உபாகமம் 32:1-47

உபாகமம் 32:1-47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். கர்த்தருடைய நாமத்தை பிரசித்தம்பண்ணுவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள். அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார், விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே, இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள், உன்னை ஆட்கொண்ட பிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா? பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள். உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார். கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம். பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை. பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார். பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய். யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான். அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும், நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய். கர்த்தர் அதைக்கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து: என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள். தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்கள் மாயைகளினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத ஜனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட ஜாதியினால் அவர்களைப் கோபப்படுத்துவேன். என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும். தீங்குகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பிரயோகிப்பேன். அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும், கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள்; துஷ்டமிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும், கன்னியையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும். எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைஞர் தப்பெண்ணங்கொண்டு சொல்லுவார்கள் என்று, நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பேர் அற்றுப்போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன். அவர்கள் யோசனைகெட்ட ஜாதி, அவர்களுக்கு உணர்வு இல்லை. அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார். அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி? தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள். அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது. அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது. இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ? பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும். கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று, பானபலிகளின் திராட்சரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே? அவைகள் எழுந்து உங்களுக்குச் சகாயம்பண்ணி உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும். நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை. நான் என் கரத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன். மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன். கொலையுண்டும் சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளப்பண்ணுவேன்; என் பட்டயம் தலைவர் முதற்கொண்டு சகல சத்துருக்களின் மாம்சத்தையும் பட்சிக்கும். ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்; அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழி வாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார். மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள். மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு, அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலேவையுங்கள். இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.

