உபாகமம் 17:1-20
உபாகமம் 17:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
குறைபாடுடைய அல்லது பழுதுடைய மாட்டையோ, செம்மறியாட்டையோ உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பலியிடவேண்டாம். ஏனெனில், அது அவருக்கு அருவருப்பாயிருக்கும். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் பட்டணங்களில் ஒன்றில் உங்கள் மத்தியில் வாழும் ஒரு ஆணோ, பெண்ணோ உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, அவரின் பார்வையில் தீமையானதைச் செய்வதாகக் காணப்படக்கூடும். அல்லது எனது கட்டளைக்கு முரணான வேறு தெய்வங்களையோ, சூரியனையோ, சந்திரனையோ, வானத்து நட்சத்திரங்களையோ வணங்கி, அவற்றை வழிபடக்கூடும். அது உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படும்பொழுது, நீங்கள் அதை முற்றிலும் விசாரணை செய்யவேண்டும். அந்த அருவருப்பான செயல் உண்மையாயிருந்து அது இஸ்ரயேலில் செய்யப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், அந்த தீமையான செயலைச் செய்த ஆணையோ, பெண்ணையோ உங்கள் பட்டணவாசலுக்குக் கொண்டுபோய், அவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். இரண்டு அல்லது மூன்றுபேரின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே ஒருவன் கொல்லப்படவேண்டும். ஒரே சாட்சியின் அடிப்படையில் ஒருவனும் கொல்லப்படக்கூடாது. சாட்சிகளின் கைகளே அவனைக் கொலைசெய்வதில் முதலாவதாக இருக்கவேண்டும். அதன்பின்னரே மற்ற எல்லா மக்களுடைய கைகளும் நீட்டப்பட வேண்டும். இப்படியாக நீங்கள் உங்கள் நடுவிலிருந்து தீமையை அகற்றவேண்டும். நீங்கள் நியாயந்தீர்க்கக் கடினமான வழக்குகள் உங்கள் நீதிமன்றங்களுக்கு வந்தால், அவை இரத்தம் சிந்துதலோ, சட்ட விவகாரமோ, தாக்குதலோ எதுவாயிருந்தாலும், அவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திற்குக் கொண்டுபோங்கள். அங்கே லேவியரான ஆசாரியர்களிடமும், அவ்வேளையில் கடமைசெய்யும் நீதிபதியினிடமும்போய் அவர்களிடம் விசாரியுங்கள். அவர்கள் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள். யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே அவர்கள் தெரிவிக்கிற தீர்ப்பின்படியே நீங்கள் செயல்படவேண்டும். செய்யும்படி அவர்கள் உங்களுக்குப் பணிக்கும் ஒவ்வொன்றையும் செய்யக் கவனமாயிருங்கள். அவர்கள் உங்களுக்குப் போதிக்கிற சட்டத்தின்படியேயும், அவர்கள் உங்களுக்குக் கொடுக்கிற தீர்மானங்களின்படியேயும் செயற்படுங்கள். அவர்கள் சொல்வதிலிருந்து வலதுபக்கமோ, இடது பக்கமோ விலகவேண்டாம். நீதிபதியையோ, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு ஊழியம் செய்யும் ஆசாரியனையோ அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும். இப்படியாக நீங்கள் இஸ்ரயேலில் இருந்து தீமையை அகற்றவேண்டும். அப்பொழுது எல்லா மக்களும் இதைக் கேள்விப்பட்டுப் பயப்படுவார்கள். இனிமேலும் அவ்வாறு அவர்களை அவமதிக்கமாட்டார்கள். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள்போய், அதை உரிமையாக்கிக்கொண்டு அதில் குடியிருக்கும்பொழுது, “எங்களைச் சூழ இருக்கிற மற்ற நாடுகளைப்போல் எங்களுக்கு மேலாக ஒரு அரசனை நியமிப்போம்” என்பீர்கள். அப்பொழுது, நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் ஒருவனையே உங்களுக்குமேல் அரசனாக நியமிக்கக் கவனமாயிருங்கள். அவன் உங்கள் சகோதரருள் ஒருவனாக இருக்கவேண்டும். உங்கள் சகோதர இஸ்ரயேலன் அல்லாத ஒரு அந்நியனை உங்களுக்கு மேலாக நியமிக்கவேண்டாம். மேலும், அவன் தனக்கென்று அதிக எண்ணிக்கையான குதிரைகளைச் சொந்தமாக்கிக்கொள்ளக்கூடாது. அரசன் அதிகமான குதிரைகளைப் பெறுவதற்கு மக்களைத் திரும்பவும் எகிப்திற்கு அனுப்பவும்கூடாது. ஏனெனில், “நீங்கள் அந்த வழியாய்த் திரும்பவும் போகக்கூடாது” என்று யெகோவா உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். அரசன் தனக்கு அநேக மனைவிகளை வைத்திருக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அவனுடைய இருதயம் வழிவிலகிப்போகும். அவன் பெருந்தொகையான தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்துவைக்கவும்கூடாது. அவன் தன் அரசுக்குரிய அரியணையைப் பொறுப்பேற்கும்போது, லேவியரான ஆசாரியர்களிடம் இருக்கும் சட்டத்திலிருந்து, ஒரு பிரதியை