உபாகமம் 28:47-57
உபாகமம் 28:47-57 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்கள் செழிப்பாய் இருந்த காலத்தில், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் பணிசெய்யவில்லை. ஆகையால் நீங்கள் பசியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், கொடிய வறுமையோடும் யெகோவா உங்களுக்கு எதிராக அனுப்பும் பகைவருக்குப் பணிசெய்வீர்கள். அவர் உங்களை அழித்தொழிக்கும் வரைக்கும் உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தை வைப்பார். யெகோவா உங்களுக்கு எதிராகப் பூமியின் கடைசியான தூரத்திலிருந்து ஒரு நாட்டைக் கொண்டுவருவார். அவர்கள் ஒரு கழுகு பறக்கும் வேகத்துடன் வருவார்கள். அந்த நாட்டவர்களின் மொழி உங்களுக்கு விளங்காது. பயங்கரத் தோற்றமுடைய அந்த நாடு முதியோருக்கு மதிப்பையோ, வாலிபருக்கு அனுதாபத்தையோ காட்டாது. நீங்கள் அழியும்வரை அவர்கள் உங்கள் வளர்ப்பு மிருகங்களின் குட்டிகளையும், நிலத்தின் பலனையும் விழுங்கிவிடுவார்கள். நீங்கள் பாழாய்ப்போகும்வரை உங்களுக்காக தானியத்தையோ, புது திராட்சை இரசத்தையோ, ஒலிவ எண்ணெயையோ, மாட்டு மந்தையின் கன்றுகளையோ, செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளையோ விட்டுவைக்கமாட்டார்கள். நீங்கள் நம்பியிருக்கும் அரண்செய்யப்பட்ட உயர்ந்த மதில்கள் விழும்வரை, உங்கள் நாட்டிலுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள். அவர்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாடு முழுவதிலுமுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள். முற்றுகையிடும்போது, உங்கள் பகைவர்கள் உங்களைத் துன்புறுத்தி வேதனைப்படுத்துவதினால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிற கர்ப்பத்தின் கனியான மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவீர்கள். உங்கள் மத்தியில் மிகுந்த சாதுவாகவும், மென்மையாகவும் இருக்கும் மனிதன்கூட, தன் சொந்த சகோரனிடத்திலோ, தான் அன்பு செலுத்துகிற மனைவியினிடத்திலோ, தப்பிப்பிழைத்த தன் பிள்ளைகளினிடத்திலோ கருணை காட்டமாட்டான். அவர்களில் ஒருவனுக்காவது தான் சாப்பிடும் தன் பிள்ளைகளின் சதையை அவன் கொடுக்கமாட்டான். உங்கள் பட்டணங்களையெல்லாம் உங்கள் பகைவர் முற்றுகையிடும்போதும், உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போதும் அவனுக்குச் சாப்பிடுவதற்கு அந்தப் பிள்ளையின் சதையைவிட வேறு எதுவும் கிடைக்காது. தன் பாதங்களை நிலத்தில் வைத்து நடக்கத் துணியாமல் மிகவும் சாதுவாகவும், மென்மையாகவும் உங்கள் மத்தியில் இருக்கும் பெண்ணும்கூட, தான் அன்பு செலுத்தும் கணவனுக்கோ, தன் சொந்த மகனுக்கோ, மகளுக்கோ தன் கர்ப்பப்பையிலிருந்து வெளிப்படும் நச்சுக்கொடியையும், தான் பெற்றெடுக்கும் குழந்தைகளையும்கூட கொடுத்துச் சாப்பிடமாட்டாள். ஏனெனில் உங்கள் பட்டணங்களில் உங்கள் பகைவர் உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போது, அந்த முற்றுகை வேளையில் அவற்றை இரகசியமாகவே தான் சாப்பிடுவது அவளின் நோக்கமாயிருக்கும்.
உபாகமம் 28:47-57 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“சகலமும் நிறைவாக இருக்கும்போது, நீ மனமகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் உன் தேவனாகிய யெகோவாவை வணங்காததால், சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், யெகோவா உனக்கு விரோதமாக அனுப்பும் எதிரிகளுக்கு வேலைசெய்வாய்; அவர்கள் உன்னை முற்றிலும் அழிக்கும்வரை, இரும்பு நுகத்தை உன் கழுத்தின்மேல் போடுவார்கள். முதியவன் என்று பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும், உனக்குத் தெரியாத மொழியைப் பேசுகிறதுமான மக்களை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடைசியிலிருந்து யெகோவா உன்மேல் கழுகைப்போல வேகமாக வரச்செய்வார். நீ அழியும்வரை அந்த மனிதன் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் பலனையும் சாப்பிடுவான்; அவன் உன்னை முற்றிலும் அழிக்கும்வரை உன் தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான். உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் பாதுகாப்புமான உன் மதில்கள் விழும்வரை, அவன் உன்னுடைய வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிடுவான்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய ஒவ்வொரு வாசல்களிலும் உன்னை முற்றுகையிடுவான். உன்னுடைய எதிரிகள் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன் கர்ப்பப்பிறப்பான உன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவாய். உன் எதிரிகள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன்னிடத்தில் கர்வமும் செல்வச்செழிப்புமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் உண்ணும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே, தன் சகோதரனுக்காவது, தன் மனைவிக்காவது, தனக்கு மீதியாயிருக்கிற தன் மக்களின் ஒருவனுக்காவது கொஞ்சமும் கொடுக்காமல் அவர்கள்மேல் கொடுமையுள்ளவனாக இருப்பான். உன்னிடத்தில் செல்வச்செழிப்பினாலும் கர்வத்தினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க பயப்பட்ட பெண் தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன்னுடைய கணவன், மகன் மற்றும் மகளின் மேலும் கொடுமையுள்ளவளாக இருப்பாள்; உன் எதிரிகள் உன் வாசல்களில் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, சகலமும் குறைவுபடுவதால், அவைகளை இரகசியமாக சாப்பிடுவான்.