உபாகமம் 32:1-47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன். பூமியே என் வாயின் வார்த்தைகளைக் கேள். என் போதனை மழைபோலப் பெய்யட்டும். என் வார்த்தைகள் பனிபோல் இறங்கட்டும், அவை பசும்புல்மேல் மழைத்தூறல் போலவும், இளஞ்செடிகளின் மேல் பெருமழைபோலவும் பெய்யட்டும். நான் யெகோவாவின் பெயரை அறிவிப்பேன். எங்கள் இறைவனின் மகத்துவத்தைத் துதியுங்கள்! அவரே கற்பாறை, அவருடைய செயல்கள் முழு நிறைவானவை. அவரது வழிகளெல்லாம் நீதியானவை. அவர் உண்மையுள்ள இறைவன். அவர் அநியாயம் செய்வதில்லை. அவர் நேர்மையும், நீதியுமானவர். இஸ்ரயேலரோ அவர்முன் இழிவானவற்றைச் செய்தார்கள். அதனால் அவருடைய பிள்ளைகளாய் இராமல், கபடமும் வஞ்சகமும் உள்ள சந்ததியாய் மாறி வெட்கத்திற்குள்ளானார்கள். மூடரும், ஞானம் அற்றவர்களுமான மக்களே! நீங்கள் யெகோவாவுக்கு நன்றிக்கடன் செய்வது இவ்விதம் தானோ? உங்களைப் படைத்த தகப்பன் அவரல்லவா? உங்களைப் படைத்து உருவாக்கியவர் அவரல்லவா? பழைய நாட்களை நினைவுகூருங்கள்; கடந்துபோன தலைமுறைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தகப்பனிடம் கேளுங்கள் அவர் உங்களுக்குச் சொல்வார், உங்கள் சபைத்தலைவர்களிடம் கேளுங்கள், அவர்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துவார்கள். மகா உன்னதமானவர் நாடுகளுக்கு உரிமைச்சொத்தைப் பங்கிட்டபோது, எல்லா மனுக்குலத்தையும் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கையின்படியே, மக்கள் கூட்டங்களின் எல்லைகளைத் திட்டமிட்டார். யெகோவாவின் மக்களே அவரின் பங்கு, யாக்கோபே அவருடைய உரிமைச்சொத்து. அவர் அவர்களைப் பாலைவன நாட்டிலே கண்டெடுத்தார்; அதுவோ வறண்டதும், நரி ஊளையிடும் பாழ்நிலமுமாய் இருந்தது. அவர் அவர்களைப் பாதுகாத்துப் பராமரித்தார். அவர் அவர்களைத் தமது கண்மணிபோல் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளுக்கு மேலாக அசைவாடி, தன் சிறகுகளை விரித்து அவைகளை ஏந்திக்கொண்டு, தன் செட்டைகளின்மேல் சுமந்து செல்வதுபோல, யெகோவா ஒருவரே அவர்களை வழிநடத்தினர், அவர்களுடன் வேறு அந்நிய தெய்வம் இருக்கவில்லை. அவர் அவர்களை நிலத்தின் மேடுகளில் ஏறி நடக்கச் செய்தார். வயலின் பலன்களினால் அவர்களுக்கு உணவு கொடுத்தார். கற்பாறையில் இருந்து எடுத்த தேனினாலும், வைரப்பாறையிலிருந்து வழியும் எண்ணெயினாலும் அவர்களுக்கு ஊட்டமளித்தார். பசுக்களின் தயிர், ஆடுகளின் பால், கொழுத்த செம்மறியாட்டுக் குட்டிகள், வெள்ளாடுகள், பாசானில் தெரிந்தெடுத்த செம்மறியாட்டுக் கடாக்கள், சிறந்த கோதுமைத்தானியம் ஆகியவற்றாலும் ஊட்டமளித்தார். நுரைக்கும் இரத்தம் போன்ற திராட்சைப்பழத்தின் ரசத்தையும் குடித்தார்கள். யெஷூரன் கொழுப்பு மிகுந்து அடங்காதவன் ஆனான். அவர்கள் வயிறாரத்தின்று, கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமுடையவர்களானார்கள். அப்பொழுது அவர்கள் தங்களைப் படைத்த இறைவனையே கைவிட்டு, தங்கள் இரட்சிப்பின் கற்பாறையையும் புறக்கணித்தார்கள். இஸ்ரயேலர் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி யெகோவாவுக்கு எரிச்சல்மூட்டி, தங்கள் அருவருப்பான விக்கிரகங்களால் அவருக்குக் கோபம் உண்டாக்கினார்கள். அவர்கள் பேய்களுக்குப் பலி