உபாகமம் 18:9-13
உபாகமம் 18:9-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள் போய்ச்சேர்ந்ததும், அங்கிருக்கும் நாடுகளின் அருவருப்பான நடைமுறைகளைக் கைக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டாம். உங்களில் யாராவது தனது மகனையோ, மகளையோ தீக்கடக்கப் பண்ணக்கூடாது. குறிபார்ப்பவனோ, மாந்திரீகம் செய்பவனோ, சகுனங்களுக்கு வியாக்கியானம் சொல்லுகிறவனோ, சூனியம் செய்பவனோ உங்களுக்குள் இருக்கக்கூடாது. மந்திரித்துக் கட்டுபவனோ, ஆவி உலகுடன் தொடர்புகொள்பவனோ, செத்தவர்களிடத்தில் ஆலோசனை கேட்பவனோ உங்களுக்குள் இருக்கக்கூடாது. இப்படிப்பட்டவைகளைச் செய்கிற எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன். இப்படி அருவருப்பான செயல்களின் காரணமாகவே அந்த நாடுகளை உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாகத் துரத்துவார். உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்கவேண்டும்.
உபாகமம் 18:9-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேரும்போது, அந்த மக்கள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம். தன் மகனையாவது தன் மகளையாவது தகனபலியாகத் தீயில் பலியிடுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், ஜோதிடம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், வசியக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்பான செயலின் காரணமாக உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ உத்தமனாயிருப்பாயாக.
உபாகமம் 18:9-13 பரிசுத்த பைபிள் (TAERV)
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்திற்குள் நீங்கள் போய்ச் சேரும்போது, மற்ற இனத்தவர்கள் செய்கின்ற அருவருக்கத்தக்கச் செயல்களை நீங்களும் செய்யக் கற்றுக்கொள்ளாதீர்கள். உங்கள் குமாரர்களையோ, குமாரத்திகளையோ பலிபீடங்களின் தீயிலிட்டு பலியிடக்கூடாது. குறி சொல்கிறவன், நாள் பார்ப்பவன், மை போட்டு பார்ப்பவன், மந்திரவாதி, அல்லது சூன்யக்காரன் ஆகியவர்களுடன் சென்று அவர்களது வித்தைகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காதீர்கள். மற்றவர்கள் மீது மாயவித்தை வித்தைகளைச் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள். உங்களில் யாரையும் மரித்தவர்களுடன் அல்லது தீய ஆவிகளுடன் குறி கேட்க அனுமதிக்காதீர்கள். அதுமட்டுமின்றி உங்களில் யாரும் மரித்த எவரிடமும் பேச முயற்சிக்கக் கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்கின்ற ஜனங்களை வெறுக்கின்றார். அதனால்தான் உங்களுக்காக அந்த இன ஜனங்களை இந்த தேசத்தை விட்டே துரத்துகின்றார். நீங்கள் அனைவரும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.
உபாகமம் 18:9-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும்போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம். தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம்பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.