உபாகமம் 15:1-18

உபாகமம் 15:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக. விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன். அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது. எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்., உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக. விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் சதோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடுவாயாக. அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக. நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவு கூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன். ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில், நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய். அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 15:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏழாம் வருடத்தின் முடிவிலே கடன்களை ரத்துச்செய்யுங்கள். நீங்கள் செய்யவேண்டிய விதம் இதுவே: கடன்களை ரத்துச்செய்வதற்கான யெகோவாவின் வேளை அறிவிக்கப்பட்டிருப்பதால், தன் சகோதர இஸ்ரயேலனுக்கு கடன்கொடுத்த எவனும், அந்தக்கடனை தள்ளுபடிசெய்யவேண்டும். அவன் அந்த இஸ்ரயேலனிடமிருந்தோ அல்லது சகோதரனிடமிருந்தோ கடனைத் திருப்பித்தரும்படி கேட்கக்கூடாது. அந்நியனிடமிருந்து கடனைத் தரும்படி நீங்கள் கேட்கலாம். ஆனால் உங்கள் சகோதரன் உங்களுக்குத் தரவேண்டிய கடனை நீங்கள் ரத்துச்செய்யவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டிலே, உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார். அதனால் உங்கள் மத்தியில் ஏழைகள் இருக்கக்கூடாது. நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முற்றிலும் கீழ்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் இந்த எல்லா கட்டளைகளையும் பின்பற்றக் கவனமாய் இருந்தால்மட்டுமே, அப்படி ஆசீர்வதிப்பார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குக் கொடுத்தபடி உங்களை ஆசீர்வதிப்பார். அதனால் நீங்கள் பல நாடுகளுக்குக் கடன்கொடுப்பீர்கள். நீங்களோ ஒருவரிடமிருந்தும் கடன் வாங்கமாட்டீர்கள். நீங்கள் நாடுகளை ஆளுவீர்கள். ஆனால் உங்களை ஒருவரும் ஆளமாட்டார்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள பட்டணங்கள் ஒன்றில், உங்கள் சகோதரருக்குள் ஏழை ஒருவன் இருந்தால், அந்த ஏழைச் சகோதரனிடத்தில் இருதயக் கடினத்துடனோ, சுயதன்மையுடனோ நடந்துகொள்ளாதீர்கள். அவனுடைய தேவைகளுக்கேற்றபடி தாராள மனதுடன் போதிய அளவு கடன்கொடுங்கள். விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதனால் தேவையுள்ள சகோதரனுக்குக் கரிசனை காட்டாமலும், ஒன்றும் கொடுக்காமலும் விடவேண்டாம். அப்படியான கொடிய எண்ணம் உங்களுக்கு வராதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில், அவன் யெகோவாவிடம் உங்களுக்கு எதிராக முறையிடும்பொழுது நீங்கள் பாவம் செய்த குற்றவாளிகளாகக் கணிக்கப்படுவீர்கள். மனம்கோணாமல் அவனுக்குத் தாராளமாய்க் கொடுங்கள். அப்பொழுது இதன் நிமித்தம் இறைவனாகிய யெகோவா, உங்கள் முயற்சிகள் யாவற்றையும் நீங்கள் கையிட்டுசெய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நாட்டிலே எக்காலத்திலும் ஏழைகள் இருப்பார்கள். ஆகையால் உங்கள் நாட்டிலுள்ள உங்கள் சகோதரருக்கும், ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் தாராள மனதுடன் கொடுக்கும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். உங்களைச் சேர்ந்த எபிரெய ஆணோ, பெண்ணோ தன்னை உங்களிடத்தில் விற்று, ஆறு வருடங்கள் உங்களுக்கு வேலைசெய்தால், ஏழாம் வருடம் நீங்கள் அவனை விடுதலையாக்கி போகவிடவேண்டும். அவனை விடுதலையாக்கி அனுப்பும்போது, வெறுங்கையோடு அனுப்பவேண்டாம். உங்கள் மந்தையிலும், உங்கள் சூடடிக்கும் களத்திலும், உங்கள் திராட்சை ஆலையிலும் இருந்து எடுத்துத் தாராளமாய்க் கொடுத்து அனுப்புங்கள். உங்களுடைய இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின்படி அவனுக்குக்கொடுங்கள். நீங்கள் எகிப்திலே அடிமையாய் இருந்ததையும், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை மீட்டதையும் நினைவுகூருங்கள். ஆகவேதான் நான் இன்று இந்த கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். உங்களுடைய அடிமை