செலுத்தினார்கள். அவை இறைவன் அல்ல. அவர்கள் முன்பு அறிந்திராத தெய்வங்களே அவை. சமீபத்தில் தோன்றியதும், உங்கள் முற்பிதாக்கள் பயப்படாததுமான தெய்வங்கள். உங்களை உருவாக்கிய கற்பாறையைக் கைவிட்டு விட்டீர்கள். உங்களைப் பெற்றெடுத்த இறைவனையும் மறந்துபோனீர்கள். யெகோவா இதைக்கண்டு தனது மகன்களும், மகள்களுமான அவர்களோடு கோபம் கொண்டதனால் அவர்களைப் புறக்கணித்து சொன்னதாவது: “அவர்களுக்கு என் முகத்தை மறைப்பேன்; அவர்களின் முடிவு எப்படியாகும் என பார்ப்பேன். மேலும் அவர், அவர்கள் கொடுமையில் ஊறிய தலைமுறையினர், நம்பிக்கை துரோகம் செய்யும் பிள்ளைகள். தெய்வம் அல்லாதவற்றால் எனக்கு எரிச்சல்மூட்டி, பயனற்ற விக்கிரகங்களினால் கோபத்தை மூட்டினார்கள். நான் மக்களென மதிக்கப்படாதவர்களால் அவர்களுக்கு எரிச்சல் மூட்டுவேன், பகுத்தறிவு இல்லாத தேசத்தால், நான் அவர்களுக்குக் கோபமூட்டுவேன். எனது கோபத்தினால் நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது, அது பாதாளத்தின்கீழ் முனைவரையும் எரிகிறது. அது பூமியையும், அதன் விளைச்சலையும் எரிக்கும், மலைகளின் அஸ்திபாரங்களையும் கொலித்திவிடும். “நான் அவர்கள்மேல் பேரழிவுகளைக் குவிப்பேன்; அவர்கள்மேல் என் அம்புகளை கணக்கின்றி எய்வேன். நான் அவர்களுக்கு எதிராக வாட்டும் பஞ்சத்தை அனுப்புவேன்; விழுங்கும் கொள்ளைநோய்களையும், சாகடிக்கும் வாதைகளையும் அனுப்புவேன். கூரிய பற்களையுடைய காட்டு மிருகங்களையும், புழுதியில் ஊரும் விஷப்பாம்புகளையும் அனுப்புவேன். வீதிகளிலே, வாளானது அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கும்; அவர்களுடைய வீடுகளில் பயங்கரம் ஆளுகை செய்யும். இளைஞரும், இளம்பெண்களும் அழிவார்கள்; குழந்தைகளும் நரைத்துப்போன கிழவர்களும் அழிவார்கள். நான் அவர்களைச் சிதறடிப்பேன்; மனுக்குலத்தில் இருந்து அவர்களைப்பற்றிய ஞாபகத்தையும் அற்றுப்போகப்பண்ணுவேன். ‘எங்கள் கைகளே வெற்றிகொண்டன, யெகோவா இவற்றைச் செய்யவில்லை’ என்று, தப்பான எண்ணங்கொண்டு அவர்களுடைய பகைவன், ஏளனம் செய்வான் என்றே தயங்கினேன்.” இஸ்ரயேல் ஒரு உணர்வற்ற நாடு, நிதானிக்கும் ஆற்றல் அவர்களிடமில்லை. அவர்கள் ஞானமுள்ளவர்களாயிருந்து, இதை விளங்கிக்கொண்டு, தங்களது முடிவை நிதானித்தறிந்தால் நலமாயிருக்கும். அவர்களில் ஆயிரம்பேரை ஒருவன் துரத்துவதெப்படி? பத்தாயிரம்பேரை இருவர் ஒடவைப்பது எப்படி? அவர்களுடைய கற்பாறையான யெகோவா அவர்களை விற்றுப்போடாவிட்டால், அல்லது யெகோவா அவர்களைக் கைவிடாவிட்டால் இது எப்படி நடக்கும்? நமது பகைவர் ஒத்துக்கொள்வதுபோல், அவர்களுடைய கல் நம்முடைய கற்பாறையானவரைப் போன்றது அல்ல. பகைவர்களின் திராட்சைக்கொடி சோதோமின் திராட்சைக் கொடியிலிருந்து உண்டானது. கொமோராவின் வயல்களிலிருந்து வந்தது. அவர்களின் திராட்சைப் பழங்கள் நஞ்சு நிறைந்தவை. அவர்களுடைய திராட்சைக் குலைகள் கசப்பு நிறைந்தவை. அவர்களின் திராட்சை இரசம் பாம்புகளின் விஷமாயிருக்கிறது. அது நாகபாம்பின் கொடிய நஞ்சாயிருக்கிறது. “யெகோவா சொல்கிறதாவது: இதை நான் சேர்த்துவைத்து, என் களஞ்சியங்களில் முத்திரையிடவில்லையோ? பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதில் செய்வேன். ஏற்றகாலத்தில் அவர்களின் கால்கள் சறுக்கும். அவர்களுடைய பேரழிவின் நாள் நெருங்கிற்று. அவர்களின் பேரழிவு அவர்கள்மேல் விரைந்துவருகிறது” என்றார். யெகோவா தமது மக்களை நியாயந்தீர்ப்பார். அவர் தன் பணியாட்கள்மேல் கருணைகாட்டுவார். அவர்களின் பெலன் அற்றுப்போவதையும் அவர்களில் அடிமையோ, சுயாதீனரோ ஒருவனும் தப்பாமல் இருப்பதையும் காணும்போது அவர் இரக்கம் காட்டுவார். ஆனாலும் அவர், “இப்பொழுது அவர்களுடைய