உபாகமம் 16:1-22

உபாகமம் 16:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆபீப் மாதத்தில், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுங்கள். ஏனெனில் ஆபீப் மாதத்தில் ஒரு இரவில் அவர் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். நீங்கள் உங்கள் ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ ஒரு மிருகத்தை எடுத்து, அதை உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவாகப் பலியிடுங்கள். அதை யெகோவா தமது பெயர் விளங்குவதற்காக தாம் தெரிந்துகொள்ளும் இடத்திலே பலியிடுங்கள். அதை புளிப்பூட்டப்பட்ட அப்பத்தோடு சாப்பிடவேண்டாம், ஏழுநாட்களுக்கு உபத்திரவத்தின் அப்பமான புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள், நீங்கள் எகிப்திலிருந்து அவசரமாய் வெளியேறினீர்களே. எனவே உங்கள் வாழ்நாளெல்லாம் நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த வேளையை நினைவுகூருங்கள். அந்த ஏழுநாளளவும் உங்கள் நாடு முழுவதிலும் புளிப்பூட்டும் பதார்த்தம் உங்களுக்குள் இருக்கக்கூடாது. முதல்நாள் மாலையில் பலியிட்ட இறைச்சியில் எதையாகிலும் விடியும்மட்டும் வைத்திருக்கவும்கூடாது. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் எந்த ஒரு பட்டணத்திலாவது பஸ்காவை பலியிடக்கூடாது. உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொண்ட இடத்திலேயே அதைப் பலியிடவேண்டும். நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த நாளில் சூரியன் மறையும் நேரமான அந்த மாலைவேளையில் பஸ்காவை அங்கே பலியிடவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் பலியை நெருப்பில் வாட்டிச் சாப்பிடுங்கள். காலையில் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள். தொடர்ந்து ஆறு நாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள். ஏழாம்நாளில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்த நாளில் எந்தவொரு வேலையையும் செய்யவேண்டாம். அறுவடைக்கு ஆயத்தமான கதிரில் அரிவாளை வைக்கத்தொடங்கும் நாள் முதல் ஏழு வாரங்களை எண்ணுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதத்திற்குத் தக்கபடியே நீங்கள் சுயவிருப்பக் காணிக்கையைச் செலுத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வாரங்களின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். அவருடைய பெயருக்கான உறைவிடமாக அவர் தெரிந்துகொள்ளும் இடத்தில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாகக் களிகூருங்கள். நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், உங்கள் பட்டணங்களிலுள்ள லேவியரும், உங்கள் மத்தியில் வாழும் அந்நியரும், தந்தையற்றவர்களும், விதவைகளுமான எல்லோரும் களிகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமையாய் இருந்ததை நினைவுகூர்ந்து, இந்த விதிமுறைகளைக் கவனமாய்ப் பின்பற்றுங்கள். நீங்கள் உங்கள் சூடடிக்கும் களத்திலிருந்தும், திராட்சை ஆலையிலிருந்தும் அவற்றின் பலனைச் சேர்த்தபின், ஏழுநாட்களுக்குக் கூடாரப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நீங்கள் இந்த பண்டிகையில் மகிழ்ச்சியாயிருங்கள். நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும் வேலைக்காரரும், வேலைக்காரிகளும், உங்கள் பட்டணங்களில் வாழ்கின்ற லேவியர், அந்நியர், தந்தையற்றவர்கள், விதவைகள் ஆகிய எல்லோருமே மகிழ்ந்திருங்கள். யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு ஏழு நாட்கள் இந்தப் பண்டிகையை கொண்டாடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எல்லா அறுவடையிலும், உங்கள் கையின் வேலையிலும் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் மகிழ்ச்சியும் நிறைவாயிருக்கும். உங்கள் எல்லா ஆண்களும், உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் வருடத்திற்கு மூன்றுமுறை யெகோவாவுக்கு முன்பாக வரவேண்டும். புளிப்பில்லாத அப்பம் சாப்பிடும் பண்டிகை, வாரங்களின் பண்டிகை, கூடாரப்பண்டிகை ஆகிய இந்த மூன்று பண்டிகைகளுக்கும் இவ்வாறு வரவேண்டும். யெகோவாவுக்கு முன்பாக ஒருவரும் வெறுங்கையுடன் வரக்கூடாது. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கும் விதத்திற்கேற்றபடி ஒவ்வொருவனும் தனது கொடையைக் கொண்டுவர வேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பட்டணங்களிலும் உங்களுடைய கோத்திரங்கள் ஒவ்வொன்றுக்குமென நீதிபதிகளையும், அதிகாரிகளையும் நியமியுங்கள். அவர்கள் மக்களுக்கு நியாயமாகத் தீர்ப்புச்செய்யவேண்டும். நீதியைப் புரட்டவேண்டாம். பட்சபாதம் காட்டவேண்டாம். இலஞ்சம் வாங்கவேண்டாம். இலஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களைக் குருடாக்கி, நீதியானவர்களின் வார்த்தைகளைத் தாறுமாறாக்குகிறது. நீதியைப் பின்பற்றுங்கள்; நீதியை மட்டுமே பின்பற்றுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்ந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கட்டும் பலிபீடத்திற்கு அருகே மரத்தாலான அசேரா விக்கிரகக் கம்பத்தை நாட்டவேண்டாம், அங்கு புனிதக் கல் எதையும் நிறுத்தவேண்டாம், இவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவா வெறுக்கிறார்.