தனக்காக ஒரு புத்தகச்சுருளில் எழுதிக்கொள்ளவேண்டும். அப்பிரதி அவனிடம் இருக்கவேண்டும். அவன் தன் வாழ்நாளெல்லாம் அதை வாசிக்கவேண்டும். அப்பொழுது அவன் தன் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயபக்தியாய் இருக்கவும், இந்த சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், விதிமுறைகளையும் கவனமாய்க் கைக்கொள்ளவும் கற்றுக்கொள்வான். அவன் தன் சகோதரரைவிடத் தான் மேலானவன் என்று எண்ணாமலும், நீதிச்சட்டத்திலிருந்து வலதுபக்கமோ, இடது பக்கமோ விலகாமலும் இருப்பான். அப்பொழுது அவனும், அவன் சந்ததிகளும் இஸ்ரயேலில் உள்ள அவனுடைய அரசில் நீண்டகாலமாக ஆட்சிசெய்வார்கள்.
உபாகமம் 17:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“பழுதும் அவலட்சணமுமான யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பாக இருக்கும். “உன் தேவனாகிய யெகோவாவின் கண்களுக்கு முன்பாக எந்த ஆணாவது பெண்ணாவது உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமம்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி, நான் விலக்கியிருக்கிற வேறே தெய்வங்களையாவது, சந்திரன் சூரியன் முதலான வானசேனைகளையாவது பணிந்து, அவைகளை வணங்குகிறதாகக் காணப்பட்டால், அது உன் காதுகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாக விசாரிக்கவேண்டும்; அது உண்மையென்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் காண்பாயானால், அந்த அக்கிரமத்தைச்செய்த ஆணையும் பெண்ணையும் உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறிவாயாக. சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவனைக் கொலைசெய்யக்கூடாது. அவனைக் கொலை செய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா மக்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. “உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக்குறித்தும், உரிமைகளைக்குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும், வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு கடினமாக இருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய யெகோவா தெரிந்தெடுத்த இடத்திற்குப்போய், லேவியர்களான ஆசாரியர்களிடத்திலும், அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதிகளிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள். யெகோவா தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்குக் கட்டளையிடுகிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக. அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய். அங்கே உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் பிடிவாதம் செய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக. அப்பொழுது மக்கள் எல்லோரும் அதைக் கேட்டு, பயந்து, இனி பிடிவாதம் செய்யாமலிருப்பார்கள். “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல மக்களையும்போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்; உன் தேவனாகிய யெகோவா தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரர்களுக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது. அவன் அநேக குதிரைகளைச் சம்பாதிக்காமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படி மக்களைத் திரும்ப எகிப்திற்குப் போகச்செய்யாமலும் இருப்பானாக; இனி அந்த வழியாக நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று யெகோவா உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே. அவனுடைய இருதயம் பின்வாங்கிப் போகாமலிருக்க அவன் அநேகம் மனைவிகளைத் திருமணம் செய்யவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாகப் பெருகச்செய்யவும் வேண்டாம். அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்கள்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்வதற்கு, அவன் லேவியர்களாகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண புத்தகத்தைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் உயிருள்ள நாட்களெல்லாம் அதை வாசிக்கவேண்டும்; இப்படிச் செய்வதினால், தானும் தன் மகன்களும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்ஜியத்திலே நீடித்து வாழ்வார்கள்.
