உபாகமம் 7:1-11

உபாகமம் 7:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிற்குள் உங்களைக் கொண்டுவருவார். அங்கே உங்களுக்கு முன்பாகப் பல நாடுகளை வெளியே துரத்துவார். உங்களைவிட எண்ணிக்கையிலும் வலிமையிலும் பெருத்தவர்களுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டவர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார். இவ்விதமாய் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்களிடம் ஒப்புக்கொடுத்து, நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கும்போது, நீங்கள் அவர்களை முற்றிலும் அழித்துவிடவேண்டும். அவர்களோடு உடன்படிக்கை செய்யவேண்டாம், அவர்களுக்கு இரக்கங்காட்டவேண்டாம். நீங்கள் அவர்களோடு திருமண ஒப்பந்தம் செய்யவேண்டாம். உங்களுடைய மகள்களை அவர்களுடைய மகன்களுக்குத் திருமணம் செய்துகொடுக்கவேண்டாம். அவர்களுடைய மகள்களை உங்களுடைய மகன்களுக்கு எடுக்கவும் வேண்டாம். ஏனெனில், அவர்கள் மற்ற தெய்வங்களை வழிபடுவதற்காக உங்கள் மகன்களை என்னைப் பின்பற்றுவதிலிருந்து விலகச்செய்வார்கள். அப்பொழுது யெகோவாவின் கோபம் உங்களுக்கு எதிராக மூண்டு உங்களை விரைவாக அழித்துப்போடும். நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது இதுவே: அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய அசேரா விக்கிரகக் கம்பங்களை வெட்டி, அவர்களுடைய விக்கிரகங்களை நெருப்பில் எரித்துவிடுங்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குரிய பரிசுத்தமான மக்கள். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு அருமையான உரிமைச்சொத்தாக இருக்கும்படி, அவர் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார். பூமியின் மேலுள்ள மக்கள் கூட்டங்கள் எல்லாவற்றிலுமிருந்து உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார். மற்ற மக்கள் கூட்டங்களைப் பார்க்கிலும் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் என்பதற்காக யெகோவா உங்களில் அன்புகூர்ந்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை, நீங்கள் எல்லா மக்கள் கூட்டங்களிலும் கொஞ்சமாய் இருந்தீர்கள். ஆனாலும் யெகோவா உங்கள்மேல் அன்புகூர்ந்தபடியினால்தான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை உறுதிப்படுத்தவும், அவர் உங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்தும் பார்வோன் அரசனின் அதிகாரத்திலிருந்தும் தமது வல்ல கரத்தினால் விடுவித்து உங்களை மீட்டுக்கொண்டார். ஆகையால் உங்கள் இறைவனாகிய யெகோவா மட்டுமே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள்; அவரே உண்மையுள்ள இறைவன். அவர் தன்னில் அன்புகூர்ந்து தமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, தமது அன்பின் உடன்படிக்கையை ஆயிரம் தலைமுறைக்கும் தொடர்ந்து காத்துக்கொள்கிறவர். ஆனால், தம்மை வெறுக்கிறவர்களை அழிப்பதன்மூலம் அவர்களுக்கு நேரடியாக பதிலளிப்பார்; தம்மை வெறுக்கிறவர்களை நேரடியாகத் தண்டிப்பதற்கு தாமதிக்கமாட்டார். ஆகவே இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் பின்பற்றுவதற்கு நீங்கள் கவனமாய் இருங்கள்.

உபாகமம் 7:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“நீ சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை நுழையச்செய்து, உன்னைவிட எண்ணிக்கையிலும் பெலத்திலும் மிகுந்த மக்களாகிய ஏத்தியர்கள், கிர்காசியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் ஏழு பலத்த தேசங்களை உனக்கு முன்பாகத் துரத்தி, உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களைத் தாக்கி, முற்றிலும் அழித்துவிடவேண்டும்; அவர்களுடன் உடன்படிக்கைசெய்யவும் அவர்களுக்கு மனமிரங்கவும் வேண்டாம். அவர்களுடன் சம்பந்தம் ஏற்படுத்தக்கூடாது; உன் மகள்களை அவர்கள் மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உன் மகன்களுக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக. என்னைப் பின்பற்றாமல், அந்நிய தெய்வங்களை வணங்கும்படி அவர்கள் உன்னுடைய மகன்களை விலகச்செய்வார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும். நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளை உடைத்து, தோப்புகளை வெட்டி, சிலைகளை அக்கினியிலே எரித்துவிடவேண்டும். நீ உன் தேவனாகிய யெகோவா வுக்குப் பரிசுத்த மக்கள், பூமியிலுள்ள எல்லா மக்களிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னைத் தமக்குச் சொந்தமாயிருப்பதற்காகத் தெரிந்துகொண்டார். சகல மக்களிலும் நீங்கள் எண்ணிக்கையில் அதிகமான மக்களென்று யெகோவா உங்கள்மேல் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் எல்லா மக்களிலும் சிறிய கூட்டமாயிருந்தீர்கள். யெகோவா உங்களில் அன்புசெலுத்தியதாலும், உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவேண்டும் என்பதினாலும்; யெகோவா பலத்த கையினால் உங்களைப் புறப்படச்செய்து, அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்தும், அதின் ராஜாவான பார்வோனின் கையிலிருந்தும் உங்களை மீட்டுக்கொண்டார். ஆகையால் உன் தேவனாகிய யெகோவாவே தேவன் என்றும், தம்மில் அன்புவைத்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைவரை உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், தம்மைப் பகைக்கிறவர்களுக்கு வெளிப்படையாகப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் வெளிப்படையாகப் பதிலளிப்பார் என்றும் நீ அறிவாயாக. ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்வாயாக.

