உபாகமம் 19:1-21
உபாகமம் 19:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள மக்களை அழித்தபின் நீங்களும் அவர்களைத் துரத்தி, அவர்களுடைய பட்டணங்களிலும், வீடுகளிலும் குடியேறுவீர்கள், அப்பொழுது நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு கொடுக்கும் நாட்டில் மூன்று பட்டணங்களை உங்களுக்காக ஒதுக்கிவையுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாட்டை, ஒரு பட்டணம் ஒரு பகுதியில் இருக்கத்தக்கதாக மூன்று பகுதிகளாகப் பிரித்து, அந்தப் பட்டணங்களுக்கு வீதிகளை அமையுங்கள். அங்கே ஒரு மனிதனைக் கொல்லும் எவனும் தப்பியோடலாம். முற்பகை இன்றித் தவறுதலாக தன் அயலானைத் தற்செயலாகக் கொல்பவன், தன் உயிரைக்காக்கும்படி அங்கே தப்பியோடுவதைக் குறித்து கவனிக்கப்படவேண்டிய விதிமுறை இதுவே. உதாரணமாக, ஒருவன் தன் அயலானோடு விறகு வெட்டும்படி காட்டுக்குப்போய், அவன் கோடரியை ஓங்கும்போது கோடரி பிடியை விட்டுக் கழன்று அந்த அயலானின்மேல் விழுவதினால், அவன் கொல்லப்படலாம். அப்பொழுது அம்மனிதன் இந்தப் பட்டணம் ஒன்றுக்குத் தப்பிப்பிழைக்க ஓடித் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம். எனினும் அடைக்கலப் பட்டணத்தின் தூரம் அதிகமாய் இருந்தால், இரத்தபழி வாங்குபவன் கோபத்தில் அவனைப் பின்தொடர்ந்து துரத்திப் பிடித்து அவனைக் கொன்றுவிடுவான். ஆனாலும் அவன் முற்பகையில்லாமல் தவறுதலாகக் கொலைசெய்தபடியால் மரணத்துக்கு ஏதுவானவன் அல்ல. இதனால்தான் உங்களுக்காக மூன்று பட்டணங்களை ஒதுக்கிவைக்கும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு, வாக்குக் கொடுத்தபடி உங்கள் பிரதேச எல்லைகளை விரிவுபடுத்தி, அவர்களுக்கு வாக்குப்பண்ணிய நாடு முழுவதையும் உங்களுக்குத் தருவார். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலே நடக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் இந்த சட்டங்களை நீங்கள் கவனமாய்ப் பின்பற்றினால், அவர் வாக்குப்பண்ணிய நாடு முழுவதையும் உங்களுக்குத் தருவார். அப்போது எல்லைகளை விரிவுபடுத்தும்போது, நீங்கள் இன்னும் மூன்று அடைக்கலப் பட்டணங்களை ஒதுக்கிவையுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாட்டில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படாதபடியும், இரத்தப்பழி உங்கள்மேல் வராமல் இருக்கும்படியும் இதைச் செய்யுங்கள். எனினும் ஒருவன் தன் அயலானைப் பகைத்து, அவனுக்காகப் பதுங்கிக் காத்திருந்து தாக்கிக் கொன்றபின் இப்பட்டணங்கள் ஒன்றிற்குத் தப்பியோடக்கூடும். அப்பொழுது அவனுடைய பட்டணத்தைச் சேர்ந்த சபைத்தலைவர்கள் அவனுக்கு ஆள் அனுப்பி, அவனை அடைக்கலப்பட்டணத்திலிருந்து திரும்பக்கொண்டுவந்து, அவன் சாகும்படி அவனை இரத்தப்பழிவாங்கும் உரிமை உடையவனிடம் ஒப்புக்கொடுக்கவேண்டும். அவனுக்கு இரக்கம் காட்டவேண்டாம். குற்றமில்லாத இரத்தம் சிந்தும் குற்றத்தை இஸ்ரயேலிலிருந்து அகற்றவேண்டும். அப்பொழுது நீங்கள் நலமாயிருப்பீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிலே, உங்களுடைய உரிமைச்சொத்தில் உங்கள் முன்னோர்களால் நாட்டப்பட்ட உங்கள் அயலவனின் எல்லைக்கல்லைத் தள்ளிவைக்கவேண்டாம். ஒருவன் ஏதாவது குற்றத்தையோ, மீறுதலையோ செய்ததாக அவன் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அவனைக் குற்றவாளி என தீர்ப்பதற்கு ஒரு சாட்சி போதாது. ஒரு காரியம் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படவேண்டும். ஒருவன்மேல் குற்றம் சுமத்தும்படி, குற்றம் சாட்டுவதற்குத் தீயநோக்கமுள்ள ஒரு சாட்சி துணிந்தால், வழக்காடுகிற இருவரும் அந்நாட்களில் அதிகாரம் செலுத்தும் ஆசாரியனின் முன்னும், நீதிபதியின் முன்னும் யெகோவாவின் முன்னிலையில் நிற்கவேண்டும். நீதிபதிகள் அவர்களைத் தீர விசாரிக்கவேண்டும். அப்போது சாட்சி சொல்பவன் தன் சகோதரனுக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்லி, அவன் பொய்யன் என நிரூபிக்கப்பட்டால், அவன் தன் சகோதரனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நினைத்தானோ, அதை நீங்கள் அவனுக்கே செய்யவேண்டும். இப்படியாக உங்கள் மத்தியிலிருந்து தீமையை அகற்றவேண்டும். மற்றவர்கள் இவற்றைக் கேட்டுப் பயப்படுவார்கள். அப்படிப்பட்ட தீமை உங்கள் மத்தியில் இனி ஒருபோதும் செய்யப்படவும்மாட்டாது. இரக்கம் காட்டவேண்டாம்: உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், அவ்வாறே செய்யுங்கள்.
