உபாகமம் 32:41-47

உபாகமம் 32:41-47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பளபளக்கும் என் வாளை நான் கூராக்கி, நீதி வழங்கும்படி என் கை அதைப் பற்றிக்கொள்ளும்போது, என் எதிரிகளிடம் பழிவாங்குவேன்; என்னை வெறுத்தவர்களுக்குப் பதில் செய்வேன். செத்தும், சிறைப்பட்டும் போனவர்களின் இரத்தத்தினால் நான் என் அம்புகளை வெறிகொள்ளச் செய்வேன். எனது வாளோ அவர்களின் சதையைத் தின்னும்; அது பகைவரின் தலைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தும் என்பதும் நிச்சயம்.” நாடுகளே, அவருடைய மக்களோடு சேர்ந்து களிகூருங்கள். அவர் தன் பணியாட்களின் இரத்தத்துக்காகப் பழிவாங்குவார். அவர் தமது பகைவரைப் பழிவாங்கி, தமது நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்திசெய்வார். பின்பு மோசே நூனின் மகனான யோசுவாவுடன் வந்து, இந்தப் பாட்டின் சொற்களையெல்லாம் மக்கள் கேட்கும்படி பேசினான். மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரயேலர் எல்லாருக்கும் சொல்லி முடித்தபின்பு, அவன் அவர்களிடம், “நான் இன்று பயபக்தியுடன் உங்களுக்கு அறிவித்த இந்த வார்த்தைகளை உங்கள் இருதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள். இந்த சட்டத்தின் வார்த்தைகளுக்கெல்லாம் கவனமாய் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கும் கட்டளையிடுங்கள். அவை உங்களுக்குக் கொடுக்கப்படும் வீண் வார்த்தைகள் அல்ல. அவையே உங்களுக்கு உயிர்கொடுக்கும். நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் இந்த வார்த்தைகளினால் நீடித்து வாழ்வீர்கள்” என்றான்.

உபாகமம் 32:41-47 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் எதிரிகளிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதில்கொடுப்பேன். கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும். “மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய எதிரிகளுக்குப் பதில்கொடுத்து, தமது தேசத்தின்மேலும் தமது மக்களின்மேலும் கிருபையுள்ளவராக இருப்பார்”. மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள். மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர்கள் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு, அவர்களை நோக்கி: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள். இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான்.

உபாகமம் 32:41-47 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் எனது பளபளக்கும் வாளைக் கூர்மைப்படுத்துவேன். எனது எதிரிகளைத் தண்டிக்க அதனைப் பயன்படுத்துவேன். அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் கொடுப்பேன். எனது பகைவர்கள் கொல்லப்படுவார்கள். கைதிகளாக சிறைபிடிக்கப்படுவார்கள். எனது அம்புகள் அவர்களது இரத்தத்தால் மூடப்படும். அவர்களது வீரர்களின் தலைகளை எனது வாள் வெட்டும்.’ “இந்த உலகம் முழுவதும் தேவஜனங்களுக்காக மகிழவேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு அவர் உதவுகிறார். அவர்களது வேலைகாரர்களைக் கொன்ற ஜனங்களை அவர் தண்டிக்கிறார். அவர் அவரது பகைவர்களுக்கு ஏற்ற தண்டனைகளைக் கொடுக்கிறார். அவர் அவரது நாட்டையும், ஜனங்களையும் சுத்தம் செய்கிறார்.” மோசே வந்து அவனது பாடலில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்கும்படி பாடினான். நூனின் குமாரனாகிய யோசுவாவும் மோசேயோடு இருந்தான். மோசே இவற்றை ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்து முடித்தபோது அவன் அவர்களிடம், “இன்று நான் உங்களுக்குச் சொன்ன அனைத்துக் கட்டளைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தில் உள்ள கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லவேண்டும். இந்தப் போதனைகளை முக்கியமற்றவை என்று நீங்கள் எண்ணவேண்டாம். அவை உங்கள் ஜீவன் ஆகும். இந்தப் போதனைகள் மூலம், யோர்தான் ஆற்றைக் கடந்துபோய் நீங்கள் சுதந்தரிக்கத் தயாராக இருக்கும் தேசத்தில் நீண்ட வாழ்வை வாழப்போகிறீர்கள்” என்றான்.

உபாகமம் 32:41-47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன். கொலையுண்டும் சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளப்பண்ணுவேன்; என் பட்டயம் தலைவர் முதற்கொண்டு சகல சத்துருக்களின் மாம்சத்தையும் பட்சிக்கும். ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்; அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழி வாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார். மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள். மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு, அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலேவையுங்கள். இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.