உபாகமம் 28:58-63

உபாகமம் 28:58-63 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற சட்டங்களின் வார்த்தைகளையெல்லாம் நீங்கள் கவனமாகப் பின்பற்றாமலும், உங்கள் இறைவனாகிய யெகோவாவின் மகிமையும், பயங்கரமுமான பெயரைக்குறித்து பயபக்தி உள்ளவர்களாய் இராமலும் போனால், யெகோவா உங்கள்மேலும், உங்கள் சந்ததிகள்மேலும் பயங்கரமான கொள்ளைநோய்களையும், நீடித்திருக்கும் கொடுமையான பேராபத்துக்களையும், மாறாத கடுமையான நோய்களையும் கொண்டுவருவார். நீங்கள் எகிப்திலே எந்த வியாதிகளுக்குப் பயந்தீர்களோ, அந்த வியாதிகளை எல்லாம் உங்கள்மேல் திரும்பவும் வரப்பண்ணுவார். அவை உங்களைப் பிடித்துக்கொள்ளும். மேலும், நீங்கள் அழியுமட்டும் இந்த சட்ட புத்தகத்தில் எழுதப்படாத வேறுவிதமான நோய்களையும், பேராபத்துக்களையும் யெகோவா உங்கள்மேல் வரப்பண்ணுவார். அப்பொழுது வானத்து நட்சத்திரங்களைப்போல எண்ணிக்கையில் அதிகமாய் இருந்த நீங்கள், எண்ணிக்கையில் ஒரு சிலராய் குறைந்துபோவீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. யெகோவா உங்களை செழிக்கப்பண்ணி, உங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விருப்பம் கொண்டதுபோலவே, உங்களைப் பாழாக்கி அழிக்கவும் விருப்பம்கொள்வார். நீங்கள் உரிமையாக்கப்போகும் நாட்டிலிருந்து வேரோடு பிடுங்கப்படுவீர்கள்.

உபாகமம் 28:58-63 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“உன் தேவனாகிய யெகோவா என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படி, நீ இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாக இருக்காவிட்டால், யெகோவா நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய வியாதிகளாலும் உன்னையும் உன் சந்ததியையும் கடுமையாக வாதித்து, நீ கண்டு பயந்த எகிப்தின் வியாதிகளெல்லாம் உன்மேல் வரச்செய்வார்; அவைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும். இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிராத எல்லா வியாதியையும் வாதையையும் நீ அழியும்வரை யெகோவா உன்மேல் வரச்செய்வார். எண்ணிக்கையிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், எண்ணிக்கையில் குறைந்துபோவீர்கள். யெகோவா உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகச்செய்யவும் எப்படி உங்கள்மேல் விருப்பமாயிருந்தாரோ, அப்படியே யெகோவா உங்களை அழிக்கவும் விருப்பமாயிருப்பார்; நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.

உபாகமம் 28:58-63 பரிசுத்த பைபிள் (TAERV)

“நீ இந்தப் புத்தகத்திலுள்ள அனைத்து கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். நீ உனது தேவனாகிய கர்த்தருடைய அற்புதமும் பயங்கரமுமான பெயருக்கு மதிப்பளிக்க வேண்டும். நீ கீழ்ப்படியாவிட்டால் பிறகு கர்த்தர் உனக்கும் உனது சந்ததிகளுக்கும் மிகுந்த துன்பங்களைக் கொடுப்பார். உன் துன்பங்களும் நோய்களும் பயங்கரமானதாக இருக்கும். எகிப்தில் நீ பல துன்பங்களையும் நோய்களையும் பார்த்தாய். அவை உன்னை அஞ்சும்படி செய்தன. உனக்கு அத்துன்பங்களையெல்லாம் கர்த்தர் கொண்டு வருவார். இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்படாத துன்பங்களையும், நோய்களையும் கர்த்தர் உனக்குக் கொண்டுவருவார். நீ அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார். நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப் போன்று அதிக எண்ணிக்கையுடையவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களிடம் சிலரே மீதியாகவிடப்படுவீர்கள். ஏனென்றால், நீ உனது தேவனாகிய கர்த்தருக்குச் செவிசாய்க்கவில்லை. “கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பதிலும் உனது நாட்டை வளர்ச்சி அடைய செய்வதிலும் மகிழ்ந்தார். அதே வழியில் உன்னை அழிப்பதிலும் அதம்பண்ணுவதிலும் மகிழ்ச்சியடைவார். நீ அந்த நாட்டை உனக்குச் சொந்தமானதாக ஆக்கப்போகிறாய், ஆனால் ஜனங்கள் அந்த நாட்டைவிட்டு உன்னை அப்புறப்படுத்துவார்கள்.

உபாகமம் 28:58-63 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால், கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து, நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும். இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார். திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், கொஞ்சம் ஜனமாய்ப்போவீர்கள். கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள்மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்