உபாகமம் 7:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

“உங்கள் விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாழப்போகின்ற இந்த தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். உங்களுக்காக உங்களைவிடப் பெரியவர்களும், பலசாலிகளுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டினர்களையும் உங்களுக்கு முன்பாகவே துரத்துவார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த ஏழு நாட்டினரையும் உங்களுக்குக் கீழே கட்டுப்பட வைப்பார். அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள். அவர்களை முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அவர்களிடம் எவ்வித ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவர்களிடம் இரக்கம் காட்டாதீர்கள். அவர்களில் எவரையும் மணந்துகொள்ளாதீர்கள். நீங்கள் மட்டுமின்றி உங்கள் குமாரர்களையோ குமாரத்திகளையோ அந்த ஜனங்களைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது. ஏனென்றால் அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளை என்னைப் பின்பற்றுவதிலிருந்து திசைதிருப்பி விடுவார்கள். பின்பு உங்கள் பிள்ளைகள் மற்ற பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வார்கள். அதனால், கர்த்தர் உங்கள்மீது கடுமையாக கோபங்கொள்ள நேரிடும். அவர் உங்களை விரைவில் அழித்துவிடுவார். “நீங்கள் அந்தப் பகைவர்களுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய ஞாபகார்த்தக் கற்களை உடைத்துவிடுங்கள். அவர்களது அஷெரா கோவில் கம்பங்களை வெட்டி வீழ்த்தி, அவர்களது சிலைகளைத் தீயிலிட்டு அழித்துவிடுங்கள்! ஏனென்றால் நீங்கள் எல்லோரும் கர்த்தருடைய சொந்த ஜனங்கள். இந்தப் பூமியில் உள்ள எல்லா ஜனங்களிலிருந்தும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்து தமக்கு விசேஷமான ஜனங்களாக ஆக்கினார். ஏன் கர்த்தர் உங்கள் மீது அன்பு செலுத்தி தேர்ந்தெடுத்தார்? மற்ற ஜனங்களைவிட நீங்கள் அதிகமானவர்கள் என்பதால் அல்ல, மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் மிகக் குறைவானவர்களே! ஆனால், கர்த்தர் தமது பெரிய வல்லமையினால் எகிப்திலிருந்து உங்களை மீட்டு வந்தார். அவர் உங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். எகிப்து நாட்டு மன்னனாகிய பார்வோனின் கட்டுப்பாட்டிலிருந்து உங்களை கர்த்தர் விடுவித்தார். ஏனென்றால் கர்த்தர் உங்கள்மீது அன்பு செலுத்தி உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற விரும்பினார். “ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரிடம் முழு நம்பிக்கை கொள்ளலாம்! அவர் தமது உடன்படிக்கையிலிருந்து விலகமாட்டார். யாரெல்லாம் அவரிடம் அன்பு வைத்து, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்களுக்கெல்லாம் தேவன் தமது அன்பையும், அருளையும் பொழிவார். உங்களிடம் மட்டுமின்றி, உங்களின் ஆயிரம் தலைமுறைகளுக்கும் அவர் தமது அன்பையும் அருளையும் தருவார். ஆனால், அவரை வெறுக்கின்றவர்களை கர்த்தர் தண்டிப்பார். அவர்களை அழித்துவிடுவார். அவர்களைத் தண்டிப்பதில் சிறிதும் தயவு காட்டமாட்டார். எனவே நான் இன்று கொடுக்கும் நமது தேவனுடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும் நீங்கள் எச்சரிக்கையுடன் பின்பற்றவேண்டும்.

உபாகமம் 7:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம்பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம். அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக. என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும். நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும். நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள். கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார். ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் பிரத்தியட்சமாய்ப் பதிலளிப்பார் என்றும் நீ அறியக்கடவாய். ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்வாயாக.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்