உபாகமம் 17:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)
“குறையுள்ள அல்லது ஏதேனும் ஊனமுற்ற மாட்டையோ, ஆட்டையோ, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி கொடுக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை வெறுக்கிறார்! “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற நகரங்கள் ஏதேனும் ஒன்றில் அக்கிரமமான செயல் கர்த்தருக்கு எதிராக நடந்ததைக்குறித்து நீங்கள் கேள்விப்படலாம். கர்த்தருக்கு எதிராக அந்த அக்கிரமச் செயலை உங்களைச் சார்ந்த ஆணோ, அல்லது பெண்ணோ செய்திருக்கலாம். கர்த்தருடைய உடன்படிக்கையை மீறி அவர்கள் நடந்திருப்பார்கள். அதாவது, அவர்கள் அந்நிய தெய்வங்களையோ அல்லது சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற வான சேனைகளையோ தொழுதுகொள்வதை நீங்கள் கேள்விப்பட்டால், அவைகளெல்லாம் நான் உங்களுக்கு வழங்கிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான செயல்களாகும். இது போன்ற தீயசெய்திகளை நீங்கள் கேள்விப்பட்டால், நீங்கள் அதைக் குறித்து விசாரிக்க வேண்டும். நீங்கள் அதை நன்றாகத் தீர ஆராய்ந்து அது உண்மையென்று கண்டறிந்தால், இஸ்ரவேலில் இப்படிப்பட்ட ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி நடந்தது உண்மையாகும்போது, நீங்கள் அந்தத் தீயசெயலைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் அத்தகைய தீயச் செயலைச் செய்த அந்த ஆணையோ, அல்லது பெண்ணையோ, வெளியே இழுத்துவந்து நகர எல்லையின் பொது இடத்தில் கற்களால் அடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள். ஆனால் ஒரே ஒரு சாட்சியின் கூற்றைக் கேட்டு நீங்கள் அவனுக்குக் கொலைத் தண்டனையை கொடுத்து விடாதீர்கள். இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் அவன் இந்த தீயச் செயல்களை செய்தது உண்மைதான் என்று கூறினால், பின் நீங்கள் அந்தத் துரோகியை கொன்றுவிடலாம். தீமை செய்தவன் கொல்லப்படும்படி சாட்சிகளே முதலில் அவன்மீது கற்களை எறியவேண்டும். பின்னரே மற்ற ஜனங்கள் அனைவரும் அவன் மரிக்கும்வரை கற்களால் அடிக்க வேண்டும். இதன் மூலமே நீங்கள் உங்களிடமிருந்து அந்தத் தீமையை விலக்கிட முடியும். “உங்கள் நீதிமன்றங்களால் தீர்ப்புக்கூற முடியாமல் போகும் அளவிற்கு சில பிரச்சினைகள் உங்களிடம் இருக்கலாம், அவை கொலைக் குற்றமாகவோ, அல்லது இரண்டு நபர்களின் வாக்கு வாதங்களோ, அல்லது சண்டையில் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த சேதங்களையோ குறித்த வழக்குகளாக இருக்கலாம். உங்கள் ஊர்களிலுள்ள உங்களது நீதிபதிகளால் இத்தகைய வழக்குகளுக்குச் சரியான தீர்ப்பைக் கூற இயலாமல் இருந்தால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் சிறப்பாக தேர்ந்தெடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டும். லேவிக் கோத்திரத்திலிருந்து வந்த ஆசாரியர்கள் அங்கே இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் சென்று அன்றைய பொறுப்பில் இருக்கின்ற நியாயாதிபதியினிடத்தில் அந்தப் பிரச்சினைக்கான முடிவுகளைப் பெறலாம். கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்தில் இருக்கின்ற அவர்கள், உங்களுக்கு அளிக்கின்ற தீப்புகளுக்கு இணங்கி, அவர்கள் உங்களுக்கு விதிக்கின்றபடி செய்யக் கவனமாய் இருப்பீர்களாக. நீங்கள் அவர்கள் கூறும் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அவர்கள் விதிக்கின்றபடியே அவர்களது நியாயத்தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் சொன்ன எதையும் மாற்றாமல் அப்படியே செய்யவேண்டும்! “அச்சமயத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஆசாரியனின் வார்த்தைகளையோ, அல்லது நீதிபதியின் தீர்ப்பையோ ஏற்காமலும், கீழ்ப்படியாமலும் இருக்கிறவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும். அவன் கண்டிப்பாக மரிக்க வேண்டும். இஸ்ரவேலில் இருந்து அந்தத் தீயவனை