ஒருவன் உங்கள்மீதும், உங்கள் குடும்பத்தின்மீதும் அன்பு வைத்ததினாலும், உங்களோடு நலமாய் இருப்பதினாலும், “நான் உங்களைவிட்டுப்போக விரும்பவில்லை” என்று உங்களிடம் சொன்னால், நீங்கள் குத்தூசி ஒன்றை எடுத்து அவன் காது மடலைக் கதவோடு வைத்துக் குத்துங்கள். அதன்பின் வாழ்நாள் முழுவதும் அவன் உங்களுக்கு அடிமையாயிருப்பான். அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யுங்கள். ஒரு அடிமையை விடுதலையாக்குவதை கஷ்டமான செயலாக எண்ணவேண்டாம். ஏனெனில் அவன் ஆறு வருடங்களில் செய்த வேலை கூலி வேலைசெய்யும் ஒருவனைவிட இருமடங்கு மதிப்புடையது. உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் செய்யும் யாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 15:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“ஏழாம் வருடத்தின் முடிவிலே விடுதலைசெய்வாயாக. விடுதலையின் விபரமாவது: மற்றவனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், யெகோவா நியமித்த விடுதலை கூறப்பட்டதால், அந்தக் கடனை மற்றவனிடத்திலாவது தன் சகோதரனிடத்திலாவது வாங்காமல் விட்டுவிடுவானாக. அந்நியனிடத்தில் நீ கடனை வசூலிக்கலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடுவதாக. எளியவன் உனக்குள் இல்லாதிருக்க இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்ய, உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்பாயானால்., உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாக கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார். உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் மக்களுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் மக்களை ஆள்வாய், உன்னையோ அவர்கள் ஆள்வதில்லை. “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரர்களில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், அவனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறந்து, அவனுடைய அவசரத்தின் காரணமாக அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக. விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதென்று அறிந்து, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடுக்காமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். அவனுக்குத் தாராளமாகக் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதன்காரணமாக உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய எல்லாக் செயல்களிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். “உன் சதோதரனாகிய எபிரெய ஆணாகிலும் பெண்ணாகிலும் உனக்கு விற்கப்பட்டால், ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்; ஏழாம் வருடத்தில் அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடுவாயாக. அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாக அனுப்பிவிடாமல், உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாகக் கொடுத்து அனுப்பிவிடுவாயாக. நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை மீட்டுக்கொண்டதையும் ஞாபகப்படுத்துவாயாக; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன். ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில், நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய். அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு வருத்தமாகக் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு இணையாக ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்தானே; இப்படி உன் தேவனாகிய யெகோவா நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 15:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஏழு ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீங்கள் செய்யவேண்டிய முறையாவது: ஒவ்வொருவரும் தான் மற்ற இஸ்ரவேலருக்குக் கடனாகக் கொடுத்த பணத்தை ரத்து செய்துவிட வேண்டும். அவன் மற்ற இஸ்ரவேல் சகோதரனிடம் அந்தப் பணத்தை திரும்ப தன்னிடம் செலுத்துமாறு கேட்கக்கூடாது. ஏனென்றால், கர்த்தர் உங்களுக்குக் கூறியதின்படி அந்தக் கடனை அவ்வாண்டிலேயே ரத்து செய்திட வேண்டும். நீங்கள் அந்நியர்களுக்குக் கொடுத்த கடனை திரும்பச் செலுத்துமாறு கேட்கலாம். ஆனால், உன் இஸ்ரவேல் சகோதரனிடம் அவ்வாறு கேட்கக்கூடாது. உங்கள் நாட்டில் ஏழை