உபாகமம் 2:1-7
உபாகமம் 2:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு, யெகோவா எனக்கு வழிகாட்டியபடியே நாம் திரும்பி செங்கடலுக்குப் போகும் வழியாக பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டோம். நீண்டகாலமாக நாம் சேயீர் மலைநாட்டைச் சுற்றியுள்ள வழியாகப் போனோம். அதன்பின் யெகோவா என்னிடம், “நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றிவந்தது போதும். இப்பொழுது வடக்கே திரும்புங்கள். நீ இந்த மக்களுக்குக் கொடுக்கவேண்டிய உத்தரவுகளாவன: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய ஏசாவின் சந்ததியார் வசிக்கும் சேயீர் பிரதேசத்தைக் கடந்துசெல்லப் போகிறீர்கள். அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள், ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்களை யுத்தத்திற்குத் தூண்டாதீர்கள்; ஏனென்றால் அவர்களின் நாட்டில் ஒரு அடி அளவான நிலத்தைக்கூட தரமாட்டேன். சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன். அங்கே அவர்களுக்கு நீங்கள் உண்ணும் உணவுக்கும் குடிக்கும் நீருக்கும் வெள்ளிப்பணம் கொடுங்கள்” என்றார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் கைகளின் வேலை எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதித்தார். அவர் இந்த விசாலமான பாலைவனத்தின் வழியாக உங்கள் பிரயாணத்திலும் உங்கள்மேல் கண்காணிப்பாய் இருந்தார். இந்த நாற்பது வருடங்களும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுடன் இருந்திருக்கிறார்; நீங்கள் ஒன்றுக்கும் குறைவில்லாமலும் இருந்திருக்கிறீர்கள்.
உபாகமம் 2:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“யெகோவா எனக்குச் சொன்னபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாக வனாந்திரத்திற்குப் பிரயாணம்செய்து, அநேக நாட்கள் சேயீர் நாட்டை சுற்றித்திரிந்தோம். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித்திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள். மக்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் சந்ததியான உங்கள் சகோதரர்களின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களோடு போர்செய்யவேண்டாம்; அவர்களுடைய தேசத்திலே ஒரு அடி நிலத்தைக்கூட உங்களுக்குக் கொடுக்கமாட்டேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன். உணவுப்பொருட்களை அவர்களிடம் பணத்திற்கு வாங்கிச் சாப்பிட்டு, தண்ணீரையும் அவர்களிடம் பணத்திற்கு வாங்கிக் குடியுங்கள். உன் தேவனாகிய யெகோவா உன் கையின் செயல்களிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்திரத்தின்வழியாக நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருடங்களும் உன் தேவனாகிய யெகோவா உன்னுடன் இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.
உபாகமம் 2:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)
“பின் கர்த்தர் என்னிடம் சொல்லியபடி நாம் செய்தோம். செங்கடலுக்குச் செல்லும் சாலை வாழியாகப் பாலைவனத்திற்குத் திரும்பிச் சென்றோம். சேயீர் மலைகளைச் சுற்றி பல நாட்கள் அலைந்தோம். பின் கர்த்தர் என்னிடம், ‘இம்மலைகளைச் சுற்றி நீங்கள் அலைந்தது போதும். வடக்கே திரும்புங்கள், ஜனங்களிடம் இதைச் சொல்வாயாக: நீங்கள் சேயீர் நிலப்பகுதியைக் கடந்து செல்வீர்கள். இது ஏசாவின் சந்ததியினரான உங்கள் உறவினர்களுக்கு உரியது. உங்களைக் கண்டு அவர்கள் பயப்படுவார்கள். மிகுந்த எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுடன் சண்டையிடாதீர்கள். அவர்களுக்கு உரிமையானதில் ஒரு அடி நிலம் கூட உங்களுக்குத் தரமாட்டேன். ஏனென்றால் சேயீர் மலை நாட்டை ஏசாவிற்குச் சொந்தமாக வழங்கினேன். நீங்கள் அங்கே உண்ணும் உணவிற்கும் குடிக்கும் தண்ணீருக்கும் ஏசாவின் ஜனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். நீங்கள் செய்த ஒவ்வொரு செயலையும் உங்கள் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். இப்பெரும் பாலைவனத்தில் நீங்கள் நடந்து செல்வதை அவர் அறிவார். இந்த 40 ஆண்டு காலமும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் இருந்தார். உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன’ என்று கூறினார்.
உபாகமம் 2:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் எனக்குச் சொல்லியபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணம்பண்ணி, அநேக நாள் சேயீர் நாட்டைச் சுற்றித்திரிந்தோம். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித்திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள். ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களோடே போர்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன். போஜனபதார்த்தங்களை அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிப் புசித்து, தண்ணீரையும் அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிக் குடியுங்கள். உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.