உபாகமம் 6:10-12

உபாகமம் 6:10-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்கள் இறைவனாகிய யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட அந்த நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்கு, உங்களை அங்கு கொண்டுவருவார். அந்த நாட்டில் நீங்கள் கட்டாத விசாலமான, செழிப்பான பட்டணங்கள் இருக்கின்றன. நீங்கள் சேகரிக்காத பல வகையான நல்ல பொருட்களால் நிறைந்த வீடுகளும், நீங்கள் வெட்டாத கிணறுகளும், நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களும் ஒலிவத்தோப்புகளும் இருக்கின்றன. நீங்கள் அங்கு சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள். அப்பொழுது நீங்கள் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள்.

உபாகமம் 6:10-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“உன் தேவனாகிய யெகோவா, உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களாகிய உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்தில் உன்னை நுழையச்செய்யும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல பொருட்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கிற கிணறுகளையும், நீ நடாத திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாயிரு.

உபாகமம் 6:10-12 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களிடம் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தப் பூமியை உங்களுக்குத் தருவதாகக் கூறினார். கர்த்தர் உங்களுக்கு அந்த பூமியைக் கொடுப்பார். நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம். “ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள்! கர்த்தரை மறந்துவிடாதிருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள், ஆனால் கர்த்தர் உங்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார்.

உபாகமம் 6:10-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்