உபாகமம் 16:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“ஆபீப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கக்கடவாய்; ஆபீப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார். யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்தில், உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக. நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் நினைக்கும்படி, பஸ்கா பலியுடனே புளிப்புள்ள அப்பம் சாப்பிடாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாட்கள் வரைக்கும் சாப்பிடுவாயாக; நீ விரைவாக எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும். ஏழுநாட்களளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படக்கூடாது; நீ முதல் நாள் மாலையில் செலுத்திய பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இரவுமுழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்கவேண்டாம். உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம். உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும் இடத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் மறையும்போது பஸ்காவை அடித்து, உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொண்ட இடத்திலே, அதைப் பொரித்துச் சாப்பிட்டு, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக. நீ ஆறு நாட்களும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அனுசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம். “ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் துவங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும். அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று ஆசரித்து, உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததற்குத்தக்கதாக உன்னால் முடிந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி, உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு, நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய். “நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாட்கள் ஆசரித்து, உன் பண்டிகையில் நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்; உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லா செயலிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்தபடியால், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஏழு நாட்கள் பண்டிகையை ஆசரித்து சந்தோஷமாயிருப்பாயாக. வருடத்தில் மூன்றுமுறை புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள். ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன். “உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள். நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; பாரபட்சம் பார்க்காமலும், லஞ்சம் வாங்காமலும் இருப்பாயாக; லஞ்சம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும். நீ பிழைத்து, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நீதியையே பின்பற்றுவாயாக. “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கும் பலிபீடத்திற்கு அருகில் எந்த தோப்பையும் உண்டாக்கவேண்டாம்; எந்த சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய யெகோவா அதை வெறுக்கிறார்.

உபாகமம் 16:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஆபிப் மாதம் வருவதைக் கவனித்து, அந்த மாதத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பஸ்காவை நீங்கள் கொண்டாட வேண்டும். ஏனென்றால், ஆபிப் மாதத்திலேயே இரவு நேரத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். நீங்கள் எல்லோரும் கர்த்தர் தமக்குச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்திற்கு, அந்தக் கொண்டாட்ட தினத்தில் செல்லவேண்டும். அங்கே, உங்கள் கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடு, மாடுகளைப் பலியிடுவாயாக. அந்த நாளில் புளிப்புள்ள அப்பத்தை நீங்கள் உண்ணக்கூடாது. புளிப்பில்லாத அப்பங்களையே ஏழு நாட்களுக்கு உண்ண வேண்டும், இந்த அப்பங்கள் ‘துன்பத்தின் அப்பங்கள்’ என்று அழைக்கப்படும்! இவை எகிப்தில் நீங்கள் அடைந்த துன்பங்களை நினைவூட்டுவதாக இருக்கும். எவ்வளவு விரைவாக நீங்கள் அந்த தேசத்திலிருந்து வெளியேறினீர்கள் என்பதை பஸ்காதோறும் நீங்கள் உயிரோடு இருக்கின்ற நாளெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஏழு நாட்களுக்கு உங்களுடைய தேசத்தில் யார் வீட்டிலும் பளிப்புள்ள அப்பங்கள் இருக்ககூடாது. நீங்கள் முதல்நாள் மாலையில் பலியிட்ட இறைச்சியில் எதையும் மறுநாள் காலைவரை மீதி வைக்காமல் உண்டுவிட வேண்டும். “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்கிய எந்த நகரத்திலும் நீங்கள் பஸ்காவைப் பலியிடக்கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் தமக்கென்று சிறப்பாக தேர்ந்தெடுத்த இடத்திலேயே பஸ்காவைப் பலியிடவேண்டும். அங்கே நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சூரியன் மறையும் மாலைப் பொழுதில் பஸ்காவைப் பலியிடவேண்டும். அந்த நாள் உங்களுக்கு விடுமுறை நாள். உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்திலேயே பஸ்கா இறைச்சியை சமைத்து அன்று இரவே உண்ணவேண்டும். பின் மறுநாள் விடியற் காலையில் நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுங்கள். ஆறு நாட்கள் புளிப்பில்லாத அப்பத்தையே நீங்கள் உண்ண வேண்டும். ஏழாவது நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. அந்த நாளில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு நீங்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும். “உங்களது அறுவடைக்காலம் துவங்குவதிலிருந்து ஏழு வாரங்களை