ஜனங்கள் யாரும் இருக்கக் கூடாது. ஏனென்றால், கர்த்தர் இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றார். கர்த்தர் உங்களை வெகுவாய் ஆசீர்வதிப்பார். ஆனால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால் மாத்திரம் இது நடக்கும். நான் இன்று உங்களுக்குச் சொன்ன தேவனுடைய ஒவ்வொரு கட்டளையையும் நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும். பின்பு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி உங்களை ஆசீர்வதிப்பார். அதனால், நீங்கள் பல ஜாதிகளுக்கு கடன் கொடுப்பீர்கள். ஆனால், நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்கும் அவசியம் உங்களுக்கு இருக்காது. நீங்கள் அவர்களை ஆளலாம். அவர்கள் யாரும் உங்களை ஆள இயலாது. “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும், இந்த தேசத்தில் உங்களில் யாராவது ஒருவன் ஏழை எளியவனாக இருந்தால், அவர்கள் மத்தியில் நீங்கள் யாரும் சுயநலமுள்ளவர்களாக இருந்துவிடக்கூடாது. நீங்கள் அந்த ஏழை எளியவனுக்குக் கைகொடுத்து உதவ மறுத்துவிடக் கூடாது. நீங்கள் அவனுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டவேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கடன் கொடுத்து உதவவேண்டும். “கடன்களை ரத்து செய்யும் ஏழாவது ஆண்டு சமீபமாக வந்துவிட்டது என்பதால், ஏழைக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. இப்படிப்பட்ட ஒரு கெட்ட சிந்தை உன் மனதில் நுழைய இடம் கொடாதே. தேவை உள்ள ஏழையைக் குறித்து ஒருபோதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே. அவனுக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. அப்படி நீங்கள் உதவவில்லையென்றால், அவன் உங்களுக்கு எதிராக கர்த்தரிடத்தில் முறையிடுவான். அப்போது கர்த்தர் அதை உங்கள் மேல் குற்றமாகச் சுமத்துவார். “அந்த ஏழை நபருக்குத் தாராளமாகக் கொடுங்கள். அவர்களுக்குக் கொடுப்பதை இழிவாகக் கருதாதீர்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், நீங்கள் இந்த நற்செயலைச் செய்வதால் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர் ஆசீர்வதிப்பார். தேசத்திலே ஏழை எளியவர்கள் எப்போதும் இருப்பார்கள். அதனால் தான் உன் தேசத்தில் உள்ள ஏழை எளிய சகோதரனுக்கு நீங்கள் உதவத் தயாராக இருக்கவேண்டுமென நான் கட்டளையிடுகிறேன். அவர்களுக்குத் தேவைப்படும்போது கொடுங்கள். “எபிரெய ஆணையோ, பெண்ணையோ நீங்கள் அடிமைகளாக விலை கொடுத்து வாங்கியிருந்தால், நீங்கள் அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு உங்களுக்கு சேவை செய்ய வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஏழாவது ஆண்டு அவர்களை உங்களிடமிருந்து விடுதலை பெற்றுச் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் உங்களிடமிருந்து விடுதலையாகிச் செல்லும்போது, அவர்களை ஒன்றுமில்லாதவர்களாய் அனுப்பிவிடாதீர்கள். நீங்கள் அவர்களுக்கு உங்களது ஆடு மாடுகளில் சிலவற்றையும், கொஞ்சம் தானியத்தையும், கொஞ்சம் திராட்சை ரசத்தையும் கொடுத்து அனுப்ப வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் தாராளமாகக் கொடுக்குமளவு ஏராளமான நன்மைகளால் உங்களை ஆசீர்வதித்தார். அதே போல் நீங்களும் உங்களது அடிமைகளுக்குத் தாராளமாகக் கொடுங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை அங்கிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். அதை நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளீர்கள். அதனால்தான் நான் இன்று உங்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கின்றேன். “ஆனால், உங்களது அடிமைகளுள் ஒருவன், ‘நான் உங்களை விட்டுப் பிரியமாட்டேன்’ என்று உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நேசித்து உங்களுடன் நல்லதொரு வாழ்வைப்பெற்றதனால், கூறிடலாம். நீங்கள் அந்த அடிமையை உங்கள் வீட்டுக் கதவுக்கு எதிராக நிறுத்தி, ஒரு கூர்மையான சிறிய கம்பியினால் அந்த அடிமையின் காதில் ஒரு துளை போடவேண்டும். அவன் உங்களுக்கு என்றைக்கும் அடிமையாயிருப்பான் என்பதை இது காட்டும், உங்களோடு இருக்க விரும்பும் உங்களின் பெண் அடிமைக்கும் இவ்வாறே செய்ய வேண்டும். “உங்கள் அடிமைகளை விடுதலையாக்கி அனுப்பிவிடுவதை தவறாக எண்ண வேண்டாம். ஆறு ஆண்டுகளாக ஒரு வேலையாளுக்குரிய சம்பளத்தில் பாதிக் கூலிக்கு அவர்கள் உங்களுக்கு சேவை செய்ததை எண்ணிப்பாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார்.