உபாகமம் 28:47-57 பரிசுத்த பைபிள் (TAERV)
“உனது தேவனாகிய கர்த்தர் உனக்குப் பல ஆசீர்வாதங்களைக் கொடுத்தார். ஆனால் நீ அவருக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கொண்ட மனதோடு சேவை செய்யவில்லை. ஆகவே கர்த்தர் அனுப்பிவைத்த உனது பகைவர்களுக்கு நீ சேவை செய்வாய். நீ பசியும், தாகமும், நிர்வாணமும், ஏழ்மையும் அடைவாய். கர்த்தர் உன்மீது நீக்க முடியாத சுமையை வைப்பார். அவர் உன்னை அழிக்கும்வரை அந்தச் சுமையை நீ சுமப்பாய். “கர்த்தர் தொலைதூரத்திலிருந்து உன்னோடு சண்டையிட ஒரு நாட்டை வரவழைப்பார். அவர்களது மொழியை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் விரைந்து வருவார்கள். வானிலிருந்து ஒரு கழுகு வருவதுபோன்று வருவார்கள். அந்த ஜனங்கள் கொடூரமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் முதியவர்களைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அவர்கள் இளங்குழந்தைகளிடம் இரக்கம் காட்டமாட்டார்கள். அவர்கள் உங்களது மிருகங்களையும் நீங்கள் வளர்த்த உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொள்வார்கள். உன்னை அழிக்கும்வரை அவர்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன்னிடம் தானியம், திராட்சை ரசம், எண்ணெய், பசுக்கள், ஆடுகள் அல்லது மாடுகள் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் உன்னை அழிக்கும்வரை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். “அந்த நாடு உனது நகரங்களைச் சுற்றி முற்றுகையிட்டுத் தாக்கும். உனது நகரங்களைச் சுற்றியுள்ள உயரமும் உறுதியும் கொண்ட சுவர்கள் உங்களைக் காப்பாற்றும் என்று நீ நினைத்தால், அந்தச் சுவர்கள் கீழே விழும், உனது தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாவற்றையும் பகைவர்கள் முற்றுகையிடுவார்கள். நீ மிகவும் துன்பப்படுவாய். பகைவர்கள் உனது நகரங்களை முற்றுகையிடுவார்கள், உனக்கு உணவு கிடைக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். நீ மிகுந்த பசியை அடைவாய். உங்கள் சொந்த குமாரர்களையும் குமாரத்திகளையும் தின்னும்படியும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுத்த பிள்ளைகளைத் தின்னும்படியும் உங்களுக்கு அதிக பசி இருக்கும். “உங்களில் மிக சாந்தமும் இரக்கமும் கொண்டவன் கொடூரமானவனாக ஆவான். அவன் பிறருக்கும், தான் மிகவும் நேசித்த தன் மனைவிக்கும் கொடியவன் ஆவான். அவன் உயிரோடுள்ள தன் பிள்ளைகளுக்கும் கொடியவன் ஆவான். அவனுக்கு எந்த உணவும் இல்லாதபடியால் தன் சொந்தப் பிள்ளைகளையே புசிப்பான். அவன் அந்த உணவை வேறு யாரோடும் தன் சொந்தக் குடும்பத்தினரோடும்கூட பகிர்ந்துக்கொள்ள மாட்டான். உனது பகைவர்கள் உன் நகரங்களை முற்றுகையிட்டு உன்னைத் துன்புறுத்தும்போது இந்த கொடூரங்களெல்லாம் ஏற்படும். “உங்கள் மத்தியில் மிகுந்த சாந்தமும் இரக்கமுமுள்ள பெண்ணும்கூடக் கொடியவள் ஆவாள். அவள் மிகவும் சாந்தமும், அவளது கால்கள் தரையில்படாத அளவிற்கு நளினமுள்ளவளாகவும் இருக்கலாம். ஆனால் அவள் தன் மிகுந்த அன்புக்குரிய கணவனுக்குக் கொடியவள் ஆவாள். அவள் தனது சொந்த குமாரனுக்கும், குமாரத்திக்கும்கூடக் கொடியவள் ஆவாள். அவள் மறைவாக ஒரு குழந்தையைப் பெறுவாள். அக்குழந்தையோடு அவளது உடலிலிருந்து வெளிவரும் அனைத்தையும் அவள் புசிப்பாள். உன் பகைவன் உனது நகரங்களை முற்றுகையிட்டு உன்னைத் துன்புறுத்தும்போது இத்தீயவை எல்லாம் நிகழும்.
உபாகமம் 28:47-57 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம், சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இரும்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள். கிழவன் என்று முகம்பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும், உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார். நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான். உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிகைப்போடுவான். உன் சத்துருக்கள் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திர புத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய். உன் சத்துருக்கள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே, தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களின் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான். உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்; உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான்.