உபாகமம் 4:1-9
உபாகமம் 4:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இஸ்ரயேலரே, நான் உங்களுக்குப் போதிக்கும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கேளுங்கள். அவற்றைக் கைக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்ந்திருந்து, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள்போய், அதை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்வீர்கள். நான் கட்டளையிடும் இவற்றுடன் ஒன்றையும் கூட்டவும் வேண்டாம், ஒன்றையும் குறைக்கவும் வேண்டாம். ஆனால் நான் உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். பாகால் பேயோரில் யெகோவா செய்தவற்றை உங்கள் கண்களாலேயே கண்டீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் மத்தியில் பேயோரில் இருந்த பாகாலைப் பின்பற்றிய எல்லோரையும் அழித்துப்போட்டார். ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவாவை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட நீங்கள் எல்லோரும் இன்றுவரை இன்னும் உயிரோடிருக்கிறீர்கள். பாருங்கள், என் இறைவனாகிய யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே, விதிமுறைகளையும் சட்டங்களையும் நான் உங்களுக்குப் போதித்திருக்கிறேன். ஆகவே நீங்கள் உரிமையாக்கப்போகும் நாட்டிலே அவற்றைப் பின்பற்றுங்கள். அவற்றை நீங்கள் கவனமாய்க் கைக்கொள்ளுங்கள்; ஏனெனில் இது உங்கள் ஞானத்தையும் விவேகத்தையும் பிற நாடுகளுக்குக் காண்பிக்கும். அவர்கள் இக்கட்டளைகள் எல்லாவற்றையும் பற்றிக் கேள்விப்பட்டு, “நிச்சயமாகவே இந்தப் பெரிய நாடு ஞானமும் விவேகமும் உள்ள மக்களைக் கொண்டது” என சொல்வார்கள். நமது இறைவனாகிய யெகோவாவை நாம் கூப்பிடுகிறபோதெல்லாம் அவர் நமக்கு அருகில் இருப்பதுபோல, தங்களுக்கு அருகே வரத்தக்க தெய்வத்தைக்கொண்ட வேறு நாடு எது? இன்று நான் உங்களுக்கு முன்பாக வைக்கப்போகிற, சட்டங்களை போன்ற நியாயமான விதிமுறைகளையும், நீதிநெறிகளையும் பெற்றிருக்கிற வேறு பெரிய நாடு எது? எச்சரிக்கையாயிருங்கள், உங்கள் கண்கள் கண்ட காரியங்களை மறவாமலும், நீங்கள் உயிர்வாழும் நாளெல்லாம் அவற்றை உங்கள் இருதயத்தில் காத்துக்கொள்ள கவனமாயிருங்கள். அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் போதியுங்கள்.
உபாகமம் 4:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“இஸ்ரவேலர்களே, நீங்கள் பிழைத்திருப்பதற்கும், உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நுழைந்து அதைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கும், நீங்கள் கைக்கொள்வதற்காக நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள். நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம். பாகால்பேயோரின் நிமித்தம் யெகோவா செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதர்களையெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இராதபடி அழித்துப்போட்டார். ஆனாலும் உங்கள் தேவனாகிய யெகோவாவைப் பற்றிக்கொண்ட நீங்கள் எல்லோரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள். நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும்படி நுழையும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய யெகோவா எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன். ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; மக்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாக இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய மக்கள் கூட்டமே ஞானமும் விவேகமும் உள்ள மக்கள் என்பார்கள். நம்முடைய தேவனாகிய யெகோவாவை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாகப் பெற்றிருக்கிற வேறே பெரிய மக்கள் கூட்டம் எது? இந்நாளில் நான் உங்களுக்கு கொடுக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுவதற்கும் இணையாக இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய மக்களும் எது? ஓரேபிலே உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ நிற்கும்போது, யெகோவா என்னை நோக்கி: “மக்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கச்செய்வேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொன்ன நாளில்
உபாகமம் 4:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)
“இஸ்ரவேல் ஜனங்களே, இனி நான் போதிக்கும் கட்டளைகளையும், நியாயங்களையும் கவனியுங்கள். அவற்றைக் கடைபிடித்தால் நீங்கள் வாழலாம். பிறகு உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் நிலத்தை, சென்று எடுத்துக்கொள்ளுங்கள். நான் இடும் கட்டளைகளுடன் எதையும் நீங்கள் சேர்க்கவும் கூடாது. மேலும் எதையும் (நீங்கள்) நீக்கவும் கூடாது. நான் உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். “பாகால்பேயோரின் நிமித்தம், கர்த்தர் என்ன செய்தார் என்று பார்த்தீர்கள். பொய்த் தெய்வங்களான அங்குள்ள பாகாலை வழிபட்ட உங்கள் ஜனங்கள் அனைவரையும், உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கே அழித்தார். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தரோடு இருந்த நீங்கள் அனைவரும் இன்று உயிருடன் இருக்கின்றீர்கள். “என் தேவனாகிய கர்த்தர் எனக்கிட்ட கட்டளையின்படி உங்களுக்கு கட்டளைகளையும், நியாயங்களையும் போதித்தேன். நீங்கள் நுழையவும் வசப்படுத்தவும் தயாராகவுள்ள எந்த நாட்டிலும் அச்சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென்பதற்காகவே நான் அவற்றைப் போதித்தேன், எச்சரிக்கையுடன் இச்சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் அறிவும், ஞானமும் உள்ளவர்கள் என்பதை இது மற்ற நாட்டு ஜனங்களுக்கு எடுத்துக்காட்டும். அந்நாட்டு ஜனங்களும் இச்சட்டங்களைக் கேள்விப்படும்போது, ‘உண்மையிலேயே, இந்த பெரிய ஜனத்தின் (இஸ்ரவேலர்) ஜனங்கள் ஞானமுள்ளவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள். “நாம் உதவி கேட்கும்பொழுது தேவனாகிய கர்த்தர் நமது அருகில் இருக்கிறார். வேறெந்த நாட்டிற்கும் அவரைப்போல ஒரு தேவன் இல்லை! நான் இன்று உங்களுக்கு வழங்கும் போதனைகளைப் போன்று நீதியான சட்டவிதிகள் வேறு எந்த பெரிய ஜனத்துக்கும் இல்லை. ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இவைகள் உங்கள் இதயத்திலிருந்து நீங்காதபடிக்கு காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றை உங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.
உபாகமம் 4:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள். நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி. நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம். பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார். ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்ட நீங்களெல்லாரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள். நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன். ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள். நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது? ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்