உபாகமம் 31:9-13

உபாகமம் 31:9-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே மோசே இந்த சட்டத்தை எழுதி, யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் லேவியின் மகன்களான ஆசாரியர்களிடமும், இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் அனைவரிடமும் கொடுத்தான். பின்பு மோசே அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “கடன்களை ரத்துச்செய்யும் வருடமாகிய ஒவ்வொரு ஏழாம் வருடத்தின் முடிவிலும் கூடாரப்பண்டிகைக் காலத்தில் இந்த சட்டத்தை மக்களுக்குமுன் வாசிக்கவேண்டும். இஸ்ரயேலர் எல்லோரும் உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவருக்குமுன் வரும்போது, அவர்கள் கேட்கும்படியாக அவர்களுக்குமுன் இந்த சட்டத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், உங்கள் பட்டணத்தில் வசிக்கும் அந்நியர் ஆகிய மக்களை ஒன்றுகூட்டுங்கள். அவர்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்துநடக்கவும், இந்த சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், கவனமாகக் கைக்கொள்ளவும் கற்றுக்கொள்வதற்காக இதைக் கேட்கும்படி ஒன்றுகூட்டுங்கள். இந்த சட்டத்தை அறியாத அவர்களுடைய பிள்ளைகளும், நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளப்போகும் அந்த நாட்டில் வாழும் காலமெல்லாம் அதைக்கேட்டு, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்துநடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றான்.

உபாகமம் 31:9-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவி வம்சத்தாரான ஆசாரியர்களுக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எல்லோருக்கும் ஒப்புவித்து, அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: “விடுதலையின் வருடமாகிய ஒவ்வொரு ஏழாம் வருடத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில், உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்து வந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிப்பாயாக. ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும், அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் மக்களைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும்” என்றான்.

உபாகமம் 31:9-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு மோசே போதனைகளை எழுதி ஆசாரியர்களிடம் கொடுத்தான். அந்த ஆசாரியர்கள் அனைவரும் லேவியர் கோத்திரத்தினர். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் வேலையை உடையவர்கள். மோசே போதனைகளை இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அனைவருக்கும் கொடுத்தான். பிறகு, மோசே தலைவர்களிடம் பேசினான். அவன், “ஒவ்வொரு ஏழு ஆண்டின் முடிவிலும் விடுதலைக்கான ஆண்டில் அடைக்கல கூடாரப் பண்டிகையில், இந்தப் போதனைகளை ஜனங்களுக்கு வாசியுங்கள். அப்பொழுது, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் கூடி வருவார்கள். அவர்கள் உன் தேவனாகிய கர்த்தர் குறிப்பிடும் சிறப்பான இடத்தில் அவரைச் சந்திக்க வருவார்கள். பிறகு நீ ஜனங்களுக்கு போதனைகளை வாசிக்க வேண்டும். அப்பொழுது அவற்றை அவர்கள் கேட்க முடியும். அனைத்து ஜனங்களையும் ஒன்று கூட்டு. ஆண்கள், பெண்கள், சிறுகுழந்தைகள், உங்கள் நகரங்களில் வாழும் அயல்நாட்டுக்குடிகள் என அனைவரையும் கூட்டு. போதனைகளை அவர்கள் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். போதனைகளில் உள்ளவற்றுக்குக் கீழ்ப்படிவார்கள். அவர்களது சந்ததிகள் போதனைகளை அறிந்திராவிட்டால், பிறகு அவர்கள் அவற்றைக் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நீ உனது நாட்டில் வாழும் காலம்வரை அவர்கள் அவரை மதிப்பார்கள். நீ விரைவில் யோர்தானை கடந்துபோய் அந்த நாட்டை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வாய்” என்றான்.

உபாகமம் 31:9-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவிபுத்திரரான ஆசாரியருக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர் எல்லாருக்கும் ஒப்புவித்து, அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில், உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், இஸ்ரவேலர் எல்லாரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்து வந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய். புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும், அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும் என்றான்.