத்தகைய உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். அவற்றைப் பின்பற்றி அவரை மதிக்கவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஒரு நல்ல தேசத்திலே வசிக்க அழைத்துக்கொண்டு வருகிறார். அங்கு பள்ளத்தாக்குகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் புறப்படுகின்ற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளும் தண்ணீர்வளம் நிறைந்தது.

உபாகமம் 8:3-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாகப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை. ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக. ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய். உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்