உபாகமம் 6:12-19

உபாகமம் 6:12-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக. உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக. உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே. நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்வீர்களாக. நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும், கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.

உபாகமம் 6:12-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது நீங்கள் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவர் ஒருவரையே பணிந்துகொள். அவருடைய பெயரைக்கொண்டு மட்டுமே சத்தியம் செய்யுங்கள். உங்களைச் சுற்றியிருக்கிற மக்களின் தெய்வங்களாகிய வேறு தெய்வங்களைப் பின்பற்றவேண்டாம். ஏனெனில் உங்கள் மத்தியிலே இருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுள்ள இறைவனாயிருக்கிறார். அவருடைய கோபம் உங்களுக்கு விரோதமாக எரியும்போது, பூமியிலே இராமல் அவர் உங்களை அழித்துப்போடுவார். நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவாவைச் சோதிக்க வேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், அவர் உங்களுக்குக் கொடுத்த ஒழுங்குவிதிகளையும், விதுமுறைகளையும் கைக்கொள்ளக் கவனமாய் இருங்கள். யெகோவாவினுடைய பார்வையில் சரியானதையும் நலமானதையும் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் நலமாய் இருப்பீர்கள். நீங்கள் யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு, வாக்குப்பண்ணிய அந்த நல்ல நாட்டிற்குள்போய், அதை உரிமையாக்கிக்கொள்வீர்கள். அப்பொழுது யெகோவா சொன்னதுபோலவே உங்களுக்கு முன்பாக உங்கள் பகைவர்களைத் துரத்திவிடுவார்.

உபாகமம் 6:12-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாயிரு. உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே வாக்குறுதி கொடுப்பாயாக. உன் தேவனாகிய யெகோவாவுடைய கோபம் உன்மேல் ஏற்பட்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடி, உங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களின் தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக. உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய யெகோவா எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே. “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதீர்கள். உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும், சாட்சிகளையும், கட்டளைகளையும் அக்கறையுடன் கைக்கொள்வீர்களாக. நீ நன்றாயிருக்கிறதற்கும், யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த நல்ல தேசத்தில் நீ நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கும், யெகோவா தாம் சொன்னபடி, உன் எதிரிகளையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ யெகோவாவுடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாக இருக்கிறதைச் செய்வாயாக.

உபாகமம் 6:12-19 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள்! கர்த்தரை மறந்துவிடாதிருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள், ஆனால் கர்த்தர் உங்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செய்து அவர் ஒருவரை மட்டும் சேவியுங்கள். அவரது பெயரை மட்டுமே வைத்து மற்றவருக்கு வாக்களியுங்கள் (பிற பொய்த் தெய்வங்களின் பெயரைப் பயன்படுத்தாதிருங்கள்!) நீங்கள் கண்டிப்பாக பிற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றக் கூடாது. உங்களைச் சுற்றியிருக்கின்ற ஜனங்களின் பிற பொய்த் தெய்வங்களை நீங்கள் பின்பற்றக் கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் தமது ஜனங்கள் பிற பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கின்றார். எனவே, நீங்கள் அத்தகைய தெய்வங்களைப் பின்பற்றினால் உங்கள் மீது கர்த்தர் மிகவும் கோபங்கொள்வார். அவர் உங்களை இந்தப் பூமியில் இருந்தே அழித்துவிடுவார். “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல் உங்கள் தேவனாகிய கர்த்தரை சோதனை செய்யாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர் உங்களுக்காக வழங்கிய எல்லா போதனைகளையும், சட்டங்களையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். நீங்கள் கர்த்தரைத் திருப்திப்படுத்தும்படி நல்லவற்றையும், சரியானவற்றையும் மட்டுமே செய்யவேண்டும். அப்போது எல்லாம் உங்களுக்கு நன்றாகவே நடக்கும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு உறுதியளித்த தேசத்தில் போய் நல்ல நிலங்களை எடுத்துக்கொள்ளலாம். கர்த்தர் சொன்னது போல் உங்கள் எதிரிகள் அனைவரையும் நீங்கள் துரத்திவிடலாம்.