எண்ணிக்கொள்ளுங்கள். பின் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கான வாரங்களின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். நீங்கள் தேவனுக்குக் கொடுக்க விரும்புகின்ற சிறப்பான அன்பளிப்பைக் கொண்டு வருவதின் மூலம் இதைச் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை எந்த அளவிற்கு ஆசீர்வதித்தாரோ அதற்கேற்ப உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்துக்குச் செல்லுங்கள். நீஙகளும் உங்கள் பிள்ளைகளும் சேர்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதானத்தில் மகிழ்ச்சியாய் இருங்கள். அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் குமாரர்கள், குமாரத்திகள், உங்களது வேலையாட்கள், லேவியர்கள், உங்களிடத்தில் இருக்கின்ற அந்நியர்கள், அநாதைகள், உங்கள் நகரங்களில் வாழும் விதவைகள், ஆகிய எல்லோரையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். எகிப்தில் நீங்கள் அடிமைகளாக இருந்ததை எண்ணிப் பாருங்கள். ஆகையால் இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் “நீங்கள், உங்கள் தானியக் களத்தின் பலனையும், உங்கள் திராட்சைரச ஆலைகளின் பலனையும் சேர்த்தபின்பு, ஏழு நாட்கள் உங்கள் அடைக்கலக் கூடாரப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும். இந்தப் பண்டிகையை உங்களுக்குள் மகிழ்வாகக் கொண்டாடுங்கள். நீங்கள், உங்கள் குமாரர்கள், உங்கள் குமாரத்திகள், உங்கள் வேலையாட்கள், உங்களை சார்ந்த பகுதியில் வசிக்கும் லேவியர்கள், அந்நியர்கள், அநாதைகள், உங்கள் நகரங்களில் வாழும் விதவைகள், எல்லோருமாகச் சேர்ந்து கொண்டாடுங்கள், இந்தப் பண்டிகையை உங்கள் கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏழு நாட்கள் கொண்டாடி மகிழுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செலுத்தும்படி இதைச் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது விளைச்சல்களையும், நீங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் ஆசீர்வதித்துள்ளார். ஆகவே நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்களாக! “வருடத்திற்கு மூன்றுமுறை உங்களது ஆண் ஜனங்கள் அனைவரும் தவறாது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் கூடவேண்டும். அவர்கள் அனைவரும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்கும், வாரங்களின் பண்டிகைக்கும், அடைக்கல கூடாரங்களின் பண்டிகைக்கும் கண்டிப்பாக வரவேண்டும். ஒவ்வொருவரும் வரும் பொழுது, கர்த்தருக்குரிய அன்பளிப்புகளை எடுத்துவர வேண்டும். ஒவ்வொருவரும் தன் தகுதிக்கு ஏற்றவாறு காணிக்கையைச் செலுத்தவேண்டும். கர்த்தர் உங்களை எந்த அளவிற்கு ஆசீர்வதித்தாரோ அதற்கேற்றவாறு உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் அனைத்துப் பட்டணங்களிலும் நீங்கள் நீதிபதிகளையும், தலைவர்களையும் தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு கோத்திரமும் இவ்வாறு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும். நீங்கள் அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும். நீங்கள் மற்ற ஜனங்களை மீறி சிலரை மாத்திரம் ஆதரித்துப் பேசாதீர்கள். நியாயத்தில் உங்கள் மனது புரளாதபடி நீங்கள் லஞ்சம் வாங்காமல் இருங்கள். பணமானது ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நல்லவன் சொல்லக் கூடிய சரியான தீர்ப்பை மாற்றிவிடும். நல்லவற்றையும், நேர்மையானவற்றையுமே நீங்கள் செய்ய வேண்டும்! நீங்கள் எப்போதும் நல்லவராக, நேர்மையானவராக இருப்பதற்குப் பாடுபட வேண்டும்! பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தில் வாழ்வையும், சுதந்திரத்தையும் பெறுவீர்கள். “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தின் அருகில் அஷெரா தேவதைக்கென்று எந்த ஸ்தம்பத்தையும் வைக்கக் கூடாது. அதுமட்டுமின்றி பொய்யான தெய்வங்களைத் தொழுதுகொள்வதற்கான சிற்ப கற்களையும் அங்கே வைக்ககூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இவற்றையெல்லாம் வெறுக்கின்றார்.

உபாகமம் 16:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக. நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப் பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாள் வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும். ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல் நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்கவேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திலே, அதைப் பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக. நீ ஆறு நாளும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம். ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும். அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு, நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய். நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாள் ஆசரித்து, உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்; உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழு நாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக. வருஷத்தில் மூன்று தரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள். ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன். உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள். நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம்பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும். நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக. நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்கவேண்டாம்; யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.