தெய்வங்கள் எங்கே? அவர்கள் அடைக்கலம் புகுந்த கல் எங்கே? அவர்களுடைய பலிகளின் கொழுபைத்தின்ற தெய்வங்கள் எங்கே? பானகாணிக்கைகளின் திராட்சை இரசத்தைக் குடித்த தெய்வங்கள் எங்கே? அவை உங்களுக்கு உதவிசெய்ய எழுந்திருக்கட்டும். அவை உங்களுக்கு அடைக்கலம் கொடுக்கட்டும்” என்பார். “இப்பொழுது பாருங்கள், நான், நானே அவர்! என்னைவிட வேறு தெய்வமில்லை. நானே கொல்கிறேன்; நானே உயிர்ப்பிக்கிறேன். நானே காயப்படுத்தினேன், நானே குணப்படுத்துவேன். என் கையிலிருந்து விடுவிக்க ஒருவராலும் முடியாது.” நான் என் கைகளை வானத்திற்கு உயர்த்தி அறிவிக்கிறதாவது: “நான் என்றென்றும் வாழ்வது நிச்சயம்போல, பளபளக்கும் என் வாளை நான் கூராக்கி, நீதி வழங்கும்படி என் கை அதைப் பற்றிக்கொள்ளும்போது, என் எதிரிகளிடம் பழிவாங்குவேன்; என்னை வெறுத்தவர்களுக்குப் பதில் செய்வேன். செத்தும், சிறைப்பட்டும் போனவர்களின் இரத்தத்தினால் நான் என் அம்புகளை வெறிகொள்ளச் செய்வேன். எனது வாளோ அவர்களின் சதையைத் தின்னும்; அது பகைவரின் தலைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தும் என்பதும் நிச்சயம்.” நாடுகளே, அவருடைய மக்களோடு சேர்ந்து களிகூருங்கள். அவர் தன் பணியாட்களின் இரத்தத்துக்காகப் பழிவாங்குவார். அவர் தமது பகைவரைப் பழிவாங்கி, தமது நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்திசெய்வார். பின்பு மோசே நூனின் மகனான யோசுவாவுடன் வந்து, இந்தப் பாட்டின் சொற்களையெல்லாம் மக்கள் கேட்கும்படி பேசினான். மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரயேலர் எல்லாருக்கும் சொல்லி முடித்தபின்பு, அவன் அவர்களிடம், “நான் இன்று பயபக்தியுடன் உங்களுக்கு அறிவித்த இந்த வார்த்தைகளை உங்கள் இருதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள். இந்த சட்டத்தின் வார்த்தைகளுக்கெல்லாம் கவனமாய் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கும் கட்டளையிடுங்கள். அவை உங்களுக்குக் கொடுக்கப்படும் வீண் வார்த்தைகள் அல்ல. அவையே உங்களுக்கு உயிர்கொடுக்கும். நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் இந்த வார்த்தைகளினால் நீடித்து வாழ்வீர்கள்” என்றான்.

உபாகமம் 32:1-47 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். யெகோவாவுடைய நாமத்தை பிரபலப்படுத்துவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள். “அவர் கன்மலை; அவருடைய செயல் உத்தமமானது; அவருடைய வழிகளெல்லாம் நியாயம், அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்களுடைய காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார். விவேகமில்லாத மதிகெட்ட மக்களே, இப்படியா யெகோவாவுக்குப் பதிலளிக்கிறீர்கள், உன்னை ஆட்கொண்ட தகப்பன் அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா? ஆரம்பநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாக கடந்துபோன வருடங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள். உன்னதமான தேவன் மக்களுக்குச் சொத்துக்களைப் பங்கிட்டு, ஆதாமின் பிள்ளைகளை வெவ்வேறாகப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கைக்குத்தக்கதாக, அனைத்து மக்களின் எல்லைகளைத் திட்டம்செய்தார். யெகோவாவுடைய மக்களே அவருடைய பங்கு; யாக்கோபு அவருக்குச் சொந்தமானவர்கள். “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான வெட்டவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் இறக்கைகளை விரித்து, குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல, யெகோவா ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தெய்வம் அவருடன் இருந்ததில்லை. பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்; வயலில் விளையும் பலனை அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் சாப்பிடும்படி செய்தார். பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற பொங்கிவழிகிற திராட்சைரசத்தையும் சாப்பிட்டாய். “யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமானதால், தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு, தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைசெய்தான். அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ நினைக்காமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய். “யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும், மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து, அவர்களைப் புறக்கணித்து: என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள். தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன். என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். “தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன். அவர்கள் பசியினால் வாடி, சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்; கொடிய மிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும், இளம்பெண்ணையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும். எங்கள் கை உயர்ந்ததென்றும், யெகோவா இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைவர்கள் தவறான எண்ணம்கொண்டு சொல்லுவார்கள் என்று, நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதறடித்து, மனிதர்களுக்குள் அவர்களுடைய பெயர் அழிந்துபோகச்செய்வேன் என்று சொல்லியிருப்பேன். “அவர்கள் யோசனை இல்லாத மக்கள், அவர்களுக்கு உணர்வு இல்லை. அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார். அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி? தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். அவர்களுடைய திராட்சைச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சைச்செடியிலும் குறைந்த தரமுள்ளதாக இருக்கிறது, அவைகளின் பழங்கள் விஷமும் அவைகளின் குலைகள் கசப்புமாக இருக்கிறது. அவர்களுடைய திராட்சைரசம் வலுசர்ப்பங்களின் விஷமும், விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது. “இது என்னிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டு இருக்கிறதில்லையோ? பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் நெருங்கியிருக்கிறது; அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள் விரைவாக வரும். யெகோவா தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்று என்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு, பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே? அவைகள் எழுந்து உங்களுக்கு உதவிசெய்து உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும். “நான் நானே அவர், என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை. நான் என் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவர் என்கிறேன். மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் எதிரிகளிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதில்கொடுப்பேன். கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும். “மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய எதிரிகளுக்குப் பதில்கொடுத்து, தமது தேசத்தின்மேலும் தமது மக்களின்மேலும் கிருபையுள்ளவராக இருப்பார்”. மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள். மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர்கள் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு, அவர்களை நோக்கி: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள். இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான்.

