உபாகமம் 8:1-20

உபாகமம் 8:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றக் கவனமாய் இருங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்ந்து பெருகுவீர்கள். உங்கள் முற்பிதாக்களுக்கு யெகோவா ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள்போய் அதை உரிமையாக்கிக்கொள்வீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை சிறுமைப்படுத்தி, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வீர்களோ கைக்கொள்ளமாட்டீர்களோ என உங்களைச் சோதித்து, உங்கள் இருதயத்தில் உள்ளதை அறியும்படிக்கும், இந்த நாற்பது வருடங்களாக பாலைவனத்தில் வழியெங்கும் உங்களை எப்படி வழிநடத்தினார் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களை சிறுமைப்படுத்தி, உங்களை பசியடையச்செய்து, பின்பு உங்கள் முற்பிதாக்கள் அறியாதிருந்த மன்னாவை உங்களுக்கு உண்ணக்கொடுத்தார். மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, யெகோவாவினுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான் என்று உங்களுக்குப் போதிக்கும்படியே இப்படிச் செய்தார். இந்த நாற்பது வருட காலத்தில் உங்கள் உடைகள் பழையதாகிக் கிழியவுமில்லை, உங்கள் கால்கள் வீங்கவுமில்லை. ஒருவன் தன் மகனைக் கண்டித்து நடத்துவதுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைக் கண்டித்து நடத்துகிறார் என்பதை உங்கள் இருதயத்தில் அறிந்துகொள்ளுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவின் வழிகளில் நடந்து அவரிடத்தில் பயபக்தியாயிருந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வளமான நாட்டிற்குக் கொண்டுவரப்போகிறார். அது ஆறுகளும் நீரோடைகளும் ஏரிகளும் நிறைந்து பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்ந்தோடும் நாடு. அது கோதுமையும் வாற்கோதுமையும், திராட்சைத் தோட்டங்களும், அத்திமரங்களும், மாதுளம்பழங்களும், ஒலிவ எண்ணெயும், தேனும் நிறைந்த நாடு. அது உணவு குறைவுபடாத நாடு, அங்கு உங்களுக்குக் குறைவே இருக்காது; அந்த நாட்டின் கற்பாறைகள் இரும்பாய் இருக்கின்றன. அதன் மலைகளில் இருந்து செம்பைத் தோண்டி எடுக்கலாம். நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போது, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த அந்த வளமான நாட்டிற்காக அவரைத் துதியுங்கள். நீங்கள் இறைவனை மறந்து நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், சட்டங்களையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளத் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போதும், நல்ல வீடுகளைக் கட்டி, அங்கு குடியிருக்கும்போதும், உங்கள் மாட்டு மந்தைகளும், உங்கள் ஆட்டு மந்தைகளும் பெருகும்போதும், உங்கள் வெள்ளியும் தங்கமும் அதிகரித்து, உங்களிடம் உள்ளவைகள் எல்லாம் பெருகும்போதும் கவனமாயிருக்க வேண்டும். அப்பொழுது உங்கள் இருதயங்கள் பெருமையடைந்து, அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து உங்களை மீட்டுக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை நீங்கள் மறந்துவிடவேண்டாம். ஏனெனில் அவரே உங்களை விஷப்பாம்புகளும் தேள்களும் நிறைந்த, விசாலமும் பயங்கரமுமான, தண்ணீரில்லாத அந்த வறண்ட நிலமாகிய கடினமான பாலைவனத்தின் வழியாக வழிநடத்தி வந்தார். அவர் உங்களுக்குக் கற்பாறையிலிருந்து தண்ணீர் கொடுத்தார். உங்கள் முற்பிதாக்கள் அறிந்திராத மன்னாவை அவர் உங்களுக்குப் பாலைவனத்தில் சாப்பிடக் கொடுத்தார். முடிவில் எல்லாம் உங்களுக்கு நலமாய் இருக்கும்படியாக உங்களைத் தாழ்மைப்படுத்தி உங்களைப் பரீட்சிப்பதற்காகவே அவர் இப்படிச் செய்தார். நீங்கள், “எங்கள் வல்லமையும், எங்கள் கையின் வலிமையுமே இந்த செல்வத்தை எங்களுக்குச் சம்பாதித்தன” என்று எண்ணலாம். ஆனால் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவை நினைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், அவரே இந்த செல்வத்தைச் சம்பாதிக்கும் ஆற்றலை உங்களுக்குக் கொடுக்கிறார்; அவர் இன்றிருப்பதுபோலவே உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறவர். நீங்களோ எப்பொழுதாவது உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்து, வேறு தெய்வங்களைப் பின்பற்றி அவைகளை வழிபட்டு வணங்குவீர்களானால், நிச்சயமாகவே நீங்கள் அழிக்கப்படுவீர்கள் என்று நான் இன்று உங்களுக்கு விரோதமாய் சாட்சி கூறுகிறேன். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கீழ்ப்படியாதபடியால், உங்களுக்கு முன்பாக யெகோவா அழித்த நாடுகளைப்போலவே நீங்களும் அழிக்கப்படுவீர்கள்.

