உபாகமம் 6:4-17

உபாகமம் 6:4-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபக்குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக. உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக. உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே. நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்வீர்களாக.

உபாகமம் 6:4-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலே கேள்: யெகோவாவே நம்முடைய இறைவன், அவர் ஒருவர் மட்டுமே யெகோவா. உன் இறைவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து. இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் உங்கள் இருதயத்தில் இருக்கவேண்டும். அவற்றை உங்கள் பிள்ளைகளின் மனதில் பதியச்செய்யவேண்டும். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், வெளியே தெருவில் போகும்போதும், படுத்திருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும் அவற்றைக்குறித்துப் பேசிக்கொண்டிருங்கள். அவற்றை உங்கள் கைகளிலும், நெற்றிகளிலும் அடையாளச் சின்னங்களாகக் கட்டிக்கொள்ளுங்கள். அவைகளை உங்கள் வீட்டுக் கதவு நிலைகளிலும், உங்கள் வாசல்களிலும் எழுதிவையுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட அந்த நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்கு, உங்களை அங்கு கொண்டுவருவார். அந்த நாட்டில் நீங்கள் கட்டாத விசாலமான, செழிப்பான பட்டணங்கள் இருக்கின்றன. நீங்கள் சேகரிக்காத பல வகையான நல்ல பொருட்களால் நிறைந்த வீடுகளும், நீங்கள் வெட்டாத கிணறுகளும், நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களும் ஒலிவத்தோப்புகளும் இருக்கின்றன. நீங்கள் அங்கு சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள். அப்பொழுது நீங்கள் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவர் ஒருவரையே பணிந்துகொள். அவருடைய பெயரைக்கொண்டு மட்டுமே சத்தியம் செய்யுங்கள். உங்களைச் சுற்றியிருக்கிற மக்களின் தெய்வங்களாகிய வேறு தெய்வங்களைப் பின்பற்றவேண்டாம். ஏனெனில் உங்கள் மத்தியிலே இருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுள்ள இறைவனாயிருக்கிறார். அவருடைய கோபம் உங்களுக்கு விரோதமாக எரியும்போது, பூமியிலே இராமல் அவர் உங்களை அழித்துப்போடுவார். நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவாவைச் சோதிக்க வேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், அவர் உங்களுக்குக் கொடுத்த ஒழுங்குவிதிகளையும், விதுமுறைகளையும் கைக்கொள்ளக் கவனமாய் இருங்கள்.

உபாகமம் 6:4-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா. நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருப்பதாக. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குத் தெளிவாகப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, அவைகளை உன் கைகளிலே அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாக இருப்பதாக. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக. “உன் தேவனாகிய யெகோவா, உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களாகிய உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்தில் உன்னை நுழையச்செய்யும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல பொருட்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கிற கிணறுகளையும், நீ நடாத திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாயிரு. உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே வாக்குறுதி கொடுப்பாயாக. உன் தேவனாகிய யெகோவாவுடைய கோபம் உன்மேல் ஏற்பட்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடி, உங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களின் தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக. உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய யெகோவா எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே. “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதீர்கள். உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும், சாட்சிகளையும், கட்டளைகளையும் அக்கறையுடன் கைக்கொள்வீர்களாக.

உபாகமம் 6:4-17 பரிசுத்த பைபிள் (TAERV)

“இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், நீ முழு இருதயத்துடன், நிறைவான ஆத்மாவுடன், உன் முழு வலிமையுடன் அன்பு செலுத்தவேண்டும். இன்று நான் கூறும் இந்தக் கட்டளைகளை என்றும் உங்கள் மனதில் வைக்கவேண்டும். நீங்கள் இவற்றைக் கட்டாயமாக உங்கள் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். உங்கள் வீட்டினுள் இருக்கும்போதும் வீதிகளில் நடக்கும்போதும் அவற்றைப் பற்றிப் பேசவேண்டும். நீங்கள் தூங்கச் செல்லும்போதும் உறங்கி எழும்போதும் அவற்றைப் பற்றியே அவர்களிடம் பேச வேண்டும். அவற்றை எழுதிக்கொண்டு அடையாளமாக உங்கள் கைகளில் அணிந்து கொள்ளுங்கள். என் போதனைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப் பயன்படும்படி எப்போதும் அவைகளை உங்கள் நெற்றியில் அணிந்துகொள்ளுங்கள். அவைகளை உங்கள் வீட்டுக்கதவு நிலைக்கால்களிலும் வாசல்களிலும் எழுதி வையுங்கள். “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களிடம் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தப் பூமியை உங்களுக்குத் தருவதாகக் கூறினார். கர்த்தர் உங்களுக்கு அந்த பூமியைக் கொடுப்பார். நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம். “ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள்! கர்த்தரை மறந்துவிடாதிருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள், ஆனால் கர்த்தர் உங்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செய்து அவர் ஒருவரை மட்டும் சேவியுங்கள். அவரது பெயரை மட்டுமே வைத்து மற்றவருக்கு வாக்களியுங்கள் (பிற பொய்த் தெய்வங்களின் பெயரைப் பயன்படுத்தாதிருங்கள்!) நீங்கள் கண்டிப்பாக பிற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றக் கூடாது. உங்களைச் சுற்றியிருக்கின்ற ஜனங்களின் பிற பொய்த் தெய்வங்களை நீங்கள் பின்பற்றக் கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் தமது ஜனங்கள் பிற பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கின்றார். எனவே, நீங்கள் அத்தகைய தெய்வங்களைப் பின்பற்றினால் உங்கள் மீது கர்த்தர் மிகவும் கோபங்கொள்வார். அவர் உங்களை இந்தப் பூமியில் இருந்தே அழித்துவிடுவார். “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல் உங்கள் தேவனாகிய கர்த்தரை சோதனை செய்யாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர் உங்களுக்காக வழங்கிய எல்லா போதனைகளையும், சட்டங்களையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

உபாகமம் 6:4-17

உபாகமம் 6:4-17 TAOVBSIஉபாகமம் 6:4-17 TAOVBSIஉபாகமம் 6:4-17 TAOVBSIஉபாகமம் 6:4-17 TAOVBSI