நீங்கள் அகற்றிவிடவேண்டும். இந்தத் தண்டனையைக் கேட்கும் அனைத்து ஜனங்களும் அதைத் கண்டு பயந்து இதுபோன்ற தவறினைச் செய்யாதிருப்பார்கள். “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப்போல நாங்களும் எங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று கூறுவீர்கள் என்றால், அவ்வாறு நடக்க வேண்டுமென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் ராஜாவையே நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் ராஜாவாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜனங்கள் அல்லாத அந்நியனை நீங்கள் ராஜாவாக்க கூடாது. அந்த ராஜா தனக்காக அதிகமான குதிரைகளை வைத்துக்கொள்ளக் கூடாது. அதுமட்டுமின்றி அதிகமான குதிரைகளுக்காக ஜனங்களை எகிப்திற்கு அனுப்பக் கூடாது. ஏனென்றால், ‘நீங்கள் திரும்பவும் அந்த வழியாக போகவே வேண்டாம்’ என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லி உள்ளார். மேலும், ராஜா அதிகமான மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், அது அவனை கர்த்தரிடமிருந்து வேறு திசைக்கு அழைத்துச் சென்றுவிடும். மேலும். அந்த ராஜா அவனுக்காகப் பொன்னையும், வெள்ளியையும், மிகுதியாக சேர்த்துக்கொள்ளக் கூடாது. “ராஜா தன் அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும்முன் தனக்கான சட்டங்களைப் புத்தகமாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். அவன் அந்த நீதி புத்தகத்தை, லேவியரும் ஆசாரியர்களும் வைத்துள்ள புத்தகத்திலிருந்து உருவாக்கி தன்னிடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ராஜா அந்த புத்தகத்தை தன்னிடம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அந்தப் புத்தகத்தைப் படித்தறிய வேண்டும். ஏனென்றால், அவனது தேவனாகிய கர்த்தருக்கு மதிப்பளிக்க வேண்டும். அதிலுள்ள எல்லா சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் ராஜா கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். ராஜா தன் சகோதரர்களாகிய ஜனங்களைவிட தான் மேன்மையானவன் என்று எண்ணிவிடக் கூடாது. மேலும் அவன் ஒரு போதும் இந்த சட்டங்களிலிருந்து விலகிவிடக்கூடாது. ஆனால் அவன் இவற்றைச் சரியானபடி முழுமையாகப் பின்பற்றினால், பின் அந்த ராஜாவும் அவன் சந்ததியினரும் நீண்ட காலம் இஸ்ரவேல் நாட்டை ஆளலாம்.
உபாகமம் 17:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பழுதும் அவலட்சணமுமுள்ள யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு அவருவருப்பாயிருக்கும். உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி, நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால், அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலை செய்யப்படலாகாது. அவனைக் கொலை செய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா ஜனங்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக்குறித்தும், வியாச்சியங்களைக்குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும், வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப்போய், லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள். கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்கு விதிக்கிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக. அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய். அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் அதைக் கேட்டு, பயந்து, இனி இடும்பு செய்யாதிருப்பார்கள். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்; உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது. அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே. அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம். அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு, அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்.