உபாகமம் 8:10-18
உபாகமம் 8:10-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போது, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த அந்த வளமான நாட்டிற்காக அவரைத் துதியுங்கள். நீங்கள் இறைவனை மறந்து நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், சட்டங்களையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளத் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போதும், நல்ல வீடுகளைக் கட்டி, அங்கு குடியிருக்கும்போதும், உங்கள் மாட்டு மந்தைகளும், உங்கள் ஆட்டு மந்தைகளும் பெருகும்போதும், உங்கள் வெள்ளியும் தங்கமும் அதிகரித்து, உங்களிடம் உள்ளவைகள் எல்லாம் பெருகும்போதும் கவனமாயிருக்க வேண்டும். அப்பொழுது உங்கள் இருதயங்கள் பெருமையடைந்து, அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து உங்களை மீட்டுக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை நீங்கள் மறந்துவிடவேண்டாம். ஏனெனில் அவரே உங்களை விஷப்பாம்புகளும் தேள்களும் நிறைந்த, விசாலமும் பயங்கரமுமான, தண்ணீரில்லாத அந்த வறண்ட நிலமாகிய கடினமான பாலைவனத்தின் வழியாக வழிநடத்தி வந்தார். அவர் உங்களுக்குக் கற்பாறையிலிருந்து தண்ணீர் கொடுத்தார். உங்கள் முற்பிதாக்கள் அறிந்திராத மன்னாவை அவர் உங்களுக்குப் பாலைவனத்தில் சாப்பிடக் கொடுத்தார். முடிவில் எல்லாம் உங்களுக்கு நலமாய் இருக்கும்படியாக உங்களைத் தாழ்மைப்படுத்தி உங்களைப் பரீட்சிப்பதற்காகவே அவர் இப்படிச் செய்தார். நீங்கள், “எங்கள் வல்லமையும், எங்கள் கையின் வலிமையுமே இந்த செல்வத்தை எங்களுக்குச் சம்பாதித்தன” என்று எண்ணலாம். ஆனால் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவை நினைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், அவரே இந்த செல்வத்தைச் சம்பாதிக்கும் ஆற்றலை உங்களுக்குக் கொடுக்கிறார்; அவர் இன்றிருப்பதுபோலவே உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறவர்.
உபாகமம் 8:10-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆகையால், நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்திருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிப்பாயாக. “உன் தேவனாகிய யெகோவாவை மறக்காதபடிக்கும், நான் இன்று உனக்குக் கொடுக்கிற அவருடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும், கைக்கொள்ளாமல் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ சாப்பிட்டுத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் மிகுதியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் பெருகும்போதும், உன் இருதயம் பெருமைகொள்ளாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தவரும், உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்வதற்காக, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்திரத்தின்வழியாக உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்தவரும், உன்னுடைய முற்பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்திரத்திலே உன்னைப் பராமரித்துவந்தவருமான உன் தேவனாகிய யெகோவாவை நீ மறக்காமலும், என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய யெகோவாவை நினைப்பாயாக; அவரே உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.
உபாகமம் 8:10-18 பரிசுத்த பைபிள் (TAERV)
அங்கு நீங்கள் உண்ண விரும்புகின்ற எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். இத்தகைய வளம் நிறைந்த, நீங்கள் திருப்தியுடன் மகிழ்வாய் வாழக் கூடிய இந்த நிலத்தை உங்களுக்குத் தந்த உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் பாராட்டிப் போற்றுவீர்கள். “எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் மறந்துவிடாதீர்கள்! கவனமாக இருங்கள். நான் இன்று உங்களுக்குத் தந்த தேவனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். பின், நீங்கள் தாராளமான திருப்தியான உணவை உண்ணலாம். வசதியான வீடுகளை நீங்கள் கட்டி அவைகளை அனுபவித்து வாழலாம். உங்களது ஆடு, மாடு, வெள்ளாடுகள் பெருகி வளார்ச்சியடையும். பொன்னும், வெள்ளியும் மிகுதியாகப் பெறலாம். நீங்கள் எல்லாவற்றையும் தாராளமாக அடையலாம்! இவற்றையெல்லாம் அனுபவிக்கும்போது நீங்கள் கர்வம் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது, நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் கர்த்தர் உங்களை விடுவித்து அங்கிருந்து வெளியேற்றி இங்கு அழைத்து வந்தார். மிகப்பெரிய பயங்கரமான பாலைவனத்தின் வழியாகக் கொள்ளிவாய் பாம்புகளும், கொடிய தேள்களும் நிறைந்த அந்தப் பாலைவனத்தில் வறண்ட நிலமாகத் தண்ணீரே இல்லாத கொடிய பாலைவனமாக இருந்தது. ஆனால், கர்த்தர் அங்கே பாறைகளுக்கு அப்பால் இருந்து உங்களுக்குத் தண்ணீரைத் தந்தார். அந்தப் பாலைவனத்தில் உங்கள் முற்பிதாக்களும் பார்த்திராத ‘மன்னா’ என்னும் உணவை உங்களுக்கு உண்ணக் கொடுத்தார். கர்த்தர் உங்களைச் சோதித்தார். ஏன்? ஏனென்றால், முடிவில் எல்லாம் உங்களுக்கு நன்றாய் நடக்கும்படிக்கு தேவன் உங்களைப் பணியச் செய்தார். ‘எனது சொந்த ஆற்றலினாலும், திறமையினாலுமே எல்லா வகையான இந்த வசதிகளைப் பெற்றேன்’ என்று ஒருநாளும் உனக்குள் சொல்லிவிடாதே. எச்சரிக்கையாய் இரு! உங்கள் தேவனாகிய கர்த்தரையே நினைப்பீர்களாக! அவரே உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தமது உடன்படிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, இந்நாளில் உங்களுக்கு இருக்கின்றச் செல்வங்களை, நீங்கள் ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆற்றலைத் தந்தார்.
உபாகமம் 8:10-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆகையால், நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய். உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும், உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும், உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.