உபாகமம் 8:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“நீங்கள் பிழைத்து, பெருகி, யெகோவா உங்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திலே நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருப்பீர்களாக. உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார். இந்த நாற்பது வருடங்களும் உன்மேல் இருந்த ஆடை பழையதாகிப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை. ஒருவன் தன் மகனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக. ஆகையால், உன் தேவனாகிய யெகோவாவுடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய். உன் தேவனாகிய யெகோவா உன்னை நல்ல தேசத்திலே நுழையச்செய்கிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளுமுள்ள தேசம்; அது கோதுமையும், வாற்கோதுமையும், திராட்சைச்செடிகளும், அத்திமரங்களும், மாதுளம்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும், தேனுமுள்ள தேசம்; அது குறையில்லாமல் அப்பம் சாப்பிடத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அதின் கற்கள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டியெடுக்கத்தக்க மலைகள் உள்ளதுமான தேசம். ஆகையால், நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்திருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிப்பாயாக. “உன் தேவனாகிய யெகோவாவை மறக்காதபடிக்கும், நான் இன்று உனக்குக் கொடுக்கிற அவருடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும், கைக்கொள்ளாமல் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ சாப்பிட்டுத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் மிகுதியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் பெருகும்போதும், உன் இருதயம் பெருமைகொள்ளாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தவரும், உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்வதற்காக, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்திரத்தின்வழியாக உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்தவரும், உன்னுடைய முற்பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்திரத்திலே உன்னைப் பராமரித்துவந்தவருமான உன் தேவனாகிய யெகோவாவை நீ மறக்காமலும், என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய யெகோவாவை நினைப்பாயாக; அவரே உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். உன் தேவனாகிய யெகோவாவை நீ மறந்து, வேறு தெய்வங்களைப் பின்பற்றி அவைகளை வணங்கி, அவைகளைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாக அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கிறேன். உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், யெகோவா உங்களுக்கு முன்பாக அழித்த மக்களைப்போல நீங்களும் அழிவீர்கள்.

உபாகமம் 8:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் இன்று கொடுக்கின்ற எல்லாக் கட்டளைகளையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால், அப்போதுதான் நீங்கள் வாழ்ந்து வளர்ந்து உயர்ந்ததொரு சமுதாயமாக வரமுடியும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களிடம் சொன்னதுபோல் நீங்கள் சுதந்திரமான தேசத்தைப் பெறமுடியும். இந்தப் பாலைவனத்தில் கடந்துவந்த 40 ஆண்டு காலத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை நடத்தி வந்த எல்லா வழிகளையும் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். கர்த்தர் உங்களை சோதித்துக்கொண்டிருந்தார். உங்களைத் தாழ்மையானவர்களாக்க அவர் விரும்பினார். உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை அறிய அவர் ஆசைப்பட்டார். அவரது கட்டளைகளை நீங்கள் ஒழுங்காகப் பின்பற்றுகிறீர்களா என்பதை அவர் அறிய விரும்பினார். கர்த்தர் உங்களைத் தாழ்மையாக்கி உங்களைப் பசியால் வருத்தி, பின் நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் இதுவரை பார்க்காத, “மன்னா” என்னும் உணவை உண்ணச் செய்தார். தேவன் ஏன் இப்படிச் செய்தார்? ஏனென்றால் மனிதன் வெறும் அப்பத்தைத் தின்பதால் மட்டும் உயிர்வாழ்ந்திட முடியாது. அவர்கள் கர்த்தர் கூறியதைக் கேட்பதினாலேயே வாழலாம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என தேவன் விரும்பினார். கடந்த 40 ஆண்டுகளில் உங்களது ஆடைகள் பழைமையடைந்து போகவிடவில்லை. உங்களது கால்கள் வீக்கமடைந்துவிடவில்லை. (ஏனென்றால் கர்த்தர் உங்களைப் பாதுகாத்தார்.) உங்களுக்காக உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஒரு தந்தை தன் குமாரனுக்கு கற்றுக்கொடுத்து அவனைத் திருத்துவதுபோல் தேவன் உங்களுக்கு விளக்கினார். “அத்தகைய உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். அவற்றைப் பின்பற்றி அவரை மதிக்கவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஒரு நல்ல தேசத்திலே வசிக்க அழைத்துக்கொண்டு வருகிறார். அங்கு பள்ளத்தாக்குகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் புறப்படுகின்ற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளும் தண்ணீர்வளம் நிறைந்தது. அந்த நிலம் கோதுமையையும், பார்லியையும், திராட்சைக் கொடிகளையும், அத்தி மரங்களையும், மாதுளஞ் செடிகளையும் விளைவிக்கும் வளமான நிலம். அது ஒலிவ மரங்களையும், எண்ணெய், தேன் ஆகியவற்றையும் கொடுக்கவல்ல நிலமாகும். அங்கே நீங்கள் தாராளமாக உண்டு வாழலாம். உங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். அது, பாறைகள் இரும்பாக இருக்கும் தேசமாக உள்ளது. அங்குள்ள மலைகளிலிருந்து செம்பு உலோகத்தை நீங்கள் வெட்டி எடுக்கலாம், அங்கு நீங்கள் உண்ண விரும்புகின்ற எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். இத்தகைய வளம் நிறைந்த, நீங்கள் திருப்தியுடன் மகிழ்வாய் வாழக் கூடிய இந்த நிலத்தை உங்களுக்குத் தந்த உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் பாராட்டிப் போற்றுவீர்கள். “எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் மறந்துவிடாதீர்கள்! கவனமாக இருங்கள். நான் இன்று உங்களுக்குத் தந்த தேவனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். பின், நீங்கள் தாராளமான திருப்தியான உணவை உண்ணலாம். வசதியான வீடுகளை நீங்கள் கட்டி அவைகளை அனுபவித்து வாழலாம். உங்களது ஆடு, மாடு, வெள்ளாடுகள் பெருகி வளார்ச்சியடையும். பொன்னும், வெள்ளியும் மிகுதியாகப் பெறலாம். நீங்கள் எல்லாவற்றையும் தாராளமாக அடையலாம்! இவற்றையெல்லாம் அனுபவிக்கும்போது நீங்கள் கர்வம் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது, நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் கர்த்தர் உங்களை விடுவித்து அங்கிருந்து வெளியேற்றி இங்கு அழைத்து வந்தார். மிகப்பெரிய பயங்கரமான பாலைவனத்தின் வழியாகக் கொள்ளிவாய் பாம்புகளும், கொடிய தேள்களும் நிறைந்த அந்தப் பாலைவனத்தில் வறண்ட நிலமாகத் தண்ணீரே இல்லாத கொடிய பாலைவனமாக இருந்தது. ஆனால், கர்த்தர் அங்கே பாறைகளுக்கு அப்பால் இருந்து உங்களுக்குத் தண்ணீரைத் தந்தார். அந்தப் பாலைவனத்தில் உங்கள் முற்பிதாக்களும் பார்த்திராத ‘மன்னா’ என்னும் உணவை உங்களுக்கு உண்ணக் கொடுத்தார். கர்த்தர் உங்களைச் சோதித்தார். ஏன்? ஏனென்றால், முடிவில் எல்லாம் உங்களுக்கு நன்றாய் நடக்கும்படிக்கு தேவன் உங்களைப் பணியச் செய்தார். ‘எனது சொந்த ஆற்றலினாலும், திறமையினாலுமே எல்லா வகையான இந்த வசதிகளைப் பெற்றேன்’ என்று ஒருநாளும் உனக்குள் சொல்லிவிடாதே. எச்சரிக்கையாய் இரு! உங்கள் தேவனாகிய கர்த்தரையே நினைப்பீர்களாக! அவரே உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தமது உடன்படிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, இந்நாளில் உங்களுக்கு இருக்கின்றச் செல்வங்களை, நீங்கள் ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆற்றலைத் தந்தார். “உங்கள் தேவனாகிய கர்த்தரை என்றைக்கும் மறந்துவிடாதீர்கள். மற்ற பொய்த் தெய்வங்களை ஒருபோதும் பின்பற்றிவிடாதீர்கள். அவற்றைத் தொழுதுகொள்ளவோ, சேவிக்கவோ வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்தால் நான் இன்று உங்களை எச்சரிக்கின்றேன், நீங்கள் கண்டிப்பாக அழிந்துவிடுவீர்கள்! கர்த்தர் உங்களுக்காக உங்கள் எதிரிகளை அழித்தார். ஆனால் நீங்களோ அவர்களின் பிற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றினால், உங்களையும் அவர்களைப் போன்றே அழித்துவிடுவார். ஏனென்றால் நீங்கள் தேவனாகிய கர்த்தருக்கு செவிகொடுப்பதை நிறுத்திவிட்டீர்கள்!

உபாகமம் 8:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருப்பீர்களாக. உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாகப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை. ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக. ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய். உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்; அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம்; அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம். ஆகையால், நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய். உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும், உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும், உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன். உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள்.