உபாகமம் 32:1-47 பரிசுத்த பைபிள் (TAERV)

“வானங்களே, கவனியுங்கள், நான் பேசுவேன். பூமியே, என் வாயின் வார்த்தையைக் கேள். எனது போதனைகள் மழையைப் போன்று வரும், பூமியின்மேல் விழும் பனியைப் போன்றும், மெல்லிய புல்லின்மேல் தூறும் மழைத்துளிகள் போன்றும், பசும் புதர்களின்மேல் விழும் மழையைப் போன்றும் வரும். நான் கர்த்தருடைய நாமத்தைப் பேசுவேன். தேவனைப் போற்றுங்கள்! “அவர் பாறை (கர்த்தர்), அவரது செயல்கள் பரிபூரணமானவை! ஏனென்றால் அவரது வழிகள் எல்லாம் சரியானவை! தேவன் உண்மையும் சத்தியமும் உள்ளவர். அவர் நீதியும் செம்மையுமானவர். நீங்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல. உங்களது பாவங்கள் அவரை அசுத்தமாக்கியது. நீங்கள் கோணலான பொய்யர்கள். உங்களுக்காக இவ்வளவு செய்த கர்த்தருக்கு இந்த வழியிலா நீங்கள் திரும்ப கொடுப்பீர்கள்? இல்லை! நீங்கள் அறிவில்லாத அஞ்ஞான ஜனங்கள். கர்த்தர் உங்களது தந்தையாக இருக்கிறார். அவர் உங்களை உண்டாக்கினார். அவர் உங்களைத் தாங்குகிறார். “நீண்ட காலத்திற்கு முன்பு நடந்ததை நினைத்துப்பாருங்கள். பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள். உனது தந்தையைக் கேள். அவன் உனக்குச் சொல்வான். உங்கள் தலைவர்களைக் கேள். அவர்கள் உனக்குச் சொல்வார்கள். உன்னதமான தேவன் பூமியில் ஜனங்களைப் பிரித்து ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார். அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார். இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார். கர்த்தருடைய ஜனங்களே அவரது பங்கு, யாக்கோபு (இஸ்ரவேல்) கர்த்தருக்குச் சொந்தம். “கர்த்தர் யாக்கோபை (இஸ்ரவேல்) ஒரு வனாந்திரத்தில் கண்டுபிடித்தார். அது ஒரு காலியான காற்று மிகுந்த நிலம். கர்த்தர் அவனைக் காப்பாற்றுவதற்கு யாக்கோபுவைச் சுற்றி வளைத்துக்கொண்டார். அவர் அவனை தன் சொந்த கண்மணியைப் போல் காத்தார். கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு கழுகைப்போன்று இருந்தார். ஒரு கழுகு தன் குஞ்சுகளைப் பறக்கக் கற்பிக்கும்போது, அவற்றைக் கூட்டிலிருந்து கீழேதள்ளும். பின் அது தன் குஞ்சுகளைக் காப்பதற்கு அவற்றோடு பறக்கும். அவை விழும்போது தன் இறக்கைகளை விரித்து அவற்றைப் பிடித்துக்கொள்ளும், அது பாதுகாப்பான இடத்திற்குக் குஞ்சுகளைச் சிறகுகளில் தாங்கி எடுத்துச் செல்லும். கர்த்தர் இதனைப் போன்றவர். கர்த்தர் ஒருவரே யாக்கோபை வழி நடத்தினார். அயல்நாட்டு தெய்வங்கள் எவரும் அவனுக்கு உதவவில்லை. கர்த்தர் மலைநாட்டை அடக்கி ஆளும்படி யாக்கோபை வழிநடத்தினார். யாக்கோபு வயல்களிலுள்ள அறுவடைகளை எடுத்துக் கொண்டான். கர்த்தர் யாக்கோபிற்குப் பாறையிலிருந்து தேனைக் கொடுத்தார். கடினமான பாறைகளிலிருந்து ஒலிவ எண்ணெய் பாயும்படிச் செய்தார். கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பசுவிலிருந்து வெண்ணெயையும், ஆடுகளிலிருந்து பாலையும் கொடுத்தார். அவர் இஸ்ரவேலுக்குப் பாசானிலுள்ள ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பையும், சிறந்த கோதுமையையும் கொடுத்தார். இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள், சிவந்த வண்ணமுடைய திராட்சைரசத்தையும் குடித்தீர்கள். “ஆனால் யெஷுரன் கொழுத்துப்போய் கொழுத்த காளையைப்போன்று