உபாகமம் 19:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தின் மக்களை அவர் வேரற்றுப்போகச்செய்வதினால், நீ அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது, நீ உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய். கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டாக்குவாய். கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே. ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனுடன் காட்டிற்குப்போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பைவிட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால், இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரியும்போது கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின்தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்றுபோடாதபடி, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காததினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை. இதினிமித்தம் மூன்று பட்டணங்களை உனக்காகப் பிரித்துவைக்கக்கடவாய் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். “நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து, உன் தேவனாகிய யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால், அப்பொழுது உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடி, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய். “ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்கு மறைந்திருந்து, அவனுக்கு விரோதமாக எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில், அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அங்கேயிருந்து அவனைக் கொண்டுவரும்படி செய்து, அவன் சாகும்படி அவனை இரத்தப்பழி வாங்குகிறவன் கையில் ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்குவாயாக; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய். “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் உன்னிடத்திலிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை எடுத்துப்போடாதே. “ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிரூபிக்கப்படவேண்டும். ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சி சொல்ல எழும்பினால், வழக்காடுகிற இருவரும் யெகோவாவுடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக. அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாக விசாரணை செய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாகக் குற்றம்சுமத்தினான் என்றும் கண்டால், அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாகத் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள். உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.
உபாகமம் 19:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)
“மற்ற இன ஜனங்களை அழித்துவிட்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களது தேசத்தை உங்களுக்குத் தருகின்றார். அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே நீங்கள் வாழப்போகிறீர்கள். நீங்கள் அவர்களது நகரங்களையும், வீடுகளையும் எடுத்துக்கொண்டு அனுபவிக்கப் போகிறீர்கள். அப்படி நடக்கும்போது, நீங்கள் அந்த தேசத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு பிரிவிலும் எல்லாருக்கும் மையமான ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களுக்குச் சாலைகளையும், வீதிகளையும் அமைத்துக்கொள்ளுங்கள். அப்போது தற்செயலாக மற்றவர்களைக் கொலை செய்திடும் நபர் பாதுகாப்பாய் அந்நகருக்குள் ஓடிப்போகலாம். “கொலை செய்தவன் எவனும் அம்மூன்று நகரங்களில் ஒன்றில் ஓடிப்போய் இருக்க வேண்டுவதற்கான நியாயம் என்னவென்றால்: அந்த நபர் மற்றவனைக் கொன்றது எதிர்ப்பாராத விதமாக நடந்திருக்க வேண்டும். தான் மனதறியாது எவ்வித முன் வெறுப்பும் இல்லாது கொன்றிருக்க வேண்டும். இங்கு உதாரணமாகச் சொன்னால், ஒருவன் மற்றவனோடு விறகு வெட்ட காட்டிற்குச் சென்று மரத்தை வெட்டும்படி தன் கையிலிருக்கும் கோடரியை ஓங்கும்போது, அதிலிருந்த இரும்பானது கைப்பிடியை விட்டு கழன்று மற்றவன்மேல் விழுந்ததினால் அவன் மரித்துப்போனால், அந்தக் கோடரியை ஓங்கியவன், அம்மூன்று பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் பாதுகாப்படைந்து கொள்ளலாம். ஆனால், இந்தப் பட்டணம் வெகு தூரத்தில் இருப்பதினால் போதுமான வேகத்திற்கு அவனால் ஓடமுடியாமல் போகலாம். அப்போது கொலையுண்டவனின் நெருங்கிய உறவினன் பழிவாங்கும் நோக்கத்தோடு அவனை விரட்டக்கூடும். அவன் கோபாவேசம் நிறைந்தவனாய் கொலை செய்தவனை நெருங்கியவுடன் அவனைக் கொன்று போடக்கூடும். இப்படி அவன் மரிக்க வேண்டியவனல்ல. ஏனெனில், அவன் முன் விரோதமின்றி கொலை செய்தவனாவான். இந்த மூன்று நகரங்களும் அவைகளைச் சுற்றியுள்ள ஜனங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும். அதனால்தான், நீங்கள் விசேஷமான அந்த மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுக்கக் கட்டளையிட்டேன். “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு வாக்களித்தபடி உங்கள் தேசத்தை விரிவுபடுத்தி, உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கின்படி உங்களுக்கு இந்த தேசம் முழுவதையும் தருவார். தேவன் இதை உங்களுக்குச் செய்ய