உதைத்தான் (ஆமாம், நீங்கள் நன்றாகப் போஷிக்கப்பட்டீர்கள்! நீங்கள் திருப்தியாகி கொழுத்தீர்கள்.) அவன் தன்னை உண்டாக்கின தேவனை விட்டு விலகினான். தன்னை இரட்சித்த பாறையை (தேவன்) விட்டு ஓடினான். கர்த்தருடைய ஜனங்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டனர், கர்த்தரை எரிச்சல் அடையும்படி செய்தனர். கர்த்தர் விக்கிரகங்களை வெறுக்கிறார். ஆனால் அவரது ஜனங்கள் வெறுக்கத்தக்க விக்கிரகங்களை தொழுதுகொண்டு தேவனுக்குக் கோபமூட்டினார்கள். அவர்கள் உண்மையில் தெய்வங்கள் அல்லாத பிசாசுகளுக்குப் பலியிட்டனர். அவைகள் இதுவரை அவர்கள் அறிந்திராத புதிய பொய்த் தெய்வங்கள் ஆகும். அவைகள் உங்களது முற்பிதாக்கள் அறிந்திராத தெய்வங்கள் ஆகும். நீ உன்னை உண்டாக்கிய பாறையை (தேவன்) விட்டு விலகினாய். உனக்கு வாழ்வு தந்த உன் தேவனை நீ மறந்தாய். “கர்த்தர் இதனைப் பார்த்து கலக்கமடைந்தார், அவரது ஜனங்களை நிராகரித்தார். ஏனென்றால், அவரது குமாரரும், குமாரத்திகளும் அவருக்குக் கோபமூட்டினர்! அதனால் கர்த்தர் கூறினார், ‘நான் அவர்களிடமிருந்து திரும்புவேன். அப்போது அவர்களுக்கு என்ன ஏற்படும் என்பதை அவர்கள் பார்க்கட்டும்! அவர்கள் மிகவும் கலகக்கார ஜனங்களாய் இருக்கின்றனர். அவர்கள் தம் பாடங்களைப் படிக்காத பிள்ளைகளைப் போன்று இருக்கின்றார்கள். அவர்கள் பிசாசுகளை தொழுதுகொண்டு என்னைப் பொறாமைபடும்படிச் செய்தனர். இவ்விக்கிரகங்கள் உண்மையான தேவன் அல்ல. அவர்கள் பயனற்ற விக்கிரகங்கள் மூலம், என்னைக் கோபமடையச் செய்தனர். எனவே, நான் இஸ்ரவேலுக்குப் பொறாமையை உண்டாக்குவேன். ஒரு தேசமாக மதிக்கப்படாத மூட ஜனங்களின் மூலம் நானும் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்குவேன். எனது கோபம் எரியும் நெருப்பைப் போன்றது. அது நரகத்தின் ஆழம்வரை செல்கிறது. அது பூமியையும், பூமி உற்பத்தி செய்யும் பொருட்களையும் எரிக்கிறது. அது மலைகளின் அஸ்திவாரங்களையும் எரிக்கிறது! “‘நான் இஸ்ரவேலர்களுக்குத் துன்பங்களைக் கொண்டுவருவேன். நான் அவர்கள் மீது எனது அம்புகளை எய்வேன். அவர்கள் பசியால் மெலிந்து பலவீனம் அடைவார்கள். பயங்கரமான நோய்கள் அவர்களை அழிக்கும். நான் அவர்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன். விஷப் பாம்புகளும் பல்லிகளும் அவர்களைக் கடிக்கும். வீரர்கள் அவர்களை வீதிகளில் கொல்லுவார்கள். அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே பயப்படுவார்கள். படைவீரர்கள் இளைஞர்களையும், இளம் பெண்களையும் கொல்வார்கள். அவர்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் கொல்வார்கள். “‘நான் இஸ்ரவேலர்களை அழிக்க விரும்பினேன். எனவே ஜனங்கள் அவர்களை முழுமையாக மறப்பார்கள்! அவர்களது பகைவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை நான் அறிவேன். பகைவருக்கு அது புரியாது, அவர்கள் பெருமை கொண்டு சொல்வார்கள்: “கர்த்தர் இஸ்ரவேலை அழிக்கவில்லை. நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் வென்றோம்!”’ “இஸ்ரவேல் ஜனங்கள் அறிவில்லாதிருக்கிறார்கள். அவர்கள் புரிந்துகொள்கிறதில்லை. அவர்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் புரிந்திருக்கக்கூடும். என்ன நடந்திருக்கக் கூடும் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள்! ஒருவனால் 1,000 பேரைத் துரத்த முடியுமா? இரண்டு பேரால் 10,000 பேரை ஓடவைக்க முடியுமா? கர்த்தர் அவர்களை எதிரிகளுக்குக் கொடுத்திருந்தால் மட்டுமே அது நிகழும்! அவர்களின் பாறையானவர் (தேவன்) அடிமைகளைப்போன்று விற்றிருந்தால் மட்டுமே அது நிகழும்! எதிரிகளின் ‘பாறையானவன்’ நமது பாறையானவரைப் (கர்த்தர்) போன்று பலமுள்ளவன் அல்ல. நமது பகைவர்கள் கூட இதனைத் தெரிந்திருக்கின்றார்கள்! பகைவர்களின் திராட்சைத் தோட்டங்களும், வயல்களும் சோதோம் மற்றும் கொமோராவைப் போன்று அழிக்கப்படும். அவர்களது திராட்சைப் பழங்கள் விஷமுள்ளதாகும். அவர்களது திராட்சைரசம் பாம்பு விஷம் போன்றிருக்கும். “கர்த்தர் கூறுகிறார், ‘நான் அந்தத் தண்டனையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். நான் அதனை எனது சேமிப்பு அறையில் பூட்டியுள்ளேன்! அவர்கள் தீமையான கிரியைகளைச் செய்யும்போது நான் அதற்குத் தண்டனையை வைத்திருப்பேன். அவர்கள் தவறானவற்றைச் செய்ததால் நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் துன்ப காலம் அருகில் உள்ளது. அவர்களது தண்டனை விரைவில் வரும்.’ “கர்த்தர் தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பார். அவர்கள் அவரது வேலைக்காரர்கள், அவர்களுக்கு அவர் இரக்கம் காண்பிப்பார். அவர்களது வல்லமை போய்விட்டதை அவர் பார்ப்பார். அவர்களில் அடிமைகளும், சுதந்திரமானவர்களும் ஏகமாய் உதவியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர் பார்ப்பார். பின்னர் கர்த்தர் கூறுவார், ‘பொய்த் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள்? பாதுகாப்பிற்காக நீங்கள் ஓடிய “பாறை” எங்கே? அப்பொய்த் தெய்வங்கள் உங்கள் பலிகளில் உள்ள கொழுப்பைத் தின்றன. அவை உங்கள் காணிக்கையில் உள்ள திராட்சை ரசத்தைக் குடித்தன. எனவே அந்தத் தெய்வங்கள் எழுந்து உங்களுக்கு உதவட்டும். அவை உங்களைக் காக்கட்டும்! “‘இப்பொழுது நானே, நான் ஒருவரே தேவனாக இருக்கிறதைப் பார்! வேறு தேவன் இல்லை. நான் ஜனங்களை மரிக்கச் செய்வேன். நானே ஜனங்களை உயிருடன் வைப்பேன். நான் ஜனங்களைக் காயப்படுத்த முடியும். நான் அவர்களைக் குணப்படுத்தவும் முடியும். எனது அதிகாரத்திலிருந்து ஒருவனும் இன்னொருவனைக் காப்பாற்ற முடியாது. நான் எனது கையைப் பரலோகத்தை நோக்கி உயர்த்தி, இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். நான் என்றென்றும் ஜீவித்திருக்கிறவர் என்பதினால் அவை நிகழும் என்பதும் உண்மையாகும்! நான் எனது பளபளக்கும் வாளைக் கூர்மைப்படுத்துவேன். எனது எதிரிகளைத் தண்டிக்க அதனைப் பயன்படுத்துவேன். அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் கொடுப்பேன். எனது பகைவர்கள் கொல்லப்படுவார்கள். கைதிகளாக சிறைபிடிக்கப்படுவார்கள். எனது அம்புகள் அவர்களது இரத்தத்தால் மூடப்படும். அவர்களது வீரர்களின் தலைகளை எனது வாள் வெட்டும்.’ “இந்த உலகம் முழுவதும் தேவஜனங்களுக்காக மகிழவேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு அவர் உதவுகிறார். அவர்களது வேலைகாரர்களைக் கொன்ற ஜனங்களை அவர் தண்டிக்கிறார். அவர் அவரது பகைவர்களுக்கு ஏற்ற தண்டனைகளைக் கொடுக்கிறார். அவர் அவரது நாட்டையும், ஜனங்களையும் சுத்தம் செய்கிறார்.” மோசே வந்து அவனது பாடலில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்கும்படி பாடினான். நூனின் குமாரனாகிய யோசுவாவும் மோசேயோடு இருந்தான். மோசே இவற்றை ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்து முடித்தபோது அவன் அவர்களிடம், “இன்று நான் உங்களுக்குச் சொன்ன அனைத்துக் கட்டளைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தில் உள்ள கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லவேண்டும். இந்தப் போதனைகளை முக்கியமற்றவை என்று நீங்கள் எண்ணவேண்டாம். அவை உங்கள் ஜீவன் ஆகும். இந்தப் போதனைகள் மூலம், யோர்தான் ஆற்றைக் கடந்துபோய் நீங்கள் சுதந்தரிக்கத் தயாராக இருக்கும் தேசத்தில் நீண்ட வாழ்வை வாழப்போகிறீர்கள்” என்றான்.