வேண்டுமென்றால், நான் இன்று உங்களுக்குத் தருகின்ற கட்டளைகளுக்கெல்லாம் நீங்கள் கீழ்ப்படிந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது நீங்கள் அன்பு செலுத்தும்பொருட்டு அவர் விரும்பியபடி நீங்கள் வாழவேண்டும். பின் கர்த்தர், உங்கள் தேசத்தை விரிவாக்கித் தருவதோடு, உங்கள் அடைக்கலத்திற்காக மூன்று பட்டணங்களை நீங்கள் அமைத்துக்கொள்ளச் செய்வார். பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்குகின்ற தேசத்தில் கள்ளம் கபடில்லாத அப்பாவி ஜனங்கள் கொல்லப்படமாட்டார்கள். அது மட்டுமின்றி, உங்கள் மீது எவ்வித கொலைக் குற்றமும் சுமத்தப்படாது. “ஒருவன் வேறொருவன் மீது வெறுப்படைந்து அவனைப் பழிவாங்கும் விரோதத்தோடு காத்திருந்து அவன் மரிக்கும்படி அடித்துவிட்டு, இந்த நகரங்களுக்குள் ஒன்றில் ஓடிப்போய், தன்னைக் காத்துக்கொள்வான் என்றால், அந்த நகரத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அவன் தன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் வீட்டிற்குச் சென்று அவனைக் கொண்டுவந்து, அவனைப் பழிவாங்கத் துடிக்கும் மரித்தவனின் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கொலை செய்தவன் கண்டிப்பாக மரிக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். அவன் ஏதுமறியாத ஒரு அப்பாவியை கொன்ற குற்றவாளி. நீங்கள் அந்தக் குற்றத்தை இஸ்ரவேலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அப்போது, எல்லாம் உங்களுக்கு நல்லதாக அமையும். “உங்களது அயலாரின் சொத்திற்கான எல்லைக் கல்லை நீங்கள் நகர்த்த கூடாது. உங்களது தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்த நிலத்தில் உங்களது முன்னோர் இட்ட எல்லைக் கோடுகளையே நீங்களும், அவரவரது சொத்திற்கான எல்லைக் கற்களாக அடையாளமிட்டு வையுங்கள். “சட்டத்திற்கு எதிராக ஏதாவது குற்றத்தைச் செய்த நபரை, ஒரே ஒரு சாட்சியை வைத்து ‘அவன் குற்றவாளி’ என்று நிரூபிக்காதீர்கள். அவன் அக்குற்றத்தைச் செய்தானா இல்லையா என்பதை, இரண்டு அல்லது மூன்று சாட்சிகளை வைத்து நிரூபிக்க வேண்டும். “ஒருவன் குற்றத்தைச் செய்தான் என்று மற்றொருவன் அவன் மேல் பொய் சொல்லக்கூடும். பின், அவ்விருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று நீதியைப் பெற, அங்கு பணியில் இருக்கும் ஆசாரியர் மற்றும் நீதிபதிகளிடம் நிற்கவேண்டும். நீதிபதிகள், நன்றாக விசாரிப்பதன் மூலம் அந்த நபருக்கு எதிராக பொய்சாட்சி கூறியதாகக் கண்டறிந்தால், அவன் பொய்சாட்சி என்று நிரூபிக்கப்பட்டால், நீங்கள் அவனைத் தண்டிக்கவேண்டும். அவன் மற்றவர்களுக்குச் செய்ய விரும்பியதையே நீங்கள் அவனுக்கு செய்யவேண்டும். இந்த வித மாக, இந்தத் தீமையை உங்கள் சமுதாயத்திலிருந்து அகற்றிவிட வேண்டும். மற்ற ஜனங்கள் அனைவரும் இதைக் கேட்டும் கண்டும் பயப்படுவார்கள். அதுமட்டுமின்றி, மீண்டும் இத்தகைய தீயச் செயலைச் செய்யாதிருப்பார்கள். “குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் தண்டனைகளும் கடுமையாக இருக்கவேண்டும். ஒருவன் செய்த குற்றத்திற்காக அவனைத் தண்டிக்கின்றபோது, அதற்காக நீங்கள் வருத்தம் கொள்ளாதீர்கள். ஒருவன் ஒரு உயிரை எடுத்தான் என்றால் அவன் கண்டிப்பாக அவனது உயிரை இழப்பான். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், என்பதே சட்டமாகும்.
உபாகமம் 19:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப்பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது. நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய். கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுதந்தரிக்கப்பண்ணப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டுபண்ணக்கடவாய். கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே. ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால், இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில் கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின்தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை. இதினிமித்தம் மூன்று பட்டணங்களை உனக்காகப் பிரித்துவைக்கக்கடவாய் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து, உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய். ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்குப் பதிவிருந்து, அவனுக்கு விரோதமாய் எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில், அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அங்கேயிருந்து அவனைக் கொண்டுவரும்படி செய்து, அவன் சாகும்படிக்கு அவனை இரத்தப்பழி வாங்குகிறவன் கையில் ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்கக்கடவாய்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக. ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும். ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சி சொல்ல எழும்பினால், வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக. அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணை செய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